மொசாம்பீக்கின் பால்மா நகரில் ஐஎஸ் குழு நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

மெரில் நாக்ஸ்

பட மூலாதாரம், MERYL KNOX

பிரசுரிக்கப்பட்டது

மொசாம்பீக் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் பால்மா நகரில் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியானதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஐஎஸ் குழுவினரின் முற்றுகையில் இருந்து தப்பிக்க முயற்சித்த போதே 7 பேர் கொல்லப்பட்டனர் என ஒமர் சராங்கா கூறினார். உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நடந்த தாக்குதலில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அட்ரியன் நெல் குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர் என தெரிய வந்துள்ளது. தொழில்முறை டைவர் ஆன அட்ரியன் நெல்லுக்கு வயது 41. அவருக்கு கனடா நாட்டவரான மனைவி, 10 வயதில் மகன், முறையே ஆறு வயது மற்றும் இரண்டு வயதில் இரு மகள்கள் இருப்பதாக நெல்லின் தாயார் மெரில் நாக்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி தனது மகன் 41ஆவது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். இப்போது அவரது சடலம் கேட்பாரின்றி பிணறவையில் கிடப்பதாக அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, தென்னாப்பிரிக்காவில் தொழில்முறை டைவர் பணியை இழந்த அட்ரியன், கடந்த ஜனவரி மாதம் மொசாம்பீக்கில் கட்டட வேலை பார்த்து வரும் தனது தந்தை மற்றும் சகோதரருடன் சேர்ந்து பணியாற்ற பால்மா நகருக்கு வந்தார்.

மொசாம்பிக் தாக்குதல்

பால்மா நகரில் ஐ.எஸ் குழுவினர் தாக்குதல் நடத்திய வேளையில், உயிரை காப்பாற்றிக் கொள்ள சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல், சொகுசுக் கப்பல், இழுவைப் படகுகள் என ஏதேனும் ஒரு வழியில் எப்படியோ தப்பிக்க மக்கள் முயன்றனர்.

2017ஆம் ஆண்டில் நடந்த கிளர்ச்சி, இந்த வடக்கு மொசாம்பீக் பகுதியையே சின்னாபின்னமாக்கிவிட்டது. கேபோ டெல்காடோ எனும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாகாணத்தில் இருக்கும் பால்மா நகர தாக்குதலுக்கு பின்னால், ஐஎஸ் குழுவுடன் தொடர்புடையவர்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. பால்மா பகுதியை ஐஎஸ் குழுவினர் கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படுவதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

கடந்த புதன்கிழமை ஐஎஸ் குழுவினர் தாக்குதலைத் தொடங்கிய போது, அவர்கள் கடைகள், வங்கிகள் மற்றும் ராணுவ தடுப்புச் சுவர்களை இலக்கு வைத்தார்கள்.

மொசாம்பிக் நாடு

அங்கு நிலவிய போர் போன்ற சூழலில் இருந்து தப்பிக்க பலரும் காடுகளுக்குள் ஓடினர். நூற்றுக்கணக்கானோர் பால்மா நகரில் இருக்கும் அமருலா பால்மா விடுதியில் தஞ்சம் புகுந்தனர்.

குறைந்தபட்சம் 20 பேர் ஹெலிகாப்டர் மூலம் அவ்விடுதியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மற்றவர்கள் தப்பிக்க முற்பட்ட போது, அவர்கள் மீது ஐஎஸ் குழுவினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

விடுதியில் இருந்து தப்பித்தவர்கள், வெள்ளிக்கிழமை இரவை கடற்கரையிலேயே கழித்தனர். அடுத்த நாள் (சனிக்கிழமை) காலை ஒரு படகின் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர் என ஒரு ஒப்பந்ததாரர் பிபிசியிடம் கூறினார்.

அப்பகுதியில் வாழும் மக்கள், மீட்புப் பணிகளுக்கு முழுமையாக ஆதரவளிப்பதாகத் தெரிகிறது என கூறினார் அந்த ஒப்பந்ததாரர்.

பால்மா நகரில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெம்பா நகரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம், மீட்கப்பட்ட 1,400 பேரைக் கொண்ட ஒரு பெரிய கப்பல், வந்து சேர்ந்ததாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.

இன்னும் பல சிறிய படகுகள் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெம்பா நகரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, தொண்டூழிய அமைப்புகள் கூறியுள்ளன. இவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலை வந்து சேரலாம் என அவை மேலும் தெரிவித்தன.

மொசாம்பீக் நாட்டில், ஐஎஸ் குழு நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் இதுவரை 2,500 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். சுமார் 7 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊரையும், வாழ்விடத்தையும் விட்டு வேறு இடங்களை நோக்கிச் சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: