துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 33,000ஐ கடந்தது – உள்நாட்டுப் போரால் சிரியாவுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல்

பட மூலாதாரம், Getty Images
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000க்கும் மேல் உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டே இருக்கும் நிலையில், இரு நாடுகளிலும் 33,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. 1939ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது.
"தெற்கு துருக்கியில் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்று அன்டாக்யா நகரம். அங்கு கடை உரிமையாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தங்கள் பொருட்கள் திருடப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் கடைகளைக் காலி செய்தனர்.
மற்ற நகரங்களில் இருந்து வந்த மக்களும் உதவிப் பணியாளர்களும் கடைகளும் இடிந்து விழுந்த வீடுகளும் கொள்ளையடிக்கப்படுவதைக் குறிப்பிட்டு மோசமான பாதுகாப்பு நிலைமை நிலவுவதாகக் கூறினார்கள்," என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
தனது இருபது ஆண்டுகால அதிகாரத்தில் எதிர்கொண்டதிலேயே கடினமான தேர்தலாக இருக்கப் போகும் வரவுள்ள தேசியளவிலான தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார் அதிபர் தையீப் எர்துகான். இந்நிலையில், நிலநடுக்க பாதிப்புகளைக் கையாள்வது குறித்து அவர் பேசியபோது, கொள்ளையர்களை அரசு உறுதியோடு கையாளும் எனக் கூறியுள்ளார்.
சிரியாவில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்குப் பகுதியில் இந்தப் பேரழிவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் ஏற்கெனவே இடம்பெயர்ந்த பலரும் மீண்டும் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்தப் பகுதிக்கு மிகச் சிறிய உதவிகளே கிடைத்துள்ளன.
"நாங்கள் இதுவரை வடமேற்கு சிரியாவில் உள்ள மக்களுக்கு உதவுவதில் தோல்வியடைந்துள்ளோம்," என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதநேய உதவி மற்றும் அவசரகால நிவாரணம் பிரிவின் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் துருக்கி-சிரியா எல்லையில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.
"அவர்கள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள்," என்று கூறிய கிரிஃபித்ஸ் அதில் விரைவில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சிரியா அரசையும் நாட்டிலுள்ள மற்ற அனைத்துக் கட்சிகளையும் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டுமென்று வாஷிங்டன் அழைப்பு விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆறு நாட்களுக்கு மேல் கடந்தும்கூட, பல்லாயிரக்கணக்கானோரின் கல்லறைகளாக மாறிய வீடுகளின் இடிபாடுகளில் ஒரு சில மக்கள் உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருப்பதை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
சிரியாவை சேர்ந்த மாலிக் மிலாண்டி, அன்டாக்யாவில் இடிபாடுகளுக்குள் 156 மணிநேரம் உயிர் பிழைக்கப் போராடினார். சீன மீட்புப் படையினர் மற்றும் துருக்கிய தீயணைப்பு வீரர்கள் குழு அவரைக் காப்பாற்றியது.
நகரத்திற்குள் செல்லும் பிரதான சாலையில் சில கட்டடங்கள் பெரிய விரிசல்கள், குகை போன்ற முகப்புகளையும் கொண்டிருந்தன. இடிபாடுகளுக்கு நடுவில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிழைக்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிய, மீட்புப் படையினர் அவ்வப்போது அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டதால், போக்குவரத்து அடிக்கடி நிறுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு தந்தை, மகள், குறுநடை போடும் குழந்தை, 10 வயது சிறுமி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையன்று இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து தப்பிப் பிழைத்தார்கள். இருப்பினும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இடைவிடாமல் உயர்ந்துகொண்டே இருப்பதால், இத்தகைய காட்சிகள் அரிதாகி வருகின்றன.
ரெஹான்லிக்கு அருகில் அடந்த ஓர் இறுதிச் சடங்கில், லாரிகளில் இருந்து உடல்கள் இறக்கப்பட்டபோது, முக்காடு அணிந்த பெண்கள் அழுதபடி, மார்பில் அடித்துக்கொண்ட காட்சியையும் அங்கு மூடிய மரப்பெட்டிகளில் சில உடல்களும் மூடப்படாத சவப்பெட்டிகளிலும் போர்வையில் சுருட்டப்பட்ட மற்றவர்களின் உடல்களும் அங்கு இருந்ததாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
பல கண்டத்தட்டுகளுக்கு மேல் அமைந்துள்ள நாட்டில் கட்டுமான தரத்தின் மீது நிலநடுக்க பேரழிவுக்குப் பிறகு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் தரைமட்டமான ஆயிரக்கணக்கான கட்டடங்களில் சில இடிந்து விழுந்ததற்குக் காரணமாக இதுவரை 13 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கியின் துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எர்துகான் எதிர்கொள்ள இருக்கும் வேளையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பேரழிவுக்கு முன்பே, பணவீக்கம் சரிந்து வரும் துருக்கிய பண மதிப்பின் காரணமாக அவரது புகழ் சரிவைக் கண்டுகொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சாராரும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அரசாங்கம் மெதுவாகச் செயல்படுவதாகவும் நிவாரண முயற்சிகளை ஆரம்பத்திலேயே குறைத்துச் செய்ததாகவும் விமர்சிக்கின்றனர். மேலும், 1999 நிலநடுக்கத்தின்போது மீட்பில் முக்கியப் பங்கு வகித்த ராணுவம் ஏன் விரைந்து கொண்டுவரப்படவில்லை என்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உதவிகளை வழங்குவதில் இருந்த பிரச்னைகளை ஒப்புக்கொண்ட அதிபர் எர்துகான், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சிரியாவுக்கு உதவி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்
சிரியாவில், 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது ஏற்பட்ட பிளவு தற்போது நிவாரண பணிகளுக்கு இடையூறாக உள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து கடுமையான எதிர்ப்புக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசத்திற்கு நிலநடுக்க உதவிகளை அனுப்புவது, பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் இஸ்லாமிய குழுவான ஹயாத் தஜ்ரிர் அல்-ஷாம் உடனான ஒப்புதல் சிக்கல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
இட்லிப்பில் உள்ள ஒரு ஹெச்.டி.எஸ்-ஐ சேர்ந்த ஒருவர், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து எதையும் ஹெச்.டி.எஸ் குழு அனுமதிக்காது என்றும் துருக்கியில் இருந்து வடக்கே உதவி வரும் என்றும் கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
உதவிகளை கொண்டு சேர்ப்பதற்காக துருக்கி, எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியா இடையே கூடுதலாக இரண்டு எல்லைப் புள்ளிகளைத் திறப்பதன் மூலம் எல்லை தாண்டிய நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க முடியும் என்று ஐ.நா நம்புவதாக செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்க் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நிலநடுக்கத்தை அடுத்து பல அரபு நாடுகள் சிரியா அதிபருக்கு ஆதரவளித்துள்ளன. 2011இல் எதிர்ப்புகளும் உள்நாட்டுப் போரும் வெடித்த பிறகு பஷார் அல்-அசாத்தை தனிமைப்படுத்த முயன்ற மேற்கத்திய நாடுகள்தான் சிரியா முழுவதும் ஐ.நா-வின் நிவாரண முயற்சிகளில் முக்கியப் பங்களிப்பார்களாக உள்ளன. ஆனால், உள்நாட்டுப் போரின்போது டமாஸ்கஸுக்கு நேரடி உதவிகளை அவை வழங்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஐரோப்பிய நாடுகளுடைய உதவிகளைச் சுமந்த முதல் கப்பல் ஞாயிற்றுக்கிழமையன்று டமாஸ்கஸை வந்தடைந்தது.
ஐ.நா சபை சிரியாவுக்கு ஆதரவாக நிதி திரட்டி வருவதாக டமாஸ்கஸில் உள்ள ஐ.நா சிரியா தூதர் கேர் பெடர்சன், "அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சிரியா மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு பொது முயற்சியின் பின்னால் ஒன்றுகூடுவதற்கான நேரம் இது என்று நாங்கள் அனைவருக்கும் சொல்ல முயல்கிறோம்," என்று கூறினார்.
2003ஆம் ஆண்டு அண்டை நாடான ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கை 31,000ஐ தாண்டியது.
அப்போது, துருக்கியில் 29,605 பேரும் சிரியாவில் 3,500 பேரும் உயிரிழந்தனர். இம்முறை, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 33,000ஐ கடந்து உயர்ந்துகொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















