மில்கா சிங்: "நீங்கள் ஓடவில்லை பறந்தீர்கள்" என பாகிஸ்தான் அதிபரால் பாராட்டப்பட்டவர்

மில்கா சிங்
    • எழுதியவர், ரெஹான் ஃபைசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

91 வயது மில்கா சிங், கோவிட் தொற்றுக்குப் பிந்தைய சிக்கல் காரணமாக 2021 ஜூன் 18 அன்று சண்டிகரின் பிஜிஐஎம்ஆர் மருத்துவமனையில் காலமானார். அவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான தடகளவிளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிக்கப்படாத இந்தியாவில் 1929 இல் பிறந்த மில்கா சிங்கின் கதை அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக்கூடியது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த கலவரத்தில் சிக்கி உயிர் தப்பியவர் அவர். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் அவரது கண் முன்னாலேயே கொலை செய்யப்பட்டனர். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த குற்றத்திற்காக மில்கா சிங்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு கிளாஸ் பாலுக்காக ராணுவ ஆள்சேர்ப்பில் கலந்துகோண்டு ஓடியவர் அவர். ஆனால் அதன் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அவர் திகழ்ந்தது ஒரு வரலாறு.

1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் உலக சாதனையை முறியடித்த போதிலும், அவரால் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல முடியவில்லை. நான்காவது இடத்துடன் திருப்தியடைய வேண்டிவந்தது.

'இந்த ஓட்டம் உங்களை உருவாக்கும் அல்லது அழிக்கும்'

கார்டிஃப் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபோது மில்கா சிங் முதன் முதலில் உலக அரங்கில் தனது முத்திரையை பதித்தார். அப்போதைய உலக சாம்பியனான மால்கம் ஸ்பென்ஸ் என்பவரை 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் தோற்கடித்தார்.

முந்திய இரவு முழுவதும் மில்கா சிங்கால் தூங்க முடியவில்லை. அடுத்த நாள் ஓட்டபந்தயத்தின் இறுதிப் போட்டி மாலை நான்கு மணிக்கு இருந்தது. காலையில் மில்கா தனது உணர்வுகளை நிதானப்படுத்த தொட்டியில் சூடான தண்ணீரில் குளித்து காலை உணவை உட்கொண்ட பிறகு மீண்டும் கம்பளியை போர்த்தியபடி தூங்கிவிட்டார். மதியம் அவர் எழுந்தார்.

ஒரு கிண்ணம் சூப், இரண்டு ரொட்டித் துண்டுகள் சாப்பிட்டார். தனது திறன் பாதிக்காமல் இருக்க வேண்டுமென்றே அவர் அதிகம் சாப்பிடவில்லை. "ஒரு மணியளவில் நான் என் தலைமுடியை வாரிமுடிந்துகொண்டு, ஒரு வெள்ளை கைக்குட்டையால் மூடிக்கட்டினேன்," என்று அன்று நடந்ததை மில்கா சிங் நினைவுகூர்ந்தார்.

"நான் ஆணி ஷூ, ஒரு சிறிய துண்டு, ஒரு சீப்பு மற்றும் ஒரு குளுக்கோஸ் பாக்கெட்டை என் பையில் வைத்தேன். பின்னர் நான் ட்ராக் சூட் அணிந்தேன். கண்களை மூடிக்கொண்டு குருநானக், குரு கோபிந்த் சிங் மற்றும் சிவபெருமானை வேண்டிக்கொண்டேன்," என்று மில்கா சிங் கூறினார்.

மில்கா சிங்

பட மூலாதாரம், AFP

அந்த நாளின் ஒவ்வொரு விநாடியும் மில்கா சிங்குக்கு நினைவில் இருந்தது. "என் அணி வீரர்கள் பஸ்ஸில் எனக்காக காத்திருந்தனர். நான் என் இருக்கையில் அமர்ந்தபோது, மில்கா சிங் எப்போதும்போல இன்று இல்லை என்று அவர்கள் கேலி செய்தனர். என்ன விஷயம், இன்று நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? என்று ஒருவர் கேட்டார். நான் அவர்களுக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆனால் என் மனம் சிறிதே லேசானது," என்றார் அவர்.

"நான் பதற்றத்துடன் இருப்பதை பார்த்த என் பயிற்சியாளர் டாக்டர் ஹாவர்ட் என் அருகில் அமர்ந்து, 'இன்றைய ஓட்டம் உன்னை உருவாக்கும் அல்லது அழிக்கும். என் உதவிக் குறிப்புகளை நீ பின்பற்றினால், மால்கம் ஸ்பென்ஸை கண்டிப்பாக தோற்கடிக்க முடியும். அதைச் செய்யும் திறன் உன்னிடம் உள்ளது' என்று சொன்னார்," என மில்கா சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆறாவது ஓட்டப்பாதையில் இருந்த மில்கா சிங்

இது தனக்கு கொஞ்சம் தைரியம் கொடுத்தது என்று மில்கா கூறுகிறார். "ஸ்டேடியத்தை அடைந்த பிறகு, அவர் நேராக ஒப்பனை அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். லேசான காய்ச்சல் இருப்பது போல அவர் உணர்ந்தார். பின்னர் டாக்டர் ஹாவர்ட் மீண்டும் வந்தார். அவர் மில்காவின் முதுகு மற்றும் கால்களை மசாஜ் செய்தார். பின்னர் அவர், 'சீக்கிரம் தயாராகத் தொடங்கு. இன்னும் ஒரு மணி நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது," என்றார்.

ஹாவர்ட் பல நாட்களாக மில்காவின் ஒவ்வொரு எதிராளியின் ஓடும் நுட்பங்களையும் ஆய்வு செய்திருந்தார்.

"முதல் சுற்றுக்குப்பிறகு ஹாவர்ட் இரவு எனது அறைக்கு வந்து படுக்கையில் உட்கார்ந்து அரைகுறை இந்தியில், 'மில்கா, ஸ்பென்ஸ் 400 மீட்டர் ஓடியதை நான் பார்த்தேன். அவர் முதல் 300 மீட்டருக்கு மெதுவாக ஓடி, கடைசி நூறு மீட்டரில் அனைவரையும் முந்திவிடுகிறார். 400 மீட்டர் ஓட வேண்டியதில்லை. 350 மீட்டர் மட்டுமே ஓட வேண்டும். இதுதான் பந்தயம் என்று நீ மனதில் நினைத்துக்கொள்'என்றார்."

"440 யார்டு இறுதிப் பந்தயத்தின் முதல் அழைப்பு பிற்பகல் 3:50 மணிக்கு வந்தது. நாங்கள் ஆறு பேரும் தொடங்கும் இடத்தில் நின்றோம். நான் என் துண்டால் காலில் இருந்து வியர்வையைத் துடைத்தேன். இரண்டாவது அழைப்பு வந்தபோது நான் என் ஆணி காலணிகளின் லேஸை கட்டிக்கொண்டிருந்தேன். நான் எனது ட்ராக் சூட்டை கழற்றினேன். என் இடுப்பில், இண்டியா என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழே அசோக சக்கரம் வரையப்பட்டிருந்தது. நான் ஆழமாக மூச்சுவிட்டவாறு, என் சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்," என்று மில்கா சிங் கூறினார்.

மில்கா சிங்

இங்கிலாந்தின் சாஸ்பெரி முதல் ஓடும்பாதையில் இருந்தார். அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் ஸ்பென்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கெர், ஜமைக்காவின் காஸ்பர், கனடாவின் டுபெய்கோ. ஆறாவது ஓட்டப்பாதையில் இருந்தார் இந்தியாவின் மில்கா சிங்.

அரை அடி வித்தியாசம் மட்டுமே

ஸ்டார்டர், 'ஆன் யுவர் மார்க்' என்று சொன்னவுடனேயே மில்கா தனது இடது பாதத்தை தொடக்கக் கோட்டின் பின்னால் வைத்து, தனது வலது முழங்காலை இடது காலுக்கு இணையாகக் கொண்டு வந்து இரு கைகளாலும் தரையைத் தொட்டார்.

புல்லெட் சுடப்பட்டதும் மில்கா ,' குளவி கூட்டம்' தன்னைப் துரத்துவதுபோல ஓடினார். ஹாவர்ட் அளித்திருந்த ஆலோசனையை அவர் நினைவு கூர்ந்தார். அவர் தனது முழு ஆற்றலையும் முதல் 300 மீட்டரில் கொட்டினார்.

மில்கா எல்லோருக்கும் முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். மில்கா மின்னல் வேகத்தில் ஓடுவதை ஸ்பென்ஸ் பார்த்ததும், அவரை முந்த முயன்றார். ஆனால் அதிர்ஷ்டம் மில்கா சிங்குடன் இருந்தது.

"பந்தயம் முடிவதற்கு 50 கெஜம் மீதம் இருந்தபோது நான் வெள்ளை நாடாவைப் பார்த்தேன். ஸ்பென்ஸுக்கு முன் அங்கு சென்றடைய நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். நான் டேப்பைத் தொட்டபோது, ஸ்பென்ஸ் என்னைக்காட்டிலும் அரை அடி மட்டுமே பின்னால் இருந்தார். அங்கிருந்த ஆங்கிலேயர்கள் முழு பலத்துடன் 'கமான் சிங், கமான் சிங்,' என்று உரத் தகுரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். டேப்பைத் தொட்டவுடன், நான் மயங்கி தரையில் விழுந்தேன்." என்று மில்கா நினைவு கூர்ந்தார்.

மில்கா சிங் ஒரு ஸ்ட்ரெச்சரில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. அவருக்கு மயக்கம் தெளிந்தபிறகு, தான் படைத்துள்ள சாதனை எத்தனை பெரியது என்பதை உணர ஆரம்பித்தார்.

அவரது தோழர்கள் அவரை தோளில் தூக்கிக்கொண்டனர். தனது உடலில் மூவர்ண கொடியை சுற்றிக்கொண்டு முழு அரங்கத்தையும் அவர் சுற்றி வந்தார். காமன்வெல்த் போட்டிகளில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றது அதுவே முதல் முறை.

மில்கா சிங்

விஜயலட்சுமி பண்டிட் ஓடிவந்து கட்டிப்பிடித்தபோது

பிரிட்டன் ராணி எலிசபெத், தனது கழுத்தில் தங்கப் பதக்கம் அணிவித்ததையும், இந்திய தேசியக் கொடி மேலே செல்வதையும் கண்டதும், மில்கா சிங்கின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

வி.ஐ.பி இருக்கைகள் இருந்த இடத்திலிருந்து குட்டைத் தலைமுடியுள்ள, புடவை அணிந்த ஒரு பெண் தன்னை நோக்கி ஓடிவருவதை மில்கா கண்டார். இந்திய அணித் தலைவர் அஸ்வினி குமார் அவரை அறிமுகப்படுத்தினார். அவர்தான் பிரிட்டனுக்கான இந்தியாவின் தூதர் விஜயலட்சுமி பண்டிட்.

"அவர் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். "பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார், இவ்வளவு பெரிய சாதனையை படைந்த அவருக்கு என்ன வெகுமதி வேண்டும்?" என்று கேட்கச்சொல்லியுள்ளார்' என்றார். என்ன கேட்பது என்று எனக்குப் புரியவில்லை. இந்த வெற்றியின் மகிழ்ச்சியில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என்று நான் சொன்னேன். நான் இந்தியாவை அடைந்த நாள், பண்டித நேரு தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். அன்று நாடு முழுவதற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது," என்று மில்கா சிங் குறிப்பிட்டார்.

மில்கா சிங்

'பறக்கும் சீக்கியராக' ஆன கதை

1960 ஆம் ஆண்டில், இந்தியா-பாகிஸ்தான் தடகள போட்டியில் பங்கேற்க மில்கா சிங்கிற்கு பாகிஸ்தானிலிருந்து அழைப்பு வந்தது. டோக்கியோ ஆசிய விளையாட்டுப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பாகிஸ்தானின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர் அப்துல் காலிக்கை, மயிரிழையில் மில்கா தோற்கடித்திருந்தார்.

இருவருக்கும் இடையிலான போட்டி இப்போது பாகிஸ்தானில் நடக்க வேண்டும் என்று பாகிஸ்தானியர்கள் விரும்பினர். ஆனால் மில்கா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டார். ஏனெனில் நாட்டுப் பிரிவினையின் போது நிகழ்ந்த சில சம்பவங்களின் கசப்பான நினைவுகள் அவர் மனதில் இருந்தன. அவரது தந்தை அவர் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டிருந்தார்.

மில்கா சிங்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் நேரு கேட்டுக்கொண்டதையடுத்து மில்கா பாகிஸ்தான் சென்றார். லாகூர் ஸ்டேடியத்தில் ஸ்டார்டர் துப்பாக்கியை சுட்டவுடன் மில்கா ஓடத் தொடங்கினார். 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. அப்துல் காலிக் ஜிந்தாபாத்.'என்று பார்வையாளர்கள் கூச்சலிடத் தொடங்கினர். காலிக் மில்காவை விட முன்னால் இருந்தார். ஆனால் 100 மீட்டர் முடிவதற்கு முன்பே மில்கா அவருக்கு இணையாக வந்துவிட்டார். அதன் பிறகு காலிக்கின் வேகம் குறைந்தது. மில்கா டேப்பைத் தொட்டபோது, அவர் காலிக்கை விட பத்து கெஜம் முன்னால் இருந்தார். பந்தயத்தை முடிக்க மில்கா எடுத்துக்கொண்ட நேரம் 20.7 வினாடிகள். இது அப்போதைய உலக சாதனைக்கு சமமாக இருந்தது. பந்தயம் முடிந்ததும், காலிக் தரையில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

மில்கா அவரிடம் சென்றார். அவருடைய முதுகில் தட்டிக் கொடுத்து "வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி, அதை மனதில் வைத்து வருத்தப்படக்கூடாது." என்றார்.

பந்தயத்திற்குப் பிறகு, மில்கா அரங்கத்தை சுற்றி, 'வெற்றி ஓட்டம்' ஓடினார். மில்காவுக்கு பதக்கம் வழங்கும் போது, பாகிஸ்தான் அதிபர் ஃபீல்ட்-மார்ஷல் அயூப்கான், "மில்கா இன்று நீங்கள் ஓடவில்லை, பறந்தீர்கள். எனவே 'பறக்கும் சீக்கியர்' என்ற பட்டத்தை உங்களுக்கு தருகிறேன்.' என்று கூறி வாழ்த்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :