You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமுருகன்பூண்டி: கற்களை கடவுளர்களாக்கும் அற்புதக் கலைஞர்களைக் கொண்ட தமிழர் பூமி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சி, தமிழகத்தின் தொன்மையான சிற்பக்கலைக்கு பெயர்போன பகுதியாக திகழ்கிறது.
இங்கு சுமார் 2000 பேர் வரை கற்சிலைகள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான சிற்பக் கலைஞர்கள் வசிக்கும் பகுதியாக திருமுருகன்பூண்டி இருப்பது இதன் தனித்த அடையாளமாக உள்ளது.
இங்குள்ள திருமுருகநாத சுவாமி கோயிலை மையமாக வைத்து இப்பகுதியில் சிற்பக்கலை பெருகியுள்ளதாக தெரிவிக்கிறார் சிற்பக்கலைஞர் க.ராதாகிருஷ்ணன்.
'திருமுருகன்பூண்டியின் மூத்த சிற்ப கலைஞர்களாக எனது மூதாதையர்கள் திகழ்ந்துள்ளனர். இப்போது இங்கு நிரந்தரமாக வசிக்கும் பெரும்பாலான சிற்பக் கலைஞர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து இங்கு வந்து சேர்ந்தவர்கள். ஒவ்வொரு இடத்திலும் தங்கி அங்கு கோயில்களை உருவாக்கி சிற்பங்களை நிறுவி வந்துள்ளனர்.
அவ்வாறு கோவையில் தங்கி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலை உருவாக்கியுள்ளனர். அங்கிருந்து நகர்ந்து வந்து திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி அருகே திருமுருகநாத சுவாமி திருக்கோவில் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் சிலைகளை நிறுவும் போது, இடம்பெயர்ந்து வந்த சிற்ப கலைஞர்களில் சிலர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். அவ்வாறு திருமுருகநாத சுவாமி கோவிலை சுற்றி எங்களது முன்னோர்கள் தங்கியுள்ளனர்.
இப்படித்தான் திருமுருகன்பூண்டி எனும் பகுதி உருவானதோடு, இப்பகுதி சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற இடமாக தற்போதுவரை திகழ்ந்து வருகிறது' என்கிறார் ராதாகிருஷ்ணன்.
சுமார் ஆறு தலைமுறைகளாக இவரது குடும்பத்தினர் கற்சிற்பங்கள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருமுருகன்பூண்டி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான சிற்பக்கலைக் கூடங்கள் காணப்படுகின்றன. இங்கு வைக்கப்பட்டிருக்கும் கலை நுணுக்கங்கள் நிறைந்த சிற்பங்களை வாங்கவும், புதியதாக ஆர்டர்களை கொடுக்கவும் தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
மகாபலிபுரத்திற்கு நிகராண எண்ணிக்கையில் சிற்பக்கலைக்கூடங்கள் திருமுருகன்பூண்டியில் இருப்பதாக தெரிவிக்கிறார் சிற்பக்கலைஞர் ராதாகிருஷ்ணன்.
'தமிழகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மகாபலிபுரம் சிற்பக்கலையின் வணிகத்திற்கு தலைநகரமாக விளங்குகிறது. அங்கு சிற்பங்கள் விற்பனை சார்ந்த கடைகளும், தொழிற்கூடங்களும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆனால், திருமுருகன்பூண்டியில் சிற்பங்களை உருவாக்கும் சிற்பக்கலை கூடங்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதாவது, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்படும் சிற்பங்கள், மகாபலிபுரத்தில் இருந்து பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான சிற்பக் கலைஞர்களும், சிற்பக்கலை கூடங்களையும் கொண்ட பகுதியாக திருமுருகன்பூண்டி இருக்கிறது' என்கிறார் இவர்.
'சுமார் 226 சிற்பக் கலைக் கூடங்கள் இங்கு உள்ளன. இதில் ஒரு கலைகூடத்திற்கு ஐந்து குடும்பங்கள் என கணக்கிட்டால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திருமுருகன் பூண்டியில் சிற்பக்கலை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்பக் கலைஞர்கள் சிற்பக் கலையின் நுணுக்கங்களை பல தலைமுறைகளாக கற்றுத் தேர்ந்துள்ளதால், இங்கு உருவாக்கப்படும் சிற்பங்களில் கலை நுணுக்கங்களும், அளவுகளும், வடிவங்களும் மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கும். இதன் காரணமாகவே இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன' என கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.
திருமுருகன்பூண்டியில் சிற்பக்கலை கற்றுக் கொண்ட பலர் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பரவி புகழ்பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார்
திருமுருகன்பூண்டியின் மூத்த சிற்பக்கலைஞர் சு.கனகரத்தினம்.
'எனது தாத்தா காலத்தில் சிற்பக்கலை குறித்த தகவல்களை ஓலைச்சுவடியில் எழுதி, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தனர். எனது காலத்தில் சிற்பக் கலை என்பது கல்லூரி பாடமாகவே மாறியது. தொன்றுதொட்டு சிற்பத் தொழிலில் இருப்பதால், சிற்பக் கலை குறித்து கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.
எனது தந்தை காலத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கான சிற்பக் கலைஞர்கள் தான் திருமுருகன்பூண்டியில் இருந்தனர். அவர்களிடமிருந்து பலர் சிற்பக் கலையை கற்றுக்கொண்டு இப்பகுதியில் சிற்பக்கலை கூடங்களை தொடங்கினர். பலர் வெளியூர்களுக்கு சென்று சிற்பக்கலை கூடங்களை அமைத்து சிற்பங்களை உருவாக்கினர்.
திருமுருகன் பூண்டியில் அதிக அளவிலான சிற்பக் கலைஞர்கள் உருவாவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் ஊத்துக்குளி எனும் பகுதி உள்ளது. அங்கு சிற்பங்கள் உருவாக்குவதற்கான தரமான கற்கள் கிடைக்கின்றன.
இப்போதுள்ள போக்குவரத்து வசதிகள், அன்றைக்கு இருக்கவில்லை. பெரும் பாறைகளை மாட்டு வண்டியில் ஏற்றி பயணம் செய்து இங்கு கொண்டுவந்து சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் சிற்பம் உருவாக்குவதற்கு ஏற்ற கற்கள் அருகில் உள்ள பகுதியில் கிடைத்ததால் திருமுருகன்பூண்டி சிற்பக்கலை கூடங்களின் மையமாக விளங்கி வருகிறது' என்கிறார் கனகரத்தினம்.
'கற்சிற்பங்கள் உருவாக்குவதில் தற்போது நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காலத்தில் வெறும் உளி மற்றும் சுத்தியலை கொண்டு மட்டுமே சிற்பங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. கருவிகள் மாறினாலும் சிற்பங்கள் உருவாக்குவதற்கான அடிப்படை ஒன்றுதான். அதை காலங்காலமாக கற்றுவந்த இப்பகுதியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் நவீன கருவிகளின் உதவியோடு மிக நேர்த்தியாக செய்கின்றனர்.
அடுத்தடுத்த தலைமுறையினரும் சிற்பக்கலையை ஆர்வத்தோடு கற்றுக்கொள்வதற்கு இப்பகுதியில் அரசு சார்பில் ஒரு பயிற்சி மையம் துவங்கப்பட வேண்டும்' என கோரிக்கை வைக்கிறார் திருமுருகன்பூண்டியின் மூத்த சிற்பக்கலைஞர் கனகரத்தினம்.
இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் மிகவும் ஆர்வமாக சிற்பக் கலையை கற்று வருகின்றனர். சிறு வயது முதலே சிற்பக்கலை கூடங்களில் இருப்பதால் இயல்பாகவே இக்கலையின் மீது ஆர்வம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர் இங்கு வசிக்கும் இளம் சிற்பக் கலைஞர்கள்.
'நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். மூன்று தலைமுறைகளாக சிற்பக்கலையில் எனது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவயது முதல் இதைப் பார்த்து வளர்ந்ததால் மற்ற தொழில்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. நானும் எனது இரு சகோதரர்களும் சிற்பக்கலைகூடத்தை நடத்தி வருகிறோம்.
இந்த கலையை கற்றுக்கொண்டதால், இது எனக்கான ஒரு தொழிலாக உள்ளது, அடுத்த தலைமுறையினரிடம் சிற்பக்கலையை கொண்டுசேர்க்கும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது' என்கிறார் இளம்சிற்பக்கலைஞர் ஆ.மணிகண்டன்.
சிற்பங்கள் உருவாக்கும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதால் உடல்ரீதியாக நோய்கள் ஏற்படுவதாக இப்பகுதியில் வசித்து வரும் சிற்பக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இத்தொழிலில் அதிக அளவிலான தூசி புகை உருவாவதால் மூச்சுக் குழாய் சார்ந்த தொந்தரவுகள் மற்றும் காதுகளில் அடைப்பு போன்ற இடர்பாடுகள் பெரும்பாலும் ஏற்படுகிறது.
காற்று மாசு காரணமாக இப்பகுதியில் இருந்த ஏராளமான சிற்பக் கலைக் கூடங்கள் பிரதான சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, திருமுருகன்பூண்டியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இடம்பெயர துவங்கியுள்ளன.
எதுவாகினும், திருமுருகன்பூண்டி என்ற பகுதி தங்களின் சிற்பக்கலைக்கான தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர் இங்குள்ள சிற்பக்கலைஞர்கள்.
செய்தியாளர் மற்றும் தயாரிப்பாளர்: மு ஹரிஹரன்
ஒளிப்பதிவு: மதன் பிரசாத்
படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
- காபூல் தாக்குதல் - இதுவரை நடந்தவை: முக்கிய தகவல்கள்
- கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் கண்டுபிடிப்பு: ’நோயின் ஆபத்தை ஒப்பிடுகையில் குறைவு’
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- பூச்சி இனங்களின் அழிவுக்கு காரணமான தெரு விளக்குகள் – ஆய்வாளர்கள் சொல்லும் மாற்று வழி
- கொரோனா வைரஸின் எண்டமிக் நிலையை அடைந்துவிட்டதா இந்தியா? நிபுணர்கள் தரும் விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்