பாகிஸ்தானில் நடந்த வங்கப் படுகொலை: ஆதரித்த முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சனின் இனவெறி

முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் (இடது), மற்றும் கிஸ்ஸிங்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் (இடது), மற்றும் கிஸ்ஸிங்கர்.
பிரசுரிக்கப்பட்டது

முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் (இடது), அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸ்ஸிங்கர்.

முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

நியூயார்க் டைம்ஸ்: அம்பலமான நிக்சனின் இனவெறி

ரகசிய டேப்புகள் சிலவற்றை சமீபத்தில் அமெரிக்க அதிபர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. அதில் ஒரு டேப் மூலம் முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் இனவெறி மற்றும் வெறுப்புணர்வால், பாகிஸ்தான் ராணுவத்தால் வங்கதேசத்தில் நடத்தப்பட்ட வன்முறைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது தெரியவந்துள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது நிறவெறி தொடர்பான பிரச்சனை அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் வெள்ளை மாளிகை வெளியிட்ட முன்னாள் ரகசிய டேப் ஒன்றின் மூலம் அதிபர் நிக்ஸன் மற்றும் அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கரின் வெறுப்புணர்வு தெரியவந்துள்ளது.

இந்த டேப்பின் மூலம் வெளியான தகவலின்படி தெற்காசியா மீது நிக்ஸனுக்கு இருந்த வெறுப்பு மற்றும் பெண் வெறுப்பு எப்படி அமெரிக்க கொள்கையில் தாக்கம் செலுத்தியது என்று தெரியவந்துள்ளது.

இந்த டேப் பனிப்போர்க் காலத்தின் ஒரு கடுமையான பகுதி குறித்தானது.

ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான வங்காள மக்கள் கொல்லப்பட்டதை நிக்ஸன் மற்றும் கிஸ்ஸிங்கர் ஆதரித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர். இந்தியா ரகசியமாக வங்காள கொரில்லா படைக்கும் பயிற்சி அளித்தது. இந்த நெருக்கடி 1971ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்து இந்தியா பாகிஸ்தானை ஒரு போரில் தோற்கடித்தது. அதன் பிறகு சுதந்திர வங்கதேசம் தோன்றியது.

இந்து தமிழ் திசை: நெல்லை மாவட்டத்தில் கொரோனா இறப்புகளை குறைத்துக் காட்டிய அரசு

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, கொரோனா பரிசோதனை

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 185 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 285 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரியவந்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பற்றிய விவரங்களை திருநெல்வேலி வி.எம். சத்திரத்தை சேர்ந்த பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.

இதற்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுதகவல் அலுவலர் ஆ. செந்தில்வேல் அளித்துள்ள விவரங்கள்படி, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இணைநோய்கள் ஏதுமின்றி கரோனாவால் மட்டும் ஜூன் மாதத்தில் 2 பேர், ஜூலை மாதத்தில் 43 பேர், ஆகஸ்ட் மாதத்தில் 37 பேர் என்று மொத்தம் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

இணைநோய்கள் மற்றும் கரோனாவால் மே மாதத்தில் ஒருவரும், ஜூன் மாதத்தில் 7 பேரும், ஜூலை மாதத்தில் 61 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 60 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் ஜூன் மாதத்திலும், 27 பேர் ஜூலை மாதத்திலும், 45 பேர் ஆகஸ்ட் மாதத்திலும் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக மே மாதத்தில் ஒருவர், ஜூன் மாதத்தில் 11, ஜூலை மாதத்தில் 131, ஆகஸ்ட் மாதத்தில் 45 பேர் என்று மொத்தமாக 285 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு தினமும் வெளியிடும் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு விவரங்கள் பட்டியலில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வரையில் மொத்தம் 185 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினத்தந்தி: வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பா?

மாணவிகள்

பட மூலாதாரம், Getty images

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக செய்திக்குறிப்பு ஒன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வெளியிடப்பட்டு இருப்பது போலவும், அதில் வருகிற 14-ந்தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது போலவும் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக தகவல் பரவியது.

இதைப் பார்த்து பலர் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதா? என்றும் பரபரப்பாக பேசினர். ஆனால் அந்த செய்திக்குறிப்பு போலியானது என்றும், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை என்றும் பின்னர் அறிவிக்கப்பட்டது என்கிறது தினத்தந்தி செய்தி.

தினமணி: ’உணவகங்கள் ஏ.சி வசதியுடன் இயங்கலாம்’

உணவகம்

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, உணவகம்

தமிழகத்தில் குளிர்சாதன வசதியுடன் உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதற்கான உத்தரவை அவர் சனிக்கிழமை பிறபித்தார்.

தமிழக வருவாய் நிர்வாக ஆணையாளார் பணீந்திர ரெட்டி அரசுக்குப் பரிந்துரை ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி உணவகங்களை ஏ.சி.வசதியுடன் இயக்க அனுமதிக்க வேண்டுமென கூறியிருந்தார். அவரது இந்தப் பரிந்துரையை தமிழக அரசு ஆய்வு செய்து ஏற்றுக் கொண்டுள்ளது. என தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: