You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு தேர்தல் செய்திகள்: சீமான் - விஜய் ஆதரவாளர்களின் டிவிட்டர் மோதல், மு.க.அழகிரி அரசியல் அறிவிப்பு
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியினருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் டிவிட்டர் யுத்தம் நடந்துவருகிறது.
தன் மீதான வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக புதன்கிழமையன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு வந்தார் சீமான். அந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசினார்.
விஜய் விரைவில் கட்சி துவங்குவார் என அவரது தந்தை கூறுகிறாரே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணமே வராது" என்று தெரிவித்தார். விஜயையும் சேர்த்துச் சொல்கிறீர்களா என செய்தியாளர் கேட்டபோது, "எல்லோருக்கும் சேர்த்துத்தான்" என்று சீமான் பதிலளித்தார்.
மேலும், "நடிக்கிறது மட்டுமே நாடாளத் தகுதி என நினைக்கும் கொடுமையை இதோடு ஒழிக்கனும் என நினைக்கிறோம். நீயும் அங்கேயிருந்துதானே வந்த என்கிறார்கள். நான் ரசிகர்களைச் சந்திக்கவில்லையே? நான் மக்களைச் சந்தித்தேன். என்னை அவர்களோடு ஒப்பிடக்கூடாது. இந்த நாட்டை ஆளும் தகுதி இருக்கும் ஒரே தலைவர் நல்லகண்ணுதான். அவருக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கிறது?
இது என் நாடு, என் உரிமை. நீங்கள்தானே என் உரிமை என காலா படத்தில் பேசினீர்கள்.
ரஜினி, கமல் இருவருமே எம்.ஜி.ஆரைப் பேசுகிறார்கள். அப்படி நீங்கள் எம்.ஜி.ஆரைப் பேசும்போது வாக்குகள் இரட்டை இலைக்குத்தான் போகும். எம்.ஜி.ஆர் பிரபாகரனை நேசித்தார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும் நீங்கள், ஈழத்தைப் பற்றி உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லுங்கள்" என்று கூறினார் சீமான்.
'நான் வந்து நல்லாட்சி தருகிறேன்'
"என்.டி.ஆர். அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. எம்ஜிஆர் வந்தது ஒரு காலச் சூழல். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல நடக்கவில்லை. ஏன் ஷாருக்கானுக்கெல்லாம் இந்த எண்ணம் வரவில்லை. எடப்பாடி ஆட்சி நன்றாக இல்லை என்றால் நான் வந்து நல்லாட்சி கொடுத்துவிட்டுப் போகிறேன்.
ரஜினி 71 வயதிலும் ஹீரோவாக நடிக்க வேண்டுமா என்று கேட்டோமோ, இதெல்லாம் ஒரு படமா என்று கேட்டோமா, எங்கள் இனத்தை வழிநடத்த மகாராஷ்ட்ராவிலிருந்து ஒருவர் வரவேண்டுமா? இதை ஒரு பெருத்த ஒரு அவமானமாக பார்க்கிறோம்" என்றும் சீமான் பேசினார்.
டிவிட்டரில் மோதல்
சீமான் அவருடைய இந்தப் பேச்சில் ரஜினிகாந்தையே அதிகம் விமர்சித்துப் பேசியிருந்தாலும், பேச்சின் துவக்கத்தில் விஜயையும் குறிப்பிட்டதையடுத்து அவரது ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
புதன்கிழமையன்று பிற்பகலில் இருந்தே #டுபாக்கூர்சீமான் என்ற ஹேஷ்டாகின் கீழ், சீமானை விமர்சித்து ட்விட்டர் பதிவுகளை வெளியிட ஆரம்பித்தனர். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக #மக்கள்_தலைவர்_சீமான் என்ற ஹேஷ்டாகின் கீழ் சீமானை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் ட்வீட்களை வெளியிட ஆரம்பித்தனர்.
இந்த இரண்டு ஹேஷ்டாகுகளும் பல மணி நேரங்கள் ட்விட்டர் டிரெண்டிங்கில் முன்னணியில் இருந்தன.
ஜனவரி 3ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை: மு.க. அழகிரி
தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஜனவரி மூன்றாம் தேதியன்று ஆலோசனை நடத்தப்போவதாக தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் கோபாலபுரத்தில் உள்ள தனது தந்தை மு. கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த மு.க. அழகிரி, தன் தாயார் தயாளு அம்மாளை நலம் விசாரித்தார். இதற்குப் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
வரும் தேர்தலில் உங்கள் பங்களிப்பு இருக்குமென சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்யப்போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, "என் பங்களிப்பு எப்படியிருக்குமென சொல்லியிருக்கிறேன். ஓட்டுப் போடுவதும் ஒரு பங்களிப்புதான், தேர்தலில் நிற்கலாம், தேர்தலில் வேலை பார்க்கலாம் இதெல்லாமும் ஒரு பங்களிப்புதான். வரும் மூன்றாம் தேதி மதுரையில் ஆலோசனைக் கூட்டம் போட்டிருக்கிறேன். என் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி நடப்பேன்" என்று தெரிவித்தார்.
தி.மு.கவிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா எனக் கேட்டபோது, அப்படி அழைப்பு ஏதும் வரவில்லை என்றார். தொண்டர்கள் கட்சி துவங்க வலியுறுத்தினால், ஆரம்பிப்பீர்களா எனக் கேட்டபோது, "ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடப்பேன்" என்றார் அழகிரி.
தி.மு.கவுடன் சேர்ந்து தேர்தல் பணியாற்ற வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
அழகிரி வந்த அரசியல் பாதை
2009ஆம் ஆண்டு தி.மு.கவின் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வுசெய்யயப்பட்ட மு.க. அழகிரி, மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பதவிவகித்தார்.
2013ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர் விவகாரத்தை முன்வைத்து, தி.மு.க. அந்த அமைச்சரவையிலிருந்து வெளியேறியது. அப்போது டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களைக் கொடுக்கச் சென்றபோது, அந்தக் குழுவில் மு.க. அழகிரி பங்கேற்கவில்லை.
இதற்குப் பிறகு அவருக்கும் தி.மு.க. தலைமைக்கும் இடையிலான மோதல் தொடர்ந்தபடியே இருந்தது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தி.மு.கவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மு.க. அழகிரி நீக்கப்பட்டார்.
அதற்குப் பிறகு, தி.மு.கவை தொடர்ந்து விமர்சித்த வந்த அழகிரி, அதே ஆண்டு மார்ச் 17ஆம் தேதியன்று மதுரையில் தன் ஆதரவாளர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, நாளைக்கே வேறு கட்சிக்குத் தாவுபவர்களுக்கு எல்லாம் தி.மு.கவில் சீட் கொடுத்துள்ளனர் என்றும் தலைவரால் வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பிறகு மார்ச் 25ஆம் தேதியன்று அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் மு. கருணாநிதியும் பொதுச் செயலாளர் க. அன்பழகனும் அறிவித்தனர்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்