கௌதம் மேனன் பேட்டி: "விடிவி இரண்டாம் பாகத்தின் ஹீரோ சிம்புதான்"

பிரசுரிக்கப்பட்டது

பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இவர் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே 'கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற குறும்படத்தையும் இயக்கியிருந்தார் கெளதம் மேனன். பிபிசி தமிழுக்காக அவர் அளித்த பேட்டியில் இருந்து…

கே : இந்த நேரத்தில் குறும்படம் எடுக்க வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது?

ப : குறிப்பிட்டு இந்தக் குறும்படத்திற்கென எதுவும் எழுதவில்லை. நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் குறும்படமாக எடுக்கலாம் என நினைத்தேன். அப்படி எடுக்கலாம் என்றால் எப்படி சமூக இடைவெளியை பயன்படுத்தி எடுக்க முடியும் என எல்லாவற்றையும் யோசித்தேன். எடுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதனால்தான் இந்தக் குறும்படத்தை இயக்கினேன்.

கே : தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு தடை ஏற்படும். அப்படி தடை ஏற்படும்போது அதனை எப்படி கடந்து வருவீர்கள்?

ப : வரும்.. வந்திருக்கு.. இனியும் வரும். இப்பொழுது இந்த ஊரடங்கு காலத்தில் எல்லோருடைய வேலையையும் நிறுத்தி வைத்துவிட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறோம். வாழ்க்கையில் பல விஷயங்கள் நம் பாதையில் தடையாக வரும். அதையெல்லாம் நாம் கடந்து தான் வந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு விஷயம் நமக்கு கிடைக்கவில்லை என்றால் அல்லது செய்ய முடியவில்லை என்றால் அதற்கு அடுத்தது என்ன என நம்முடைய மனதிலேயே அதை அடைவதற்கு வேறு வழி இருக்கும்.

அதை கற்றுக் கொள்வதற்கான தருணமாகத்தான் நான் இதை பார்த்தேன். வீட்டில் நிறைய நேரம் இருக்கிறேன். தோணும்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நிறைய படிப்பதற்கும், பல விஷயங்கள் தெரிந்து கொள்வதற்குமான நேரமாக இதை பயன்படுத்துகிறேன்.

கே: பொதுவாக உங்களுடைய படங்களில் பெண்களை வர்ணிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறும். ஆனால், இந்தக் குறும்படத்தில் பெண்களை வசைபாடும் வார்த்தை ஒன்றை பயன்படுத்தி உள்ளீர்களே?

ப : அந்த வார்த்தையை முதலில் அவள்தான் சொல்கிறாள். அந்த இடத்தில் நகைச்சுவைக்காகத்தான் அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கோபத்துடன் திட்டுவதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. திட்டுவது சரியா, தவறா என்கிற வாதத்துக்குள் நான் போகவில்லை. இது கள்ளக்காதல் அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. கார்த்திக் என்கிற கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும். அவங்களுடைய சூழ்நிலையில் இப்படித்தான் அவர்கள் பேசிக் கொள்வார்கள். மற்றவர்களால் இப்படி பேசமுடியாது. எனக்கு பிடித்திருந்தது, நான் எழுதினேன்.

கே : இந்தக் குறும்படத்திற்கு பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. அதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ப : விமர்சனங்கள் சரியானவைதான். எப்பொழுதும் நல்ல விஷயமாகத்தான் நினைக்கிறேன். இதை எழுதும்போதே இதில் நடித்தவர்கள் எல்லோரும் இதுகுறித்து கலந்து ஆலோசித்தோம். மூன்று பேரும் சேர்ந்துதான் இதனை முடிவெடுத்தோம்.

ரஹ்மானிடம் இதனை சொன்னபோது அவரும் கதையைப் பார்த்துவிட்டு சூப்பர் என்று சொல்லித்தான் இசையமைத்துக் கொடுத்தார். எங்களுக்குப் பிடித்திருந்தது, நாங்கள் பண்ணினோம். இதில் வரும் பாதி மீம்ஸ் பெய்ட் மீம்ஸ் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும், பரவாயில்லை.

கே : விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறதே?

ப : விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்திலும் சிம்பு தான் கார்த்திக்காக நடிப்பார்.

கே : அடுத்த திட்டம்?

ப : 'ஜோஸ்வா இமை போல் காக்க', 'துருவ நட்சத்திரம்' இந்த இரண்டு படங்களுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு படங்களும் இந்த வருடத்திற்குள் வெளியாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: