You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: 'இனி பிச்சை எடுக்க மாட்டோம்' - ஆதரவற்றோருக்கு மறுவாழ்வளித்த ஊரடங்கு
புதுச்சேரியில் பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் வசித்து வந்த 60க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு அரசு சார்பில் அவர்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 50 நாட்களாக அரசுப் பள்ளியில் ஆதரவற்றோர்களைத் தங்கவைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளையும் தன்னார்வலர்கள் உதவியுடம் புதுச்சேரி அரசு செய்து வருகிறது.
இதனிடையே, முகாமிலுள்ள ஆதரவற்றோருக்கு உணவு கொடுப்பது, மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்களின் முடி திருத்தம் உள்ளிட்ட சேவைகள் செய்து வந்த தன்னார்வலர்கள், நாட்கள் செல்ல செல்ல முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் அனைவருடனும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் ஆதரவற்றோரின் கஷ்டங்கள், குடும்பத்தினருடன் இருந்து பிரிந்த காரணங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் என அனைத்தும் தெரிந்துகொண்டனர்.
இதனையடுத்து, ஆதரவற்றோருக்கு நாள்தோறும் உதவி செய்து கொண்டிருந்த தன்னார்வலர்களில் ஒருவர், இவர்கள் அனைவரையும் ஊரடங்கு முடிந்த பிறகு முன்பை போல சாலையோரங்களில் வசிக்க சென்றுவிடக் கூடாதென்பதற்காக அவர்களுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மேலும், சிலரை அவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து வைக்க முயற்சி எடுத்தார்.
இவர்களின் குடும்பத்தினரின் தொலைப்பேசி எண்ணைக் கண்டறிந்து அவர்களுடன் பேச முயற்சி செய்ததில், சிலரின் குடும்பத்தினர் மட்டுமே இவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ள முன்வந்தனர். மேற்கொண்டு எதிர்காலத்தில் அவர்களது குடும்பத்தினரால் மீண்டும் கைவிடப்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தபின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட சிலரை மட்டுமே அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்க முடிந்தது. மீதம் இருந்தவர்கள் முன்பை போல கோயில் மற்றும் பொது இடங்களுக்குச் செல்ல விருப்பமில்லை என்றும், தங்களுக்கு எதாவது வேலை ஏற்படுத்திக் கொடுத்தால், அதை வரும் நாட்கள் முழுவதும் செய்து, அதன்மூலம் வரும் வருமானத்தில் வாழ விரும்புவதாக ஆதரவற்றோர்கள் தெரிவித்துள்ளனர்
இதில் 70 வயதைக் கடந்த முதியவர்கள் நான்கு பேர் குடும்பத்தினருடனும், வேலைக்கும் செல்ல முடியாத சூழலில் இருந்தனர். ஆகவே, அவர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க முயற்சி செய்ததில், அரசாங்கத்தின் உதவியுடன் முதியோர் இல்லத்தில் நிரந்தரமாகப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: