'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார்' - நரேந்திர மோதி

பிரசுரிக்கப்பட்டது

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக மக்களவையில் இந்தியப் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

"ஸ்ரீராம் ஜனம்பூமி தீரத் ஷேத்ரா" என்ற பெயரில் ராமர் கோயில் அமைக்க அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், கோயிலுக்கான திட்டத்தை தயாரித்து இருப்பதகாவும் மோதி தெரிவித்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் உற்று நோக்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கான ராமர் கோயில், பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது.

"கோயில் கட்டுவதற்கு 3 - 4 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடம் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்," என்று தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

இன்று நாடளுமன்றத்தில் பேசிய மோதி, "உச்சநீதிமன்ற நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி, கோயில் கட்டுவதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது," என்றார்.

அயோத்தி தீர்ப்பின் முக்கிய விவரங்கள்:

மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுமையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியது.

சுன்னி வஃக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும். 1528 -1856 இடையேயான காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்காக எந்த ஆவணத்தையும் சுன்னி வக்ஃப் வாரியம் அளிக்கவில்லை.

1992ஆம் ஆண்டு பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது.

கோயில் கட்டுவதற்கு 3 - 4 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடம் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

பாபர் மசூதியை கட்டியது மீர் பாகி. இறையியல் தொடர்பான விஷயங்களில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. வழிபடும் மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும் என்றும் அப்போதைய தலைமை நீதிபதி தீர்ப்பின்போது கூறினார்.

பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது. ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்று அப்போதைய தலைமை நீதிபதி தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டிருந்தார். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் இருந்ததை தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது; அதைப் புறந்தள்ள முடியாது என்று கோகோய் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: