டெல்லி கலவர வழக்கு: ஓராண்டுக்கு பிறகு நிலைமை எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை என்ன நடந்தது, அனைத்து முக்கிய விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள். இது தொடர்பான இரு கட்டுரைகளில் முதல் பகுதி இது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள் கலவரத்தில் முடிந்தன. 2020 பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். ஜூலை 13ம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டெல்லி காவல்துறையின் பிரமாணப் பத்திரத்தின்படி, இறந்தவர்களில் 40 முஸ்லிம்களும் 13 இந்துக்களும் அடங்குவர்.
கலவரம் தொடர்பான மொத்தம் 751 முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். டெல்லி கலவரம் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்த காவல்துறை மறுத்துவிட்டது.
பல தகவல்கள் 'உணர்வுகளை தூண்டக்கூடியவை', எனவே அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற முடியாது என்று காவல்துறை வாதிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 16 அன்று டெல்லி காவல்துறை இதை தெரிவித்துள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது ஒரு சவாலாக இருந்தது. ஆனால் பிபிசி, நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் எஃப்.ஐ.ஆர், குற்றப்பத்திரிக்கை போன்ற ஆவணங்களை சேகரித்து விசாரணையின் முறைகளைப் புரிந்து கொள்ள முயன்றது.
எஃப்.ஐ.ஆர்-59: 'சதித் திட்ட' விவகாரம்

பட மூலாதாரம், Getty Images
கலவரத்தின் பின்னால் ஆழ்ந்த சதி நடந்ததாக, டெல்லி போலீஸ் சிறப்புப்பிரிவும் குற்றப்பிரிவும் கூறுகின்றன. எஃப்.ஐ.ஆர் 59 இந்த சதித்திட்டம் பற்றியது.
இதில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) மூன்று பிரிவுகள் போடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை ஜாமீன் இல்லாமல் நீண்ட காலம் சிறையில் அடைக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் முக்கிய முகங்களாக இருந்த மாணவர் தலைவர்களின் பெயர்களை இந்த எஃப்.ஐ.ஆர் கொண்டுள்ளது.
2020 மார்ச் 6ஆம் தேதி அன்று பதிவுசெய்யப்பட்ட இந்த எஃப்.ஐ.ஆர், இரண்டு நபர்களை மட்டுமே பெயரிடுகிறது - ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) உறுப்பினர் டேனிஷ்.
எஃப்.ஐ.ஆர்-59 ன் அடிப்படையில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், சஃபூரா சர்கர், முகமது டேனிஷ், பர்வேஸ் மற்றும் இலியாஸ் ஆகியோர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அனைவரும் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
முக்கிய விஷயம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பத்தில் டெல்லி கலவரம் தொடர்பான வெவ்வேறு எஃப்.ஐ.ஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் ஜாமீன் பெற்றவுடன் அல்லது ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், அவர்களின் பெயர்கள் எஃப்.ஐ.ஆர் எண்-59இல் சேர்க்கப்பட்டன. இப்படியாக சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்ட உட்பிரிவுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் உமர் காலித் 2020,செப்டம்பர் 13 அன்று இரவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் யுஏபிஏ உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டதால், உமருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
செப்டம்பர் 16 அன்று காவல்துறையின் சிறப்புப்பிரிவு, எஃப்.ஐ.ஆர் 59 இன் 17,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் 15 பேருக்கு எதிரான பிரிவுகளும் ஆதாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. 2020 நவம்பர் 22 அன்று, உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் ஃபைசான் கான் ஆகியோருக்கு எதிராக 200 பக்க துணை குற்றப்பத்திரிகை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. யுஏபிஏவின் மூன்று பிரிவுகள் உட்பட 26 பிரிவுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜே.சி.சி), பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ), பிஞ்ச்ரா தோட், யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் சதித்திட்டத்தின் கீழ் டெல்லியில் கலவரங்களை நிகழ்த்தியதாக, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது வெவ்வேறு எஃப்.ஐ.ஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்களின் பட்டியல். ஆனால் பின்னர் அவர்களின் பெயர் யுஏபிஏவின் எஃப்.ஐ.ஆர் -59 இல் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில் உமர் காலித் மட்டுமே அந்த எஃப்.ஐ.ஆரில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த ஒரே நபர்.
- காலித் சைஃபி - யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட்
- இஷ்ரத் ஜஹான் - முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர்
- சஃபுரா சர்கர்- எம்ஃபில் மாணவி, ஜாமியா
- மீரான் ஹைதர்- பிஎச்.டி மாணவர், ஜாமியா
- குல்பிஷா பாத்திமா - எம்பிஏ மாணவர், காஜியாபாத்
- ஷதாப் அகமது- ஜாமியா மாணவர்
- ஷிஃபா-உர்-ரெஹ்மான் - ஜாமியா முன்னாள் மாணவர்
- நதாஷா நர்வால் - ஜே.என்.யூ மாணவி, 'பிஞ்ச்ரா தோட்' உறுப்பினர்
- தேவாங்கனா கலிதா - ஜே.என்.யூ மாணவி, 'பிஞ்ச்ரா தோட்' உறுப்பினர்
- ஆசிஃப் இக்பால் தன்ஹா- ஜாமியா மாணவர்
- உமர் காலித்- முன்னாள் ஜே.என்.யூ மாணவர்
- ஷார்ஜில் இமாம்- ஜே.என்.யூ மாணவர்
- தாஹிர் ஹூசேன் - முன்னாள் 'ஆம் ஆத்மி' கவுன்சிலர்
இதுவரை எடுக்கப்பட்ட முழுமையான நடவடிக்கையைப் புரிந்து கொள்ள, முதல் எஃப்.ஐ.ஆரில் இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றப்பத்திரிகைகள் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.
மார்ச் 6 முதல் இப்போது வரை இந்த வழக்கில் என்ன நடந்தது, காவல்துறையின் வாதங்கள் என்ன, எப்போதெல்லாம் ஜாமீன் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, 2 பேரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட இந்த எஃப்.ஐ.ஆரில் 14 பேரை எவ்வாறு கைது செய்யப்பட்டனர் ?
எஃப்.ஐ.ஆர் படி, உமர் காலித் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையின் போது கலவரங்களை நடத்த சதித்திட்டம் தீட்டினார், பி.எஃப்.ஐ-யின் முகமது டேனிஷ் கலவரங்களுக்காக ஆட்களை கூட்டினார்.
ஐபிசி பிரிவுகள்
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147 (கலவரத்தைத் தூண்டுதல்), 148 (கலவரங்களில் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துதல்), 149 (சட்டவிரோத கூட்டம்கூடல்) 120-பி (குற்றச் சதி) - ஆகியன அசல் எஃப்.ஐ.ஆரில் போடப்பட்டது. இவை அனைத்தும் ஜாமீன் பெறக்கூடியவை.
இந்த வழக்கில் முகமது டேனிஷ் உட்பட மூன்று பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன். 2020 மார்ச் 13 அன்று பெருநகர மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் அளித்தது. இந்த வழக்கை குற்றப்பிரிவு பதிவு செய்தது. ஆனால் சில நாட்களுக்கு பின்னர் சதி வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
டெல்லி காவல்துறையின் சிறப்புப்பிரிவு சதித்திட்டம், பயங்கரவாத நடவடிக்கை போன்ற சிக்கலான வழக்குகளை விசாரிக்கிறது. டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
2020 மார்ச் 15 ஆம் தேதி, இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 124 ஏ (தேச துரோகம்) போன்ற ஜாமீன் இல்லாத பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
மேலும் 154 ஏ (சட்டவிரோத கூட்டம்), 186 (அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு விளைவித்தல்), 353, 395 (கொள்ளை), 435 (தீ அல்லது வெடிப்பால் தீங்கு விளைவித்தால்), பொது சொத்து சேத தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் 3,4 மற்றும் ஆயுத தடுப்புச்ச்ட்டத்தின் பிரிவுகள் 25 மற்றும் 27 ம், எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டன.
2020 ஏப்ரல் 19 அன்று இந்த வழக்கில் கடுமையான சட்டமான யுஏபிஏவின் பிரிவுகள் 13 (சட்டவிரோத செயலுக்கான தண்டனை), 16 (பயங்கரவாத நடவடிக்கைக்கு தண்டனை), 17 (பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி திரட்டலுக்கான தண்டனை) மற்றும் 18 (சதித் திட்டத்திற்கான தண்டனை) சேர்க்கப்பட்டன .
பொதுவாக, எந்தவொரு எஃப்.ஐ.ஆருக்கும் 90 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் எஃப்.ஐ.ஆர் 59 இல், சிறப்புப்பிரிவு , யுஏபிஏ 43 டி (2) ஐப் பயன்படுத்தி செப்டம்பர் 17 வரை அதாவது சுமார் ஆறு மாத கால அவகாசம் நாடியது. ஆனால் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா நீதிமன்றம் முதலில் ஆகஸ்ட் 14 வரை அவகாசம் அளித்தது.
இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 13 அன்று, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் காலத்தை 2020 செப்டம்பர் 17 வரை நீதிமன்றம் நீட்டித்தது அதாவது ஆறு மாதங்கள்.
யுஏபிஏவில், 90 நாட்கள் கால அவகாசத்தை 180 நாட்களுக்கு நீட்டிக்க முடியும். ஆனால் இதைச் செய்ய விசாரணை அதிகாரி நீதிமன்றத்தின் முன் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதற்கான காரணங்களைக் கூற வேண்டும் மற்றும் நீதிமன்றத்தில் முறையீட்டை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கில், செப்டம்பர் 16 அன்று சிறப்புப்பிரிவு இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
வாருங்கள், முதல் வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு எஃப்.ஐ.ஆர் -59 இன் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.
காலித் சைஃபி

வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த காலித் ஒரு தொழிலதிபர். அவர் யுனைடெட் எகெயின்ஸ்ட் ஹேட் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர்.
2017ஆம் ஆண்டில், இந்த அமைப்பு கும்பல் தாக்குதலுக்கு எதிராக ஓர் இயக்கத்தை தொடங்கியது. ஓடும் ரயிலில் ஜுனைத் என்ற இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப்பின்னர் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மேலும் பலர் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறினர். இது தவிர, சைஃபி நாடு முழுவதும் பல கும்பல் தாக்குதல் கொலை சம்பவங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்.
சைஃபி முதன்முதலில் பிப்ரவரி 26 அன்று எஃப்.ஐ.ஆர்-44 இன் கீழ் கைது செய்யப்பட்டார். "குரேஜியில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காலித் சைஃபி, இஷ்ரத் ஜஹான் மற்றும் சாபு அன்சாரி ஆகியோர் சட்டவிரோதமாக அணிதிரட்டினர், போலீஸ் உத்தரவிட்ட பிறகும் மக்களை அங்கிருந்து கலைந்து செல்வதிலிருந்து தடுத்தனர் மற்றும் போலிஸ் படை மீது கல்லெறிந்ததில் சில போலீஸார் காயம் அடைந்தனர்," என்று எஃப்.ஐ.ஆர் 44 கூறியது.
இந்த எஃப்.ஐ.ஆரில், ஐபிசியின் 307வது பிரிவு (கொல்லும் நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.
மார்ச் 10 அன்று ஒரு வீடியோ வெளிவந்தது, அதில் காலித் சைஃபி , போலீஸ் காவலில் இருந்தபின் முதல் முறையாக கர்கார்டூமா நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டார். அவரது இரண்டு கால்களும் ,வலது கையின் விரல்களும் உடைந்திருந்தன. அவர் சக்கர நாற்காலியில் இருந்தார். பிப்ரவரி 26 வீடியோவில், காலித் காவல்துறையினருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அதாவது அவர் காவலில் இருந்தபோது அவரது எலும்புகள் உடைந்தன.
எஃப்.ஐ.ஆர் 44 இல் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்
மார்ச் 21 அன்று, இந்த வழக்கில் காலித் சைஃபி தவிர மற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் கர்கார்டூமா நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. "காலித் சைஃபி, நாட்டு துப்பாக்கி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததாகவும், காவல்துறையினரைத் தாக்க அவர் தூண்டியதாகவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு மைனர் சிறுவன், தனது அறிக்கையில் கூறியுள்ளார்" என்று கூறி சைஃபியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காலித் போலீஸ் காவலில் கடுமையாக தாக்கப்பட்டார், இதனால் அவர் எலும்புகள் உடைந்தன என்று சைஃபியின் சார்பாக ஆஜரான வக்கீல் ரெபேக்கா ஜான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வாதங்களுக்குப்பிறகும் , நீதிபதி மஞ்சுஷா வாத்வா நீதிமன்றம் சைஃபிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதே நாள் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ,காலித் சைஃபியின் பெயரை எஃப்.ஐ.ஆர் 59-இல் சேர்த்தது. டெல்லி கலவரம் தொடர்பான 44, 59, 101 ஆகிய மூன்று எஃப்.ஐ.ஆர்களில் இதுவரை காலித் சைஃபியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஷ்ரத் ஜஹான்

தொழில் ரீதியாக வழக்கறிஞரும் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருமான இஷ்ரத் ஜஹானும் காலித் சைஃபியுடன் 2020 பிப்ரவரி 26 அன்று கைது செய்யப்பட்டார். 2020 மார்ச் 21 அன்று கர்கர்டூமா நீதிமன்றத்தில் இருந்து எஃப்.ஐ.ஆர் எண் 44 இல் இஷ்ரத் ஜாமீன் பெற்றார். ஆனால் அதே நாளில் அவர் விடுதலையாவதற்கு முன்பு, டெல்லி கலவரத்தின் சதி தொடர்பான எஃப்.ஐ.ஆர் 59 இல் சிறப்புப்பிரிவு அவரை திஹார் சிறையில் கைது செய்தது. இதன்படி அவர் மீதும் யுஏபிஏவின் ஜாமீன் பெறமுடியாத பிரிவுகள் பதிவுசெய்யப்பட்டன.
இஷ்ரத் ஜஹான் சார்பாக பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் யுஏபிஏ விதிக்கப்பட்டுள்ளதால், அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே ஜாமீன் வழங்க உரிமை உண்டு. அதில் பெருநகர நீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்க முடியாது. இதன் பின்னர், 2020 மே 30 அன்று, அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா அவருக்கு 10 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
ஜாமீன் காலம் 2020 ஜூன் 10 அன்று தொடங்கியது. இந்த ஜாமீன் அவரது திருமணத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது மற்றும் ஜூன் 19 அன்று ஜாமீன் முடிந்தது. இருப்பினும் இஷ்ரத்தின் வழக்கறிஞர் லலித் வலேச்சா, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இருந்து ஏழு நாள் நீட்டிப்பு கோரினார். அதை நீதிபதி நிராகரித்தார். இப்போது இஷ்ரத் திஹார் சிறையில் உள்ளார்.
சஃபுரா சர்கர்

27 வயதான சஃபுரா ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மாணவர். ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் (ஜே.சி.சி) ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
சஃபுராவின் கைது மிகவும் பேசப்பட்டது மற்றும் இதற்கு மிகப்பெரிய காரணம் அவர் கர்ப்பிணியாக இருந்தது. 2020 ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று ஜாஃபராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-48 இன் கீழ் 2020 பிப்ரவரி 24 ஆம் தேதி சஃபுரா விசாரணைக்காக அழைக்கப்பட்டார். பின்னர் அவர் மாலை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு 2020 ஏப்ரல் 13 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் சஃபுரா விடுதலைக்கு பதிலாக எஃப்.ஐ.ஆர்-59இன் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 18 அன்று, சஃபுராவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இந்த நேரத்தில் சஃபுரா மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கூடுதல் தகவலுடன் ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் வருமாறு மாஜிஸ்திரேட் ,டெல்லி போலீஸை கேட்டுக் கொண்டார். ஏப்ரல் 21 விசாரணைக்கு சற்று முன்னர், ஏப்ரல் 19 அன்று, இந்த வழக்கில் சிறப்புப்பிரிவு யுஏபிஏ-வை சேர்த்தது. இதன் பின்னர், சஃபுராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டதையடுத்து சஃபுரா சர்கருக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூன் 23 அன்று மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு முன் மூன்று முறை, இதே 'மனிதாபிமான அடிப்படையில்' போடப்பட்ட ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது..
இந்த விவகாரம் ஜூன் 22 அன்று உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது கூட, டெல்லி காவல்துறையினர் "கடந்த 10 ஆண்டுகளில் 39 குழந்தைகள் திஹார் சிறையில் பிறந்திருக்கிறார்கள்" என்று கூறினார்கள். ஆனால் மறுநாளே, "சஃபுராவுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டால் அதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
ஒரு நாள் முன்னதாக புள்ளிவிவரங்கள் மூலம் சிறையில் பிரசவத்திற்கு ஆதரவாக தில்லி காவல்துறை தனது கருத்தை தெரிவித்தது. ஆனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த மனுவை அரசு தரப்பு எதிர்க்கவில்லை என்ற மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சஃபுரா சர்கரின் கைது, அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு , மேதா பட்கர் மற்றும் அருணா ராய் போன்ற பிரபலங்களால் ஆட்சேபிக்கப்பட்டது என்பதையும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜாமீன் வழங்காதது குறித்து ஊடகங்களில் விவாதம் நடைபெற்றது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
மீரான் ஹைதர்

மீரான் ஹைதர் ஜாமியாவில் பிஎச்டி மாணவர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) டெல்லி பிரிவின் மாணவர் தலைவர். ஜாமியாவின் கேட் எண் 7இல் நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் மீரான் முக்கிய அங்கமாக இருந்தார். 35 வயதான மீரான் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதன் பின்னர், ஏப்ரல் 3ஆம் தேதி, அவர் சிறை காவலில் வைக்கப்பட்டார்.
யுஏபிஏவின் ஜாமீன் பெறமுடியாத பிரிவுகள் மீரான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இன்னும் நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.
குல்பிஷா பாத்திமா

காசியாபாத்தைச் சேர்ந்த 28 வயதான குல்பிஷா பாத்திமா எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குல்பிஷா தவறாமல் கலந்து கொண்டிருந்தார்.
2020 ஏப்ரல் 9 அன்று, ஜஃப்ராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-48 இன் கீழ் சஃபுரா சர்கரைப் போலவே குல்பிஷாவையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
மே 12 அன்று இந்த வழக்கில் அவர் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார், ஆனால் அவர் திஹார் சிறையில் இருந்தபோதே எஃப்.ஐ.ஆர் -59 இல் கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் திஹார் சிறையில் உள்ளார். அவர் மீது யுஏபிஏவின் ஜாமீன் பெறாத பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குல்பிஷாவின் வழக்கறிஞர் மஹ்மூத் பராச்சாவுடன் சேர்ந்து அவரது சகோதரர் அகில் உசேன் , இவரது கைது சட்டவிரோதமானது என்று கூறி உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு மனு) மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இருந்தபோதிலும், கூடுதல் நீதிபதி தர்மேந்திர ராணா ஜூன் 25 வரை குல்பிஷாவை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினார்.
இருப்பினும், சஃபுராவுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதற்கு ஒரு நாள் முன்பு, நீதிபதி தர்மேந்திர ராணா, குல்பிஷாவின் ஹேபியஸ் கார்பஸ் மனுவை நிராகரித்தார்.
உண்மையில், " யுஏபிஏவின் வழக்கை விசாரிக்கும் உரிமை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வின் சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால் இந்த வழக்கில் ரிமாண்ட் உத்தரவு அமர்வு நீதிமன்ற நீதிபதியால் அளிக்கப்பட்டுள்ளது. அது அவரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது," என்று கூறி இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
"இந்த வாதம் தவறானது , ஏனென்றால் யுஏபிஏ வழக்கின் விசாரணை என்ஐஏ நீதிமன்றத்தில்தான் நடக்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டால்தான் இது கட்டாயமாகும்,"என்று நீதிமன்றம் கூறியது.
ஆஃசிப் இக்பால் தன்ஹா

24 வயது ஆஃசிப் இக்பால் தன்ஹா ஒரு பாரசீக மொழி மாணவர். ஜாமியா நகர் காவல் நிலையத்தில் 2019 டிசம்பர் 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் 298 இன் கீழ், 2020 மே 17 அன்று அவர் கைது செய்யப்பட்டார். சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அவரது கைது நடந்தது. 2019 டிசம்பர் 15 ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழக பகுதியில் நடைபெற்ற சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடையது இந்த வழக்கு .
மே 20 அன்று, அவரது பெயர் எஃப்.ஐ.ஆர் -59 இல் சேர்க்கப்பட்டது. அதாவது வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பிறகு யுஏபிஏ வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட்டது.
மே 28 அன்று எஃப்.ஐ.ஆர் -298 இல் அமர்வு நீதிபதி கெளரவ் ராவ் , ஆசிஃபுக்கு ஜாமீன் அளித்தார். ஆனால் அவரது பெயர் எஃப்.ஐ.ஆர் -59 இல் சேர்க்கப்பட்டதால் அவரை விடுதலை செய்ய முடியவில்லை.
எஃப்.ஐ.ஆர் -59 வழக்கில் , நீதிபதி தர்மேந்திர ராணா ஜூன் 25 வரை ஆஃசிப் இக்பால் தன்ஹாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்தபோது, அவர் நீதிமன்றத்தில் கூறினார்: "விசாரணை ஒரே திசையில் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இவர் எந்தவகையில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் என்ன விசாரணை நடந்துள்ளது என்பதை விசாரணை அதிகாரிகளால் எங்களிடம் சரியாக சொல்ல முடியவில்லை ". ஆஃசிப் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
நதாஷா மற்றும் தேவாங்கனா இருவரும் ஜே.என்.யூ மாணவிகள். அவர்கள் பிஞ்ச்ரா தோட் உறுப்பினர்களாவர். இந்த அமைப்பு டெல்லியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் குழுவாகும்.
பெண்கள் மீதான சமூக சமத்துவமின்மைக்கு எதிராக இந்த அமைப்பு குரல் எழுப்புகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்ப 2015 இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
நதாஷா நர்வால்

மே 23 அன்று, தேவாங்கனா மற்றும் நதாஷா ஆகியோர் எஃப்.ஐ.ஆர் 48 இன் கீழ் கைது செய்யப்பட்டனர். ஜாஃபராபாத் மெட்ரோ நிலையத்தில் வன்முறைக்கு ஒரு நாள் முன்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மே 24 அன்று, பெருநகர மாஜிஸ்திரேட் அஜித் நாராயண் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினார். "குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ-க்கு எதிராக மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை அது நிரூபிக்கவில்லை".என்று அவர் தெரிவித்தார்.
அதே நாளில் மற்றொரு எஃப்.ஐ.ஆர் -50 இல் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். டெல்லி கலவரத்தைத் திட்டமிடுவதில் இருவரும் ஈடுபட்டதாக போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், ஒரு வாட்ஸ்அப் செய்தி ஆதாரமாக கூறப்பட்டுள்ளது. இதன் தலைப்பு - "கலவரம் ஏற்பட்டால் வீட்டின் பெண்கள் என்ன செய்ய வேண்டும்."
இதற்குப் பிறகு, நதாஷா நர்வால் மே 29 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் 59 இல் கைது செய்யப்பட்டார். அதாவது அவர் யுஏபிஏ பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
தேவாங்கனா கலிதா

தரியாகஞ்சில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வன்முறை வழக்கில் தேவங்கனா 2020 மே 30 அன்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் 2019 டிசம்பர் 20 அன்று நடந்தது. அவர் கலகத்தில் ஈடுபட்டார், அரசு அதிகாரி கடமையைச் செய்வதைத் தடுத்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் ஜூன் 2 அன்று, மாஜிஸ்ட்ரேட் அபிநவ் பாண்டே தேவங்கனாவுக்கு ஜாமீன் வழங்கினார். "குற்றம் சாட்டப்பட்டவர் அரசு ஊழியரைத் தாக்கியதற்கான எந்த நேரடி ஆதாரமும் இல்லை. சிசிடிவி காட்சிகள் கூட குற்றம் சாட்டப்பட்டவர் வன்முறையில் ஈடுபட்டதை காட்டவில்லை கைபேசி - மடிக்கணினியிலிருந்தும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. "என்று நீதிபதி கூறினார். ஆனால் இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 5 ஆம் தேதி, சிறப்புப்பிரிவு எஃப்.ஐ.ஆர் 59இல் தேவாங்கனாவைக் கைது செய்தது மற்றும் யுஏபிஏ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்தது
குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வது ஆரம்பத்தில் வெவ்வேறு வழக்குகளில் செய்யப்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் எஃப்.ஐ.ஆர் 59 இன் ஒரு பகுதியாக உள்ளனர் மற்றும் பல மாதங்களாக சிறைகளில் உள்ளனர்.
(இந்த கட்டுரையின் அடுத்த பகுதி பிப்ரவரி 24 வெளியிடப்படும்)

பிற செய்திகள்:
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
- தமிழ்நாடு பட்ஜெட்: தமிழக அரசின் கடன் ரூ. 5.7 லட்சம் கோடியாக உயர்வு
- தோற்றுப்போனதாக வைகோ வருத்தப்பட்டது ஏன்? மனம் திறக்கும் துரை வையாபுரி
- ஸ்டாலின் அரசியல் பயணம்: தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிய வாரிசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















