புதுச்சேரியில் திருடப்படுகிறதா ஆதார் தகவல்கள்? உயர் நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்

பட மூலாதாரம், TWITTER
புதுச்சேரியில் உள்ள வாக்காளர்கள், பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு, ஆதார் எண் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. அந்த குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பின் அடிப்படையில், குறுஞ்செய்தி பெறும் சம்பந்தப்பட்ட நபர் எந்த தொகுதியைச் சேர்ந்தவரோ அந்த சட்டமன்ற தொகுதி பெயரில் பூத் வாரியாக பாஜக வாட்ஸ்-அப் குழு இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி தேர்தல் ஆணையம் மற்றும் புதுச்சேரி காவல் துறைத் தலைவரிடம் ஆனந்த் என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகார்தாரரிடம் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த புகார் தொடர்பாக தேர்தல் துறையோ சைபர் கிரைம் தரப்போ மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி புகார் அளித்த ஆனந்த, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், "புதுச்சேரி வாக்காளர்களுக்கு வரும் குறுந்தகவல் அனைத்தும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு மட்டுமே வருகிறது. ஆதார் இணைக்காத எண்ணுக்கு எந்த தகவலும் வரவில்லை. ஆதார் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்கள், பாரதிய ஜனதா கட்சிக்கு எப்படி கிடைத்தது? ஆதார் மூலமாக இந்த தகவல் கசிந்துள்ளது என்பதே எனது குற்றச்சாட்டு.
தனிநபரின் தகவல் எப்படி திருடப்பட்டது? அது எப்படி தேர்தலுக்காக பயன்படுத்தபடுகிறது? இது தேர்தல் நடத்தை விதி மீறலாகும். இது குறித்து உயர் நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆனந்த் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 24ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாகப் புதுச்சேரி தேர்தல் ஆணையம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். எப்படி வாக்காளர்களின் தொலைபேசி எண் கிடைத்தது? அதை எப்படி அரசியல் கட்சி பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பியது. மேலும் இது குறித்து 26ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தியது. இதில் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்ட பிறகே, இது தொடர்பாக புதுச்சேரி பாஜகவிற்குத் தேர்தல் ஆணையம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் சரியாக இல்லை என அதிருப்தி வெளியிட்ட நீதிபதி, ஆதார் தகவல் எப்படி கசிந்தது என மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதற்கு தேர்தல் ஆணையம் முன்பே விசாரணை நடத்தியிருக்க வேண்டாமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், WHATSAPP
வரும் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி பாஜக தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஆதார் எண் கசிந்தது எப்படி என்ற தேர்தல் ஆணையத்தின் புகாரை அடிப்படையாகக் கொண்டு ஆதார் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
"இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, புதுச்சேரியில் ஏன் தேர்தலைத் தள்ளிவைக்கக் கூடாது?" என்றும் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கின் உண்மைத் தன்மை தெரியாமல் தேர்தலை தள்ளிவைப்பது சரியாக இருக்காது என்று கூறினர்.
முன்னதாக, மனுதாரர் ஆனந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் இருக்கக்கூடிய புதுச்சேரியில், ஒவ்வொரு தொகுதியிலும் 950க்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். அதற்குரிய தொலைபேசி எண்கள், இந்த குழுவிற்கு அட்மின் என இவ்வளவு பெரிய வேலை எப்படி நடந்தது? வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடிய பாஜக, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருக்கிறது. இது வாக்காளர்களின் தனி உரிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாகச் செயல்பட முடியுமென்றால், இந்த வழக்கின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
- கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:































