சசிகலா காரில் அதிமுக கொடி: டிஜிபியிடம் புகார் அளித்த அமைச்சர்கள் - என்ன கோரிக்கை?

பிரசுரிக்கப்பட்டது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக அதிமுகவின் சார்பில் அமைச்சர்கள், நிர்வாகிகள் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த வி.கே. சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார். ஆனால், விடுதலையாகும் நாளில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்த அவர், சில நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அப்போது அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழும் காலத்தில் பயணம் செய்த அதே காரைப் பயன்படுத்தியதோடு, அதில் அதிமுகவின் கொடியையும் பயன்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக அந்தத் தருணத்திலேயே அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். கொரோனாவிலிருந்து மீண்டிருக்கும் சசிகலா தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். பிப்ரவரி எட்டாம் தேதியன்று அவர் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வருவார் என டி.டி.வி. தினகரன் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், அதிமுகவின் சார்பில் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து புகார் அளித்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி, நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த புகாரை அளித்தனர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, "அவைத்தலைவர் மதுசூதனன் டிஜிபியிடம் புகார் மனு அளித்திருக்கிறார். அதிமுகவுக்கு உரிமைப் பொருளான கட்சிக் கொடியை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை தவிர, மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது எங்கள் இயக்கக் கொடியை பயன்படுத்தினார். அதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை. ஏற்கனவே அதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அது தொடரக்கூடாது என்பதற்காக இந்த புகார் மனுவை அளித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுவிட்டாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "சசிகலா அதிமுகவில் உறுப்பினரே இல்லை. உறுப்பினர் இல்லாத ஒருவரை ஏன் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். எங்கள் கட்சியின் விதிப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.அவர் உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவில்லை. ஆகவே இந்தக் கேள்வியே எழவில்லை" என்றார் முனுசாமி.

அதிமுகவும் தனக்கும் சம்பந்தமில்லை என விலகிக் கொண்ட டி.டி.வி. தினகரன் தனிக்கட்சியே ஆரம்பித்துவிட்டார். உச்ச நீதிமன்றம் வரை இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டது. இனி அவர்கள் ஐ.நா. சபையில்தான் முறையிட வேண்டும் என சி.வி. சண்முகம் கூறினார்.

சமீபத்தில் முதலமைச்சரால் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம், நிறைவடையாத பணிகளை முடிக்க வேண்டுமென்பதற்காக மூடப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுவும் சசிகலா அங்கு வருகை தருவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: