வெட்டுக்கிளிகள் படையெடுப்பு : நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஒன்றும் புதிதல்ல, இது எங்கிருந்து இந்தியா வரை வந்தது?
பிரசுரிக்கப்பட்டது

2020-ம் ஆண்டின் முதல் பாதி இப்போதுதான் நிறைவடைகிறது. ஆனால் இந்த ஆறு மாதங்களுக்குள் இந்தியா ஏகப்பட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. இப்போது உருவாகியிருக்கும் அடுத்த சிக்கல் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு.   கொரோனா வைரஸ், வட இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை, உம்பான் புயல், எல்லையில் சீனாவுடனான பதற்ற நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் மேற்கு இந்தியாவில் இரண்டு டஜனுக்கும் அதிகமான மாவட்டங்களை பாலைவன வெட்டுக்கிளிகள் பதம்பார்த்து வருகின்றன. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துவருகின்றன. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஒன்றும் புதிதல்ல, இது எங்கிருந்து ஆரம்பித்தது? எப்படி இந்தியா வரை வந்தது? பாலைவன வெட்டுக்கிளி என்பது என்ன? எவ்வளவு நாள் வாழும்?  ஒருநாளைக்கு எவ்வளவு உணவு சாப்பிடும்? என பல்வேறு தகவல்களை  இந்த காணொளியியில் நீங்கள் பார்க்கலாம். 

வெட்டுக்கிளிகள் வகைகளில் ஒன்றுதான் இந்த பாலைவன வெட்டுக்கிளி. தனிமையில்தான் வழக்கமாக வாழும், முட்டையில் இருந்து இளம் பூச்சியாக உருவாகி, பின்னர் தத்தத்தாவி ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிடும். ஆனால் இதற்கு இரண்டு முகம் உண்டு.

சுற்றுச்சூழல் சிக்கல்களால்  பசுமை வெளிகள் குறையும் சமயத்தில் உணவின்றி தவிக்கும் பல வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்துவிடும்.

கூட்டமாகச் சேர்ந்துவிட்டால் தனிமை நிலையில் வாழும் பூச்சி திடீரென கூடி வாழும் சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடும். அதன் பின்னர் உலகிலேயே  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் புலம் பெயர் பூச்சியாக உருவெடுக்கும். புதிதாக ஒன்றுசேரும் வெட்டுக்கிளிகள் தனது குணத்தை மாற்றிக்கொண்டு, பெரும் பசி கொண்ட கூட்டமாக ஒரு பறந்து செல்லும் படை போல மாறிவிடும். ஒரு பெரும் வெட்டுக்கிளி படையில் 10 பில்லியன் அதாவது ஆயிரம் கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம். ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் இதற்கு உண்டு. பசி வெறியில் இருக்கும் அந்த வெட்டுக் கிளிகள், கிராமப்புற உணவு ஆதாரங்களை, நாசமாக்கிவிட்டு, இனப்பெருக்கம் செய்து கொண்டே செல்லும்.  இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பொதுவாக மூன்று மாதம் முதல் ஐந்து மாதம் வரை வாழக்கூடாது. ஆனால் காலநிலை, சுற்றுசூழல் நிலை ஆகியயவற்றை பொறுத்து இது மாறுபடும். பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் குறுகிய காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்து பெரும் படையை உருவாக்கும் திறன் பெற்றது. அதாவது மூன்று மாதங்களில் 20 மடங்காகவும், ஆறே மாதங்களில் 400 மடங்காகவும், ஒன்பது மாதங்களில் 8000 மடங்காக உருவெடுக்கும் திறன் இந்த படைக்கு உண்டு.  ஒரு வளர்ந்த பாலைவன வெட்டுக்கிளி ஒருநாளைக்கு  தனது எடைக்கு நிகரான எடையை உட்கொள்ளும். அதாவது 2 கிராம் உணவு உட்கொள்ளும்.

ஒரு சிறிய வெட்டுக்கிளி கூட்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்வோம். அதாவது, ஒரு கிலோ மீட்டர் நீளம் அகலம் உள்ள ஒரு சதுர கிலோமீட்டர் பகுதியில் 8 கோடி வெட்டுக்கிளிகள் வரை  இருக்கும். இவை ஒருநாளைக்கு சராசரியாக 35,000 பேர் சாப்பிடக்கூடிய உணவை உட்கொண்டுவிடும். 

இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தாவிடில் விளை நிலங்கள் நாசமாகும். இதனால் உங்கள் தட்டுக்கு உணவு வராமல் போகலாம். மிகப்பெரிய பஞ்சம் கூட உருவாகலாம். உலகம்  சுமார் 90 நாடுகள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிப்புக்குள்ளாகலாம் என்கிறது ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: