You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இயக்குநர் வெங்கட்பிரபு: “விஜய், ரஜினி, கமலுக்கு என் கதை இதுதான்!”- சிறப்புப்பேட்டி
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
'சென்னை-28', 'கோவா', 'மங்காத்தா', 'மாநாடு' என தனது ஒவ்வொரு படத்திலும் புது கதைக்களத்தை பரிசோதித்து பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் இயக்குநர் வெங்கட்பிரபு. ஓரின சேர்க்கை, மணி ஹெய்ஸ்ட், டைம் லூப் என இவரின் கதைக்களங்களுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த முறை அடல்ட் காமெடி கதையான 'மன்மதலீலை' உடன் களம் இறங்கி இருக்கிறார்.
பிபிசி தமிழுக்காக அவருடனாக உரையாடலில் இருந்து,
உங்களுடைய முந்தைய படமான 'மாநாடு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பிறகு வரக்கூட்டிய வெங்கட்பிரபு படங்களுக்கு நிச்சயம் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த அழுத்தம் 'மன்மதலீலை' படத்தில் பிரதிபலித்ததா?
"'மாநாடு' படம் வெளியீட்டுக்கு முன்பே நான் மன்மதலீலை படத்தை முடித்து விட்டேன். இது ஓடிடிக்காக எடுத்த படம். அதனால் நீங்கள் சொல்வது போல எந்தவொரு எதிர்ப்பார்ப்பு, அழுத்தம் என எதுவும் இல்லை. எனக்கு வெவ்வேறு ஜானர்களில் படத்தை முயற்சி செய்து பார்ப்பது பிடிக்கும். 'மாநாடு' வெற்றியே இந்த படத்தை தியேட்டருக்கு எடுத்து வந்திருக்கிறது. இதற்கு முன்பு வரை தியேட்டருக்கு எடுத்த படம் தான் ஓடிடிக்கு போகும். ஆனால் முதன் முறையாக 'மன்மதலீலை' ஓடிடிக்கு எடுத்து தியேட்டருக்கு வந்திருக்கிறது. அதுதான் கொஞ்சம் படபடப்பாக உள்ளது."
ஒவ்வொரு படங்களிலும் ஹெய்ஸ்ட், டைம் லூப் என புதுப்புது ஜானர்களை முயற்சி செய்வீர்கள். 'மன்மதலீலை' படத்திற்கு அடல்ட் காமெடி கதை ஏன்?
"அடல்ட் காமெடியில் ஏன் படம் பண்ண கூடாது என்று தான் யோசித்தேன். நம் ஊரில் இதை பற்றி அதிகம் பேச கூடாது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் உள்ளது. ஆனால், மெதுவாக இது மாறக்கூடிய ஒரு நேரமாக தான் இதை பார்க்கிறேன்.
திருமணம் தாண்டிய உறவுகள் குறித்தான படங்கள் நான் சிறு வயதில் பார்த்தது என்றால் இயக்குநர் பாலு மகேந்திரா, பாக்யராஜ் படங்களை சொல்வேன். 'மன்மதலீலை' படத்திற்கு ஏன் A சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் இதில் இரட்டை அர்த்த வசனங்களோ அல்லது முகம் சுழிக்க வைக்கும் விரசமான காட்சிகளோ கிடையாது. செக்ஸ்க்காக தப்பு செய்ய துணியும் ஒருவன் எப்படி மாட்டி கொள்கிறான் என்ற பாக்யராஜ் சார் கதையை இந்த காலத்து தலைமுறைக்கு ஏற்றவாறு எடுத்திருக்கிறோம்.
'ஹேங்க் ஓவர்' என்ற படத்தில் நிறைய செக்ஸ் தொடர்பான காட்சிகள், குடித்துவிட்டு செய்யும் தவறுகள் போன்றவை இருக்கும். இதை வைத்து அவர்கள் நகைச்சுவை செய்திருப்பார்கள். இதுவும் அடல்ட் காமெடி வகையை தான் சாரும். ஆனால், தமிழை பொருத்தவரை கடைசியாக நீங்கள் எந்த அடல்ட் காமெடி படம் பார்த்தீர்கள் என்பது கூட நியாபகம் இருக்காது. தமிழை பொறுத்தவரை ஒரு முத்த காட்சி எடுத்தால் கூட பார்க்கும் போது பதறுகிறோம். ஆனால், இதுவே மற்ற மொழிகளில் அந்த பிரச்சனை இருக்காது. கீழ்த்தரமான செக்ஸ் ஜோக் படத்தில் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. முகம் சுழிக்காத வகையில் நமக்கு பிடித்தபடி எடுக்க வேண்டும்."
உங்களுடைய முந்தைய படங்களில் இருந்த டெக்னிக்கல் டீம், நடிகர்கள் என வழக்கமான டீம் இந்த படத்தில் இல்லையே? அசோக்செல்வன், சம்யுக்தா என பலரும் புதிதாக இருக்கிறார்களே?
"ஆமாம்! என்னுடைய கேமரா மேன், எடிட்டர் என டெக்னிக்கல் டீம் முழுவதுமே புதிது தான். மீண்டும் மீண்டும் ஒரே டீமுடன் வேலை செய்து எனக்கே அயர்ச்சியாக இருந்ததால் புது டீமுடன் வேலை செய்து என்னை புதுப்பித்து கொண்டேன். ஒருவேளை, பழைய டீம் என்றால் கதாநாயகனாக வைபவ்விடம் கேட்டிருப்பேன். என்னுடைய படங்களில் 'சென்னை-28' தவிர பெரும்பாலும் கதாநாயகிகளை ரிப்பீட் செய்ய மாட்டேன். குறுகிய காலத்தில் ஓடிடி-க்கான படம் என்பதால் யுவனை தொந்தரவு செய்யாமல் பிரேம்ஜியிடம் கொடுத்தேன். அவனும் இயல்பிலேயே இசையமைப்பாளர் என்பதால் நன்றாகவே செய்திருக்கிறான். ஓடிடி படம் என்பதால் பாடல்கள் வைக்க முடியாமல் போய்விட்டது. இருந்திருந்தால் பிரேம்ஜி இசை இன்னும் பேசப்பட்டிருக்கும்."
முதல் முறையாக வேறொரு இயக்குநரின் கதையை நீங்கள் இயக்கி இருக்கிறீர்கள். இது போல, மற்ற எந்த இயக்குநருடைய கதையை நீங்கள் இயக்க நினைத்து இருக்கிறீர்கள்?
"'மன்மதலீலை' கதை என்னுடைய உதவி இயக்குநர் மணிவண்ணனுடைய கதைதான். லாக்டவுண் சமயத்தில், குறைந்த இடம், நடிகர்கள் வைத்து படம் பண்ணலாம் என பேசி கொண்டிருக்கும் போது இந்த கதையை த்ரில்லராக தான் முதலில் யோசித்தோம். பின்பு அந்த கொரோனா சமயத்தில் இலகுவாக வேண்டும் என்பதால் இந்த த்ரில்லர் கதையில் நகைச்சுவை சேர்த்து செய்தோம். மற்ற இயக்குநர்களின் கதையை நான் இயக்க வேண்டும் என்றால் முதலில் நல்ல காதல் கதைக்கு நான் போய் நிற்பது கெளதம் மேனனிடம் தான். இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜானர் உள்ளது. சைக்காலஜிக்கல் த்ரில்லர் வேண்டும் என்றால் மிஷ்கினிடம் கேட்பேன். செல்வராகவன் கதையை இயக்க வேண்டும் என ஆசை உண்டு. ஒருமுறை அவரிடமே கேட்டேன். இதுபோல நிறைய இயக்குநர்களுடன் இணைந்து வேலை பார்க்க ஆசை உண்டு."
தமிழ் திரையுலகை பொருத்த வரை இயக்குநர்கள், தாங்கள் தான் கதையும் எழுத வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளார்களா?
"இப்போது இருக்கும் தலைமுறை தான் அப்படி இருக்கிறார்கள். கதை வேறு, இயக்கம் வேறு என்ற ட்ரெண்ட் இருந்தால் அதில் பழகி இருப்பார்கள். முன்பு எஸ்.பி. முத்துராமன் சார் அத்தனை படங்கள் இயக்கி இருப்பார். ஆனால் அவருடைய பல படங்களுக்கு பஞ்சு அருணாச்சலம் தான் கதை எழுதி இருப்பார். ஷங்கர்- சுஜாதா போன்று நிறைய இயக்குநர்- எழுத்தாளர்கள் இணை இருந்தது. ஆனால், இப்போதுள்ள இயக்குநர்கள் அவர்களின் கதைகளுடனே வந்து விடுகிறார்கள். 'மாநாடு' போன்ற கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு ஒரு வருடம் ஆனது. இதுவே எனக்கு கதையை வேறொருவர் எழுதி கொடுத்தால் இயக்குநராக என்னுடைய வேலை இன்னும் எளிது. இயக்குநர்- எழுத்தாளர் ட்ரெண்ட் எப்போது இருந்து மாறியது என தெரியவில்லை. அது இப்பொழுது மீண்டும் மெல்ல ஆரம்பித்து இருக்கிறது."
அடுத்து நாக சைதன்யாவுடன் தெலுங்கு படம், 'மாநாடு' இந்தி ரீமேக் என நீங்களும் பான் இந்தியா இயக்குநராக திட்டம் இருக்கிறதா?
"அப்படி இல்லை. எனக்கு 'மங்காத்தா' முடிந்த சமயத்திலேயே பாலிவுட் படங்களுக்கான வாய்ப்பு வந்தது. 'மங்காத்தா' இந்தி ரீமேக் கூட வந்தது. ஆனால், அந்த சமயத்தில் நான் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. ஆனால், அந்த குறையை 'மாநாடு' அடுத்த கட்டமாக எடுத்து வைத்திருக்கிறது. வெவ்வேறு மொழிகளில் என்னை தெரிய வைத்திருக்கிறது.
பாம்பேவில் இருந்து ஒரு தயாரிப்பாளர் 'மாநாடு'க்கு பிறகு என்னுடைய 'மன்மதலீலை' ட்ரைய்லரை பார்த்து விட்டு படம் இந்தியில் பார்க்க வேண்டும் என கேட்டார். மேலும் தெலுங்கில் நாக சைதன்யாவுடனும் படம் பண்ணுகிறேன். இந்த படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்."
ரஜினி, கமல், விஜய் இவர்களுடன் இணைந்து பணியாற்றினால் இவர்களுக்கு என்ன ஜானர் செய்ய விருப்பம்?
"இதுவரை அவர்கள் நடிக்காத அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு ஜானரை தேர்ந்தெப்பேன். அஜித் சாருடன் 50வது படம் தான் பணியாற்றினேன். அதுக்கு முன்பு அவர் 49 படம் நடித்து இருக்கிறார். ஆனால், அத்தனை படங்களில் இல்லாத வகையில் புதுவகையாக தான் அவரை நான் காட்டினேன். அதுபோல தான், ரஜினி, விஜய், கமல் இவர்கள் சமீபத்தில் செய்த படங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையிலான ஜானராக எடுக்க ஆசை."
இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் இயக்க விருப்பம் உண்டா?
"கண்டிப்பாக ஆசை உண்டு. சமீபமாக கூட பெரியப்பாவின் பயோபிக் செய்ய வேண்டும் என ஒரு பெரிய ஹீரோவிடம் பேசினோம். ஆனால், அது எப்போது எப்படி நடக்கிறது என்பது தெரியவில்லை. பெரியப்பாவிடம் பேசி தான் அதை செய்ய வேண்டும். அவருடைய பயோபிக் என்றால் நிச்சயம் என் அப்பாவின் கதையும் வந்துவிடும். ஒரே படத்தில் இரண்டும் வந்துவிடும்."
சமீபத்தில் சென்னையில் நடந்த இளையராஜா இசைக்கச்சேரியில் கங்கை அமரன், ப்ரேம்ஜி என பலரும் வந்திருந்த போது உங்களை காணவில்லையே?
"அந்த சமயத்தில் ஹைதராபாத்தில் மாட்டி கொண்டேன். பிரேம்ஜி, யுகேந்திரன் என எல்லாருமே எனக்கு அப்டேட் கொடுத்து கொண்டே இருந்தார்கள். துபாய், சென்னை கச்சேரிகளில் இல்லாமல் போனதை கண்டிப்பாக மிஸ் செய்தேன். அப்பா- பெரியப்பா மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. அப்பா தினமும் அண்ணனிடம் பேசினேன் என சொல்லி கொண்டே இருப்பார். அந்த பழைய அன்பே அவர்களது உடல் நிலையை இன்னும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்."
'ஷாட் பூட் த்ரீ' படத்துல நீங்களும் சிநேகாவும் இணைந்து நடிக்கும் கதை பற்றி கூறுங்கள்?
"அருண் இயக்கி இருக்கிறார். அந்த கதையில் கேமியோ போலதான் வருவோம். குழந்தைகளுக்கான படம் அது. நானும் சிநேகாவும் கணவன் மனைவியாக வருகிறோம். கறாரான அம்மா, பிள்ளைக்கும் அம்மாவுக்கும் இடையில் ஜாலியான ஒரு அப்பா என நல்ல கதை அது."
ஆஸ்கர் மேடையில, வில் ஸ்மித் தன் மனைவி குறித்தான உடல் கேலி நகைச்சுவைக்காக கிறிஸ் ராக்கை அறைந்தது பற்றி நீங்கள் ட்வீட் செய்து இருந்தீர்கள். உண்மையில சினிமாவிலும், பொதுவிலும் உடல் கேலி எப்படி கையாளப்படுகிறது என நினைக்கிறீர்கள்?
"அது நாம் வளர்ந்த விதம் என நினைக்கிறேன். முன்பெல்லாம் பழைய படங்களில் கவுண்டமணி செந்தில் காமெடியில் நிறைநிறைய உருவ கேலிகள் இருக்கும். அதெல்லாம் சிறு வயதில் இருந்து பழகி இயல்பான ஒன்றாக்கி விட்டோம். ஆனால், இப்போது இருக்கும் தலைமுறைக்கு தான் அதெல்லாம் தவறு என புரிகிறது. வில் ஸ்மித் மேடையில் அறைந்ததையும் சரி என்று சொல்லவில்லை. வேறு மாதிரி அவர் பேசி இருக்கலாம். கிறிஸ் ராக்கும் ஸ்மித் மனைவிக்கு அப்படி ஒரு நோய் இருக்கிறது என தெரிந்து பேசினாரா என தெரியவில்லை. 'காலம் முழுக்க அந்த வீடியோ எப்படியும் இருக்க போகிறது. ஏன் அப்படி செய்ய வேண்டும்' என கேட்டிருந்தார்கள். அதற்கு தான் நான் 'கிறிஸ் இப்படி உடல் நோயை வைத்து கேலி செய்வது நல்லதா?' என ட்வீட் செய்திருந்தேன். என்னை பொருத்தவரை இரண்டு பேர் செய்ததுமே அந்த சமயத்தில் தவறு தான். என் மகள் சொல்லி தான் உடல் கேலி பிறரை செய்ய கூடாது என உணர்ந்தேன். சாதி, நிற வெறி போல உடல் கேலியும் ஆபத்தானது."
'மன்மதலீலை' படத்தலைப்பு அறிவித்ததில் இருந்து படம் வெளியாகும் முந்தின நாள் வரையுமே அது தொடர்பாக சர்ச்சை வந்து கொண்டே இருந்ததே. என்ன நடந்தது?
"எல்லா வழக்கு பிரச்சனையுமே முடிந்தது. ஒரு படத்திற்கான மத்திய அரசின் சான்றிதழ் என்பது பத்து வருடங்களுக்கு மட்டும் தான். அதற்கு பிறகு அவர்கள் அந்த பெயரை ஒவ்வொரு வருடமும் அவர்கள் மீண்டும் பதிவு செய்து கொண்டே வர வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் யார் வேண்டுமானாலும் அந்த தலைப்பை எடுத்து கொள்ளலாம். அப்படி இருக்கும் போது 'மன்மதலீலை' வந்து 45 வருடங்கள் ஆகிறது என்றால் அதை நீங்கள் பயன்படுத்த முடியும் நிறைய டிவி சீரியல்களுக்கு கூட 'சின்னத்தம்பி' என சினிமா டைட்டிலோடு வரும். இவ்வளவு வருடங்கள் கழித்து பயன்படுத்துகிறார்கள் என்பதால் யாரும் எதுவும் சொல்வதில்லை.
நீங்கள் முன்பு வந்த படத்தின் கதையை இந்த காலத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அந்த ரைட்டரிடம் சென்று நீங்கள் கேட்டு அதற்கான உரிமை தொகையை கொடுக்க வேண்டும் என்பதுதான் நியாயம். நான் 'மன்மதலீலை'யை பதிவு செய்த போது கவுன்சிலில் வேறு யாரும் இதை பதிவு செய்திருக்கிறார்களா என்று தான் பார்ப்பார்கள். இல்லை என்றால் அது நமக்கு தான். அப்படி தான் 'மன்மதலீலை' எனக்கு வந்தது. மற்றபடி பழைய கதைக்கும் இந்த 'மன்மதலீலை'க்கும் எந்த சம்பந்தமும் இல்லை."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்