ஜப்பான் ரயில் ஓட்டுநர் தொடர்ந்த வழக்கு - ஒரு நிமிட தாமதத்துக்கு ஊதியத்தில் ரூ.37 பிடித்தம்

பட மூலாதாரம், Getty Images
தனது ஊதியத்தில் 56 யென் தொகையைப் பிடித்ததற்காக வேலை செய்யும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்தத் தொகை இந்திய மதிப்பில் 37 ரூபாய்.
எதற்காக இந்தச் சம்பளப் பிடிப்பு என்று கேட்கிறீர்களா?
ஒரு நிமிட தாமதம். ஆமாம் ஒரேயொரு நிமிடம் ரயில் தாமதமாக சென்றதற்காகத்தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2020 ஜூன் மாதத்தில் ஒரு பணிக் குழப்பத்தின் காரணமாக ரயில் தாதமாகச் செல்ல நேரிட்டதால் ரயில் நிறுவனமான ஜே.ஆர். வெஸ்ட் ஓட்டுநருக்கு அபராதம் விதித்து.
ஆனால் அபராதம் விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன வேதனைக்காக 22 லட்சம் யென் இழப்பீடு தர வேண்டும் என்று கோரி அந்த ஓட்டுநர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஜப்பானிய செய்தித் தளமான Soranews24 வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியில், ஒரு நிமிடத் தாமதத்துக்கு என்ன காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
நாட்டின் தெற்கில் உள்ள ஒகயாமா நிலையத்திற்கு ஆளில்லாத வெற்று ரயிலை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். குறித்தபடி முந்தைய டிரைவரிடமிருந்து பொறுப்பைப் பெறுவதற்காகக் காத்திருந்தார். ஆனால் அவர் நின்று கொண்டிருந்தது தவறான நடைமேடை.
அவர் இயக்க வேண்டிய ரயில், வேறொரு நடைமேடைக்கு வந்த பிறகுதான், தனது தவறை உணர்ந்து ஓட்டுநர், அந்த நடைமேடைக்குச் விரைந்திருக்கிறார். இந்தக் குழப்பத்தால் பொறுப்பைப் பெறுவதற்கு இரண்டு நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. அதனால் ரயில் புறப்படுவதற்கு ஒரு நிமிடம் தாமதமானது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்துக்குப் பிறகே உரிய டெப்போவில் ரயிலைக் கொண்டு சேர்க்க முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
தொடர்புடைய ஓட்டுநரின் பெயர் அந்தச் செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
ஜேஆர் வெஸ்ட் நிறுவனம் முதலில் ஓட்டுநருக்கு 85 யென் தொகையை ஊதியத்தில் இருந்து பிடித்தது. தொழிலாளர் நல அலுவலகத்தில் முறையிட்ட பிறகு தொகையை 56 யென்களாகக் குறைக்க ஒப்புக் கொண்டது.
ஆனால் அந்த ஓட்டுநர் இதை ஏற்கவில்லை. ரயில் காலியாக இருந்ததால், கால அட்டவணையில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை, பயணிகளுக்கு எவ்வித உண்மையான இடையூறும் ஏற்படவில்லை என்று வாதிட்டார்.
ஆனால் ஜே ஆர் வெஸ்ட் நிறுவனம் விடவில்லை. ஊழியரின் தாமதத்துக்கு "வேலை இல்லை, ஊதியம் இல்லை" என்ற கொள்கையைப் பயன்படுத்தியதாகக் கூறியது.
ஓட்டுநர் தனது வழக்கை ஒகயாமா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த மார்ச் மாதம் கொண்டு சென்றார். இப்போது அங்கு அவர் இழப்பீடு கோருகிறார்.
ஜப்பானின் ரயில் நிர்வாகம் அதன் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றது. 2017ஆம் ஆண்டில், ஒரு ரயில் நிறுவனம் 20 வினாடிகள் முன்னதாக ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதற்காக மன்னிப்புக் கோரியது.
மேலும் ஒரு ரயில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தால், அலுவலகத்தில் காட்டுவதற்காக தாமதச் சான்றிதழ் ஒன்றையும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- `பருவநிலை பிரச்னையை எதிர்கொள்ள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்` - COP26 மாநாட்டில் வெளியான அறிவிப்பு
- 'அந்த 3 ஓவர்கள்' இங்கிலாந்தை நியூசிலாந்து வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
- முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா?
- மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்





















