தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மகளிர் நலன் அறிவிப்புகள் திமுகவுக்கு கைகொடுக்குமா?

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

சட்டமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள திமுக, மகளிர் நலன் என்ற பெயரில் பெண்களுக்கு பேறுகால விடுப்பை அதிகரிப்பது, பெண்களின் வேலைவாய்ப்பை உயர்த்துவது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே, குடும்ப தலைவிகளுக்கு ரூ,1,000 அளிக்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள முழு தேர்தல் அறிக்கையில், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு, மகளிர் செய்யும் சிறுதொழிலுக்கு கடன், சிலிண்டர் மானியம், ரேஷன் பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என நீண்ட பட்டியலை திமுக அளித்துள்ளது. அதில் ஏற்கனவே உள்ள திருமண உதவித்திட்டம், மறுமண நிதிஉதவி,கைம்பெண் மகளிர் நலவாரியம் அமைப்பது மற்றும் சைபர் காவல்நிலையங்களை அமைப்பது என பல அறிவிப்புகள் அடங்கியுள்ளன.

பெண் வாக்காளர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பி வாக்களிப்பார்களா?

பெண்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை மனதில் வைத்து ஓட்டு போடுவார்களா? பெண்களின் வாக்குகளை அதிக எண்ணிக்கையில் பெறுவதற்கான வாய்ப்பை திமுக பெற்றுள்ளதா என பெண் வாக்காளர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் மகேஸ்வரி பெண்களுக்காக என எல்லா அரசியல் கட்சிகளும் போட்டிப்போட்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருகிறது என்கிறார்.

''பெண்களின் நலத்தை எல்லோரும் உண்மையில் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்களா என தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த தேர்தலில், எல்லா அரசியல் கட்சிகளும் குடும்ப தலைவிகள் உழைப்பை பற்றி பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவித்தொகை தரமுன்வந்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தேன். இந்த முறை திமுகவின் அறிவிப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை,''என்கிறார்.

திமுகவின் அறிவிப்புகளில் அரசு வேலைவாய்ப்பில் 40 சதவீத இடஒதுக்கீடு வரவேற்கதக்கது என்றும் மகேஸ்வரி கூறுகிறார். ''வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் தரவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவேண்டும். இந்த முறை 40 சதவீதம் என உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது,''என்கிறார்.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

திருச்சியைச் சேர்ந்த வாக்காளர் ஷீலா, திமுகவின் வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் எவ்வாறு செயல்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார். ''100 நாட்களில் புகார்களுக்கு தீர்வு காணப்படும் என்கிறார்கள். பெண்களின் பொருளாதார சுமையைக் குறைக்க ரேஷனில் உளுந்து கொடுக்கப்படும், அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு பால் கொடுப்போம் என்கிறார்கள். ஆன்லைன் வன்முறையை தடுக்க சைபர் காவல்நிலையங்கள் கொண்டுவருவோம் என்கிறார்கள். பேறுகால உதவித்தொகையை ரூ.24,000ஆக உயர்த்துவோம் என்கிறார்கள். இவை அனைத்தும் செயல்படுத்துவர்களா என கேள்வி தோன்றுகிறது. பெண்களுக்கு விழாவில் மாற்றம் ஏற்படவேண்டும் என தோன்றுகிறது. நான் திமுகவுக்கு வாக்களிக்கலாம் என யோசிக்கிறேன், ஆனால் இன்னும் நாட்கள் இருக்கின்றன என்பதால் என முடிவை இப்போது சொல்லமுடியாது,''என்கிறார் ஷீலா.

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சட்ட உதவிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாட்டாளர் கதீஜாவிடம் பேசினோம்.

திமுகவின் வாக்குறுதிகள் பெண் வாக்காளர்களைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறார் அவர்.

''தேர்தல் காலத்தில் மட்டும்தான் எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களின் நலன் பற்றி பேசுகிறார்கள். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை வைத்து மட்டும் பெண்கள் வாக்களிப்பார்களா என தெரியவில்லை. ஆனால் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, சிலிண்டர் மானியம், குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் அவர்களை ஈற்பதாக தெரிகிறது. மேலும் பெண்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, முழுமையாக அந்த திட்டங்களுக்கு தரப்படுமா என்ற சந்தேகமும் எழுகிறது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் பெண்கள் நலன் என்ற விஷயத்தில் சரியான போட்டியாளர்களாக இந்த தேர்த்தலில் தெரிகிறார்கள்,''என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :