You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினகரனுக்கு சசிகலா ஆதரவு கொடுக்காதது ஏன்? சி.ஆர். சரஸ்வதி சொல்லும் காரணம்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளோடு அ.ம.மு.க கூட்டணி அமைத்துள்ளது. `இந்தத் தேர்தலில் தினகரனின் வியூகம் என்ன? சசிகலா என்ன செய்யப் போகிறார்?' என்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தினகரன், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக வலுப்பெற்றுவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
`` நாடாளுமன்றத் தேர்தலில் 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றோம். அவை சாதாரணமாகக் கிடைக்கவில்லை. அந்தத் தேர்தலில் குக்கர் சின்னம் கேட்டோம், கிடைக்கவில்லை. தொப்பி சின்னம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை. அதன்பிறகு தேர்தலுக்கு 12 நாள்கள் இருக்கும்போது பரிசுப் பெட்டகம் கிடைத்தது. அப்படியும் எங்கள் சின்னத்துக்கு மேல் லேப்டாப் சின்னம் இருக்கும். எங்கள் கட்சியின் வேட்பாளர் பெயரில் மூன்று பேர் இருப்பார்கள். அதையும் தாண்டி மக்கள் துரோகத்துக்கு பதில் கொடுத்தார்கள். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலில் 18 சதவிகித வாக்குகளைப் பெற்றோம்.
இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டணியும் எங்கள் பக்கம் சேர்ந்துவிட்டது. அ.ம.மு.க களத்தில் நிற்பதே உண்மையான அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்காகத்தான். நாங்கள் டெண்டருக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டிருந்தால் அந்தப் பக்கம் நின்றிருப்போம். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் என்ற கம்பெனி ஆட்சிக்கு மக்கள் பதில் சொல்வார்கள்."
`மக்களை சந்திப்பேன்' என்றார் சசிகலா. பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். அ.ம.மு.க போட்டியிட்டு அதன்மூலம் அ.தி.மு.க தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணம்தான் காரணமா?
``நிச்சயமாக கிடையாது. எங்கள் பொதுச் செயலாளர் தினகரன் எல்லா இடத்திலும் வைக்கக் கூடிய வாதம் ஒன்றுதான். அ.தி.மு.கவை மீட்டெடுப்பது என்பதுதான். எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்றுதான் சின்னம்மா சொன்னார். பணம் இருக்கிறது.. அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சின்னம்மாவுக்கு எதிராக எடப்பாடி செயல்படுகிறார். அண்ணா தி.மு.க நடத்திய பொதுக்குழுவுக்கு எதிராக சின்னம்மா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவர்தான் பொதுச் செயலாளர். அ.தி.மு.க உள்கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளராக அவர் இருக்கிறார். அவரைக் கட்சிக்குள் சேர்க்க மாட்டேன் எனக் கூறிவிட்ட பிறகு, அவர் ஒதுங்கி நிற்பதாகக் கூறிவிட்டார். விரைவில் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக சின்னம்மா அவர்கள் பொறுப்பேற்பார். அதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்."
சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கில் இருந்து தினகரன் விலகிவிட்டார். சசிகலா எதையும் பேசவில்லை. அ.தி.மு.கவுக்கு உரிமை கோரும் விஷயத்தில் அவர் உறுதியாக இருக்கிறாரா?
``ஆமாம். நாங்கள் ஓர் இயக்கம் ஆரம்பித்துவிட்டதால், தினகரன் உரிமை கோர முடியாது. அந்த வழக்கை சின்னம்மா தொடர்ந்து நடத்துவார். அந்த வழக்கில் உறுதியாக வெற்றி பெறுவார்."
இரட்டை இலையா.. குக்கரா என வரும்போது இரட்டை இலைக்கு எதிராகப் போய்விடக் கூடாது என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறாரா?
``இரட்டை இலை என்பது இப்போது வில்லன்களின் கைகளில் இருக்கிறது. அதை உணர்ந்துதான் சின்னம்மா விலகியிருக்கிறார். பணம் சம்பாதிக்க மட்டுமே அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இரட்டை இலை இருக்கிறது. அதை மீட்க வேண்டிய கடமை அ.ம.மு.கவுக்கு உள்ளது."
அப்படியானால், அ.ம.மு.கவுக்கு சசிகலா தார்மீக ஆதரவு கொடுத்தால், அது உங்கள் கட்சிக்குத்தானே பலம் சேர்க்கும்?
``இல்லை. அப்படியானால் அ.தி.மு.க மீதான அவரது உரிமை போய்விடும். அ.தி.மு.க மீதான சட்டப்படி வழக்கு நடக்கும்போது இன்னொரு இயக்கத்துக்கு அவர் ஆதரவு கொடுக்க முடியாது"
`பொதுச்செயலாளர் சசிகலா', `துணைப் பொதுச்செயலாளர் தினகரன்' எனக் கூறி அன்றைக்கு தேர்தல் ஆணையத்தில் லட்சக்கணக்கான அபிடவிட்டுகள் கொடுக்கப்பட்டன. அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதே?
``எவ்வளவோ விஷயங்கள் மக்களுக்குத் தெரியும். அதைப் பற்றிப் பேசுவதில் என்ன இருக்கிறது?"
அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கியிருப்பதற்கு குடும்பத்தினரின் நிர்பந்தம்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறதே?
``அதில் உண்மையில்லை. அ.தி.மு.கவில் 100 சதவிகிதம் சேர்த்துக் கொள்ள மாட்டோம் எனக் கூறிய பிறகு தெருவில் நின்றா போராட முடியும்? அம்மாவோடு இணைந்து 34 வருடங்கள் அவர் அரசியல் செய்தவர். எல்லா வேதனைகளையும் தாண்டி வந்தவர். எதை இப்படி அணுக வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அவர் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்."
பெங்களூருவில் இருந்து வந்த பிறகு, `அ.தி.மு.க நிர்வாகிகள் தன்னைச் சந்திப்பார்கள்' என நம்பினார் சசிகலா. அவரது எண்ணம் பொய்த்துப் போனதாக பார்க்கலாமா?
``மிகவும் வருத்தமாக உள்ளது. பணம், பதவி மட்டுமா வாழ்க்கை. பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றனர். அன்றைக்கு சின்னம்மா கைகாட்டியிருந்தால் தினகரனை முதல்வர் ஆகியிருப்பார். அன்றைக்கு அவர் கைகாட்டிய நபருக்கு ஆதரவு கொடுக்க 122 எம்.எல்.ஏக்கள் தயாராக இருந்தனர். `ஓ.பி.எஸ்தான் துரோகம் செய்துவிட்டார். சீனியர் என்ற முறையில் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்ற முறையில்தானே கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த விசுவாசம் இவர்களிடம் இல்லையே.. சின்னம்மா மிகத் திறமையான அரசியல்வாதி. இதனை பல அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்."
அ.தி.மு.கவின் இலவச வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தாதா?
``மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். யார் சொன்னால் நடக்கும் என அவர்களுக்குத் தெரியும். நமது மாநிலத்தின் கடன் 6 லட்சம் கோடியாக உள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் கோடி கடன் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். இவர்கள் அரிசி மட்டும்தானே கொடுத்தார்கள். உலக முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு கோட், சூட் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி செய்யக் கூடிய விளம்பரத்தில், எடப்பாடியின் காலடியில் மக்கள் இருக்கிறார்கள். மக்களை இப்படித்தான் காட்ட வேண்டுமா..?
இவரைத் தெரியாத்தனமாக நாங்கள் உட்கார வைத்துவிட்டோம். விளம்பரத்துக்காக மட்டும் 2,500 கோடியை செலவழித்துள்ளனர். கொள்கையே இல்லாத கூட்டணியாக அவர்கள் சொல்லும் வார்த்தைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். இன்னொரு பக்கம் தி.மு.கவும் வாக்குறுதிகளை வாரியிறைத்துள்ளது. 2 ஏக்கர் நிலம் தருவேன் என மறைந்த கருணாநிதி வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றினார்களா.. எங்களைப் பொறுத்தவரையில் ஆக்கப்பூர்வமான தேர்தல் அறிக்கையைத் தந்துள்ளோம்."
`கூட்டணிகளை அணுகுவதில் எடப்பாடி பழனிசாமிக்கு பக்குவமில்லை' என்கிறார் பிரேமலதா. தினகரனுக்கு அந்தப் பக்குவம் இருக்கிறதா?
``அரசியலில் அம்மாவிடம் பாடம் படித்தவர் தினகரன். அம்மா மிகப் பெரிய பல்கலைக்கழகம். பிரேமலதா கூறியிருப்பது சரியானது. பா.ம.கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தது சரியானதல்ல. தற்காலிக ஒதுக்கீட்டின் மூலம் வன்னிய மக்களையும் ஏமாற்றுகிறார் எடப்பாடி. இதையெல்லாம் பார்க்கும்போது அவருக்கு பக்குவமில்லை என எடுத்துக் கொள்ளலாம்."
`ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் பயின்றவர் தினகரன்' என்கிறீர்கள். அ.தி.மு.க தரப்போ, `பத்தாண்டுகளாக தினகரனை அம்மா ஒதுக்கித்தானே வைத்திருந்தார்' என்கிறார்களே?
``கடைசி இரண்டு ஆண்டுகளில் ஓ.பி.எஸ்ஸையே அம்மா ஒதுக்கித்தானே வைத்திருந்தார். எங்களுக்குத்தானே இவையெல்லாம் தெரியும். நான் அம்மாவுடன் 18 வருடங்கள் இருந்திருக்கிறேன். போயஸ் கார்டனுக்கு யார் வருவார்கள், போவார்கள் என எனக்குத் தெரியாதா.. எங்கள் சின்னம்மா நினைத்திருந்தால், எப்போதோ தினகரன் அவர்களை உள்ளே கொண்டு வந்திருக்க முடியும். அவருக்கு எதிராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பார்த்து, `அம்மா எப்போது சொல்கிறாரோ.. அப்போது வருவேன்' என்றார். ஆனாலும், தொடர்ந்து அம்மாவுடன் அவர் பேசிக் கொண்டுதான் இருந்தார். அம்மா அவரைத் தள்ளியெல்லாம் வைக்கவில்லை."
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி திட்டம் கோவிட்-19 பரவல் அதிகரிப்பதை ஏன் தடுக்கவில்லை?
- கோவிட்19 தொற்று புரளிக்குப் பின் இறந்த தான்சானியா அதிபர்
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்