கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படுகிறீர்களா? - பரிசோதனை கருவிகள் வந்துவிட்டன

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படுகிறீர்களா? - பரிசோதனை கருவிகள் வந்துவிட்டன
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிவதற்கான உபகரணங்கள், திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.
கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து பல்துறை அதிகாரிகளுடன், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் சுகாதாரத் துறை செயலா் பீலா ராஜேஷ் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுப்பதோடு, போா்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசுடன் தொடா்ந்து கலந்தாலோசித்து வருகிறோம். இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 3,223 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு மருத்துவப் பரிசோதனைக்காகவே 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கையை சுத்தமாக வைத்திருக்கத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு, நோய்க் கிருமிகளை அழிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டுகளில் சீனாவில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்து சீனா வழியாக வந்த 579 போ், தொடா் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். இதில், 68 போ் சீனாவைச் சோ்ந்தவா்கள். இதுவரை அவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனினும் இவா்கள் அனைவரையும், 28 நாள்களுக்கு தொடா் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருப்போம்.
அவசர ஊா்தி, பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் போதிய அளவிலும் தயாா் நிலையில் உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புடன் ஒரு நோயாளி வரும் பட்சத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மருத்துவ அலுவலா்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.
சாப்பிடும் முன், வெளி இடங்களில் சென்று வந்த பின் என, அடிக்கடி, நன்றாக சோப்பு போட்டு, கைகளை கழுவ வேண்டும். அசைவ உணவுகளை சாப்பிடுபவா்கள், நன்கு வேக வைத்தப்பின் சாப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய கையேடும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து, வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிய எவ்வித மாதிரிகளும் எடுக்கப்படவில்லை. சென்னை, 'கிங்' ஆய்வகத்துக்கு, கொரோனாவைரஸ் கண்டறிவதற்கான உபகரணங்கள் வந்துள்ளன. தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து திங்கள்கிழமை (பிப்.3) முதல் இந்த உபகரணங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றாா் பீலா ராஜேஷ்.

தொடர்புடைய செய்திகள்

இந்து தமிழ் திசை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் யாகசாலை பூஜை தொடங்கியது

பட மூலாதாரம், M Niyas Ahmed
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று மாலை யாகசாலை பூஜை தொடங்கிய நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் விமான கோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பரிவார சந்நிதிகளில் திருப்பணிகள் செய்யப்பட்டன.
இதையடுத்து கடந்த டிச.2-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள 338 சுவாமி விக்ரகங்களுக்கு மாகாப்பு, அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி தொடங்கியது. இதன் நிறைவாக நேற்று பெருவுடையாருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் கோயிலின் உற்சவ மண்டபத்தில் இருந்து சிவாச்சாரியார்களால் யாகசாலை மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டன. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர், நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வரும் 5-ம் தேதி வரை 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆய்வு செய்தார். தஞ்சை திலகர் திடலில் உள்ள கார் நிறுத்துமிடம், சிவகங்கை பூங்கா, யாகசாலை மண்டபம், கோயிலின் உள் பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி: 'தர்பார்' படம் நஷ்டமா?

பட மூலாதாரம், LYCA
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படம், பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வந்தது. தற்போது அந்த படம் பெரும்பாலான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
'லைக்கா' நிறுவனம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியான 4 நாட்களில், உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை ஈட்டியதாக அந்த பட நிறுவனம் பெருமையுடன் அறிவித்தது.
'தர்பார்' படத்தை வாங்கிய பெரும்பாலான வினியோகஸ்தர்கள், அந்த படம் லாபம் சம்பாதித்தது என்றார்கள். அதே வேளையில் ஒரு சில வினியோகஸ்தர்கள், 'தர்பார்' படத்தால் தங்களுக்கு ரூ.20 கோடி நஷ்டம் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'பாபா', 'குசேலன்', 'லிங்கா' ஆகிய படங்கள் நஷ்டம் என்று கூறி வினியோகஸ்தர்கள் ரஜினிகாந்திடம் இருந்து இழப்பீடு பெற்று சென்றனர். எனவே அதே பாணியில், ரஜினிகாந்திடம் பணம் பெறுவதற்கான முயற்சியில் ஒரு சில வினியோகஸ்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு கடந்த 2 தினங்களாக சென்று வந்தனர்.
ஆனால் ரஜினிகாந்த் வீட்டில் இல்லாததால், அவர்கள் அனைவரும் திரும்பி சென்றனர். 'தர்பார்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளதால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில், ஒரு சிலர் இவ்வாறு செயல்படுவதாகவும் திரையுலகினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: காதல் திருமணம் செய்த மகள் முகத்தில் 'ஆசிட்' வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது 'ஆசிட்'டை வீசிச்சென்ற தந்தை உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற பாலகுமார் என்பவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மகளான தீபிகா(21)வும், சாய்குமாரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மகளின் காதல் விவகாரம் அறிந்த பாலகுமார், அவரை கண்டித்தார். பின் வீட்டை காலி செய்துவிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார். தீபிகாவை அங்குள்ள கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.
கடந்த ஆண்டு சாய்குமார், தீபிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர். தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இப்படியான சூழலில் பாலகுமார் மற்றும் அவருடன் வந்த 4 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பவுடர் கலந்த 'ஆசிட்'டை தீபிகாவின் முகத்தில் வீசி தப்பி சென்றனர் என்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















