கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு; மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன்

பட மூலாதாரம், MANSOOR ALI KHAN
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்ச ரூபாயை கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு அளிக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விவேக் மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு முந்தைய தினம்தான் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்த நிலையில், விவேக்கைப் பார்க்க வந்த மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்து ஊடகங்களிடம் சில கருத்துகளைத் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல அதிகாரி வடபழனி காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம், மிரட்டுதல், அவமதித்தல், கலகத்தைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகான் தடுப்பூசி குறித்து அவதூறாக எதையும் பேசவில்லையென்றும் அவரது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை சமர்பித்தார். மேலும் அவர் இதற்காக மறுப்பு வெளியிட வேண்டும் என்றும் கூறினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டபாணி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். மேலும், மன்சூர் அலிகான் இரண்டு லட்ச ரூபாய்க்கான கேட்புக் காசோலையை சுகாதாரத் துறைச் செயலர் பெயரில் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக வேறு எந்த அவதூறுக் கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என்றும் முன்களப் பணியாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டுமென்றும் தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- ஆக்சிஜன் கேட்டு ட்வீட் செய்ததற்காக இளைஞர் மீது வழக்கு
- ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கோலம்
- கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி: கடும் எதிர்ப்பு
- கொரோனா சிகிச்சை உபகரணங்கள்: ஐ.நா உதவியை நிராகரித்த இந்தியா
- பருவநிலை மாற்றம்: ஒரு சிறிய பச்சை கல் நமது எதிர்காலம் குறித்து விடுக்கும் எச்சரிக்கை
- யோகி ஆதித்யநாத்: "கொரோனா ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை" - பிறகு உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
























