பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜூ - யார் இவர்?

ராஜு

பட மூலாதாரம், INSTAGRAM @RAJU_JEYAMOHAN

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனின் வெற்றியாளராக ராஜூ அறிவிக்கப்பட்டிருக்கிறார். சின்னத்திரை நடிகராக ராஜூ முன்பு பரிச்சயமானாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை இன்னும் பலருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

யார் இந்த ராஜூ?

திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட ராஜூ தனது நகைச்சுவையான பேச்சுக்காக இந்த சீசனில் அதிகம் உள்ளே போட்டியாளர்களால் விரும்பப்பட்ட ஒரு நபராக இருந்தார். ஒவ்வொரு முறை நாமினேஷனில் வரும்போது அதிக மக்கள் வாக்குகள் பெற்று பெரும்பாலும் முதலில் காப்பாற்றப்பட்ட நபராக இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் வேலைகளை பல நேரங்களில் தட்டி கழிக்கிறார், டாஸ்க்குகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் இருந்தது என்றாலும் அவரது நகைச்சுவை உணர்வுக்காகவும், கோபத்தை கட்டுப்படுத்தி உள்ளே பல பிரச்சனைகளை பொறுமையாக கையாண்டார் என்பதற்காகவும் நடிகரும் பிக்பாஸ் தமிழின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் பலமுறை நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்.

ராஜூவிடம் இருந்து கற்க வேண்டிய முக்கியமான குணம் இது என்றும் போட்டியாளர்கள் பலரும் பல தருணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக ட்விட்டரில் #RajuWinningHearts என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்- கல்லூரி காலம்' தொடரில் நடிகராக அறிமுகமான ராஜூ பின்னர் 'ஆண்டாள் அழகர்', 'சரவணன் மீனாட்சி' ஆகிய சீரியல்களில் கதாநாயகனின் நண்பனாக தனது கலகலப்பான கதாப்பாத்திரம் மூலம் புகழ்பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்துள்ளார். 'துணை முதல்வர்', கவினின் 'நட்புன்னா என்னான்னு தெரியுமா?' ஆகிய படங்களிலும் நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் டிவி பிரபலங்களான ரியோ, கவின், சிவகார்த்திகேயன் ஆகியோர் இவரது நெருங்கிய நண்பர்கள்.

மேலும் இவர் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராகவும் சில காலம் பணிபுரிந்துள்ளார். பாக்கியராஜை தன் குரு என்றும், படம் இயக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்பதையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பு பகிர்ந்திருந்தார். ராஜூவுக்கும் இவரது நீண்ட கால நண்பரான தாரிகாவுக்கும் கடந்த 2020 ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது .

பலகுரல் கலைஞராகவும் வலம் வந்த ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை மக்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு போய் சேர்க்கும் எனவும் அதன் மூலம் எனக்கு நல்ல வாய்ப்புகள் நிறைய வரும் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: