சாத்தான்குளம்: ``என்கவுன்டர் கொலைகளை கொண்டாடும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம்``- வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை - மகன் இருவரும் சிறைக் காவலில் மரணம் அடைந்தார்கள் என்று சொல்வதை விட காவல் நிலைய வன்முறையில் கொல்லப்பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார் வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான சுதா ராமலிங்கம்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம், காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட வன்முறையால் நிகழ்ந்த மரணம் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் பேசப்படும் இந்த வழக்கின் காரணமாக, காவல் நிலையங்களுக்கு செல்ல நேர்கிறவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.
காவல்நிலையங்களில் நிகழும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்துவரும் வழக்குரைஞர் சுதா ராமலிங்கத்திடம் பிபிசி தமிழின் சார்பில் பேசினோம். போலீசாரால் கைது செய்யப்படும் நபர்கள் மோசமான மனித உரிமை மீறலுக்கு ஆளாவது குறித்து அவர் விரிவாக பல தகவல்களைப் பேசினார்.
அவரது பேட்டியிலிருந்து:
கே: சாத்தான்குளம் காவல் நிலைய வழக்கில், தந்தை-மகன் இருவரும் மருத்துவமனையில் இறந்துள்ளனர் என்பதால் அவர்களின் மரணம் லாக் அப் மரணம் அல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். சட்ட ரீதியாக லாக் அப் மரணம் என்றால் என்ன? இந்த வழக்கில் தந்தை-மகன் இறப்பு எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும்?
ப: ஒரு நபர் இறப்பதற்கு எது காரணமோ அதை கொண்டு அவர் எவ்வாறு இறந்தார் என்று சொல்லமுடியும். இந்த வழக்கில் இருவரும் காவல் நிலையத்தில் இருந்தனர். அங்கு அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை காரணமாக இறந்துள்ளனர் என்பதால் இதனை காவல் துறையின் வன்முறையின்போது ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்ட மரணம் என்பதை விட, காவல் நிலையத்தில் நிகழ்ந்த வன்முறையால் நடந்த கொலை என்றுதான் சொல்லமுடியும். ஒரு நபரை கைது செய்த நேரத்தில் இருந்து அவரை சிறைக்கு அனுப்பும் வரை அல்லது அவர் விடுவிக்கப்படும்வரை, அவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். இருவரும் இறப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையினர் நிகழ்த்திய வன்முறை என்பதால், இது லாக் அப் மரணம் இல்லை என அமைச்சர் கூறுவது சரியல்ல. சட்டப்படி இதை கொலை என்றுதான் சொல்லவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
கே: சாத்தான்குளம் வழக்கு சிபிஐ மூலம் விசாரணை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிபிஐ விசாரணை பலன் தந்துள்ளதா?
ப: வழக்கு சிபிஐக்கு மாற்றிய உடனே அந்த வழக்கில் நீதி கிடைக்கும் என உறுதியாக சொல்லமுடியாது. சிபிஐ விசரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட சில வழக்குகள் முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் நாம் பார்க்கிறோம். அதனால், நேர்மையான அதிகாரிகளை கொண்டு சரியான விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான் இப்போது தேவை. தமிழகத்தில் உள்ள அதிகாரிகளை வைத்து விசாரணை செய்தால், அவர்களுக்கு அழுத்தம் இருக்கும். அதனால் பிற மாநில அதிகாரிகளைக் கொண்டு இந்த வழக்கை விசாரணை செய்வது சிறந்தது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, 2002ல் நடந்த குஜராத் வன்முறை போன்ற வழக்குகளில் பிற மாநில அதிகாரிகளை கொண்டு விசாரணை நடந்தது. அதுபோல நடத்தலாம்.

கே: சமீபத்தில் சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கைதான இளைஞர்கள், காவல் நிலைய கழிவறையில் வழுக்கிவிழுந்ததால் மாவுகட்டு போடப்பட்டது என படங்கள் பகிரப்பட்டன. காவல் நிலையத்தில் உடனடியாக வழங்கப்படும் தீர்ப்பு இது என சிலர் இதனை விவரித்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் காவல்துறையை ஊக்குவிக்கின்றனவா?
ப: அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான் என்ற பழமொழி தற்போதும்வழக்கில் உள்ளது. காவல் நிலையத்தில் இளைஞரின் கை முறிக்கப்பட்டதை, பலரும் வன்முறையாக எடுத்துக்கொள்ளவில்லை. என்கவுன்டர் செய்யும் அதிகாரிகளை பலரும் புகழ்கிறார்கள். சில அதிகாரிகள் என்கவுன்டர் சிறப்பு அதிகாரியாக பார்க்கப்படுகிறார்கள். இந்த மனோபாவத்தை சமூகம் கொண்டாடுகிறது. திரைப்படங்களில் கூட மோசமாக தாக்குதல் நடத்தும் நபர்தான் ஹீரோவாக காட்சிதருகிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, பல மாதங்கள், ஆண்டுகள் கழித்து நீதி கிடைப்பதை விட இதுபோன்ற உடனடி தண்டனை வேண்டும் என்கிறார்கள்.
காவல் நிலையத்தில் உயிரிழப்புக்கு காரணமாவது மட்டுமே வன்முறை அல்ல. காவல்நிலையத்தில் பொது மக்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படவேண்டும். கைதான நபரை மாண்புடன் நடத்தவில்லை என்றாலும் அது வன்முறைதான்.

பட மூலாதாரம், Getty Images
பொதுவாகவே, தீடிரென ஒரு காவல்நிலையத்திற்கு சென்றால், சந்தேக வழக்கில் யாராவது கைது செய்யப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களை மோசமான வார்த்தைகள் சொல்லிப் பேசுவதை, அடிப்பதை நாம் வன்முறையாகப் பார்ப்பதில்லை.
கோவையில் இரண்டு குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு இலக்கானது தொடர்பான வழக்கில், கைதான நபர்களை என்கவுன்டர் செய்த தினம் தீபாவளி என அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசினார்கள். வீரப்பனை என்கவுன்டர் செய்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதுபோல பல வழக்குகளில் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவது சமூகத்தில் ஊக்குவிக்கப்படுகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் செயல்பட்டாலும் அவர்களை இந்த சமூகம் கொண்டாடுகிறது. என்கவுன்டர் கொலைகளை கொண்டாடும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். தற்போது சாத்தான்குளம் வழக்கில் இருவர் இறந்துவிட்டதால், வன்முறை பெரிய அளவில் பேசப்படுகிறது.
சர்ச்சை நேரத்து சிசிடிவி பதிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என கேட்டால், சம்பவம் நடந்த நேரத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை எனக் கூறுபவர்களும் உண்டு. அதனால், வன்முறையின் அளவை கொண்டு சரியாக தவறா என புரிந்துகொள்ளும் மனப்பான்மை மாறவேண்டும்.
டாடா டிரஸ்ட் நடத்திய ஆய்வு ஒன்றில், கடந்த ஆண்டு, இந்திய அளவில் காவல் துறையின் ஒட்டுமொத்த செயல்திறன் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. காவல்துறையில் நவீனமயமாக்கல், பெண்களின் பங்கேற்பு என பல காரணிகள் கொண்டு அந்த பட்டியல் தயாரானது.
கே: இதுபோன்ற ஆய்வுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ப: நவீனமயமாக்கல் என்பது சைபர் குற்றங்களை கண்டறிவது, குற்றங்களை தொழில் நுட்பத்தின் துணையோடு கையாள்வது என்ற அளவில் நின்றுவிடுகிறது. காவல்துறைக்கு தேர்வு செய்யும்போதுகூட, உடல் செயல்திறனுக்குதான் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. காவல் துறை அதிகாரியாக இருப்பவர் பாதிக்கப்பட்டவர்களை எப்படி நடத்துவார், அவரின் மனதிடம் எப்படி, பிரச்சனையான சூழலை அவர் எப்படிக் கையாளுவார் என சோதனை செய்வதில்லை. குற்றங்களை கண்டறிவதில் தமிழகம் முன்னணியில் இருப்பது நமக்கு பெருமை. அதேநேரம் காவல் நிலையத்திற்கு வருபவர்களை மாண்புடன் நடத்த வேண்டும். பொது மக்கள் காவல் துறையை தயக்கமின்றி அணுகும் நிலை ஏற்படவேண்டும். காவல் நிலையத்திற்கு செல்வதற்கு இப்போதும்கூட மக்கள் யோசிக்கிறார்கள் என்பதே அங்கு நிகழும் நிகழ்வுகளுக்கு சாட்சி.
கே:சித்ரவதைகளுக்கு எதிரான தேசிய அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஐந்து பேர் போலீஸ் காவலில் இறப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் எதை உணர்த்துகின்றன?
ஒரு நாளில் ஐந்து இறப்புகள் என்ற தகவல் குறைவான மதிப்பீடு என்று எண்ணுகிறேன். காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான பல வழக்குகளை கையாண்ட அனுபவத்தில், சிறைக் கைதிகளின் நிலை குறித்த ஆய்வுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டபோது, சுமார் ஐந்து ஆண்டுகள் சிறைவாசிகளிடம் கேட்டறிந்த அனுபவத்தில் இதை சொல்கிறேன். காவல் நிலையம் என்பது தற்போதும்கூட பயம்கொள்ள செய்கிற இடமாக பொது மக்களுக்கு ஏன் தோன்றுகிறது என்பதை ஆலோசித்தாலே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுவது குறைவு என புரிந்துகொள்ளலாம்.
கே: காவல்துறையினருக்கு ஏற்படும் மன உளைச்சல் காரணமாக வன்முறையில் ஈடுபடவாய்ப்புள்ளது என வைக்கப்படும் வாதம் குறித்து உங்கள் கருத்து என்ன?
போலீஸ் வேலை மன உளைச்சல் மிகுந்த பணி என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்காக ஒரு அதிகாரி தனது மன உளைச்சல் போக மற்றொரு சாதாரண நபரை வன்முறைக்கு உட்படுத்துவது எப்படி சரியாகும்? காவல்துறை உயரதிகாரிகள் பொது மக்களை, கைதாகும் நபர்களை எவ்வாறு நடத்தவேண்டும் என அடிக்கடி பிற அதிகாரிகளுக்கு புரியவைப்பது அவசியம். அதோடு, இதுபோன்ற வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு ஆதரவாக இல்லாமல், முறையாக விசாரணை செய்து, தண்டனை பெற்று தந்தால், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாகும். காவல்துறையில் பணியாற்றுவதால், வன்முறையில் ஈடுபட்டால், உயரதிகாரிகள் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தை போக்கவேண்டும். தாக்குதல் நடத்தும் அதிகாரிகளுக்கு யாரும் தங்களை காட்டிக்கொடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. காவல்துறை பணியில் இருப்பதால், மற்ற அதிகாரிகள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனை மாற்றவேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:






























