You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி வழக்கு: 18 மறு சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுசீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் உற்று நோக்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கான ராமர் கோயில், பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கில், அந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று கடந்த மாதம் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதுமட்டுமின்றி, மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும். சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, சமீபத்தில் பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 18 மறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. நீதிபதி அறையில், சுமார் ஒரு மணிநேரம் நடந்ததாக கூறப்படும் விசாரணைக்கு பின்பு, இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் தலையிடுவதற்கு எவ்வித தேவையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 18 மறுசீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய துளிகள்
மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுமையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியது.
சுன்னி வஃக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும். 1528 -1856 இடையேயான காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்காக எந்த ஆவணத்தையும் சுன்னி வக்ஃப் வாரியம் அளிக்கவில்லை.
1992ஆம் ஆண்டு பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது.
கோயில் கட்டுவதற்கு 3 - 4 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடம் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.
பாபர் மசூதியை கட்டியது மீர் பாகி. இறையியல் தொடர்பான விஷயங்களில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. வழிபடும் மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும் என்றும் அப்போதைய தலைமை நீதிபதி தீர்ப்பின்போது கூறினார்.
பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது. ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்று அப்போதைய தலைமை நீதிபதி தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டிருந்தார். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் இருந்ததை தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது; அதைப் புறந்தள்ள முடியாது என்று கோகோய் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
- "எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்”
- குடியுரிமை சட்டத் திருத்தம்: அசாம் ஒப்பந்தம், இன்னர் லைன் பர்மிட் என்றால் என்ன?
- குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது
- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: தொடரும் போராட்டங்கள், தீவைப்பு - என்ன நடக்கிறது அசாமில்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: