தமிழர் பிரச்னையில் இலங்கை புதிய ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? சீனா பக்கம் சாய்வாரா?

காணொளிக் குறிப்பு, இலங்கையின் புதிய ஜனாதிபதி - அநுர குமார திஸாநாயக்க யார்?
தமிழர் பிரச்னையில் இலங்கை புதிய ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? சீனா பக்கம் சாய்வாரா?
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க, இலங்கையில் இடதுசாரி கட்சி ஒன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆவார். அவர், 2000-ம் ஆண்டில் முதன் முதலாக இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார், 2014ம் ஆண்டு ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தி சார்பாக 2019ம் ஆண்டு போட்டியிட்ட அவர் 3% வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ தேர்வான நிலையில், ஊழலுக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். இதனால், அவருக்கான ஆதரவுத்தளம் வலுவடைய ஆரம்பித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியின்போது நடந்த போராட்டங்களிலும் அநுர குமார முன்னணியில் இருந்தார்.

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அநுர குமார திஸாநாயக்க போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர்.

அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் பெருமளவு கூட்டம் திரண்டது. கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒருவர், 2024 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

தற்போது அவர் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் தலைமை வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் கடந்த காலம் வன்முறைகளால் நிறைந்தது.

கடந்த 1971இல் பண்டாரநாயக அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அதேபோல, 1987 - 89 காலப் பகுதியில் இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கலகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

ஆனால், 2014இல் ஜே.வி.பியின் தலைவரான பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியின் கடந்த கால வன்முறைகளுக்காக மன்னிப்பு கோரினார் அநுர. அக்கட்சி இலங்கையில் நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்பு கோரியது அதுவே முதலும் கடைசியுமாக இருந்தது.

இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதற்காக 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டது.

நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மாகாண சபைகளுக்கு அளிக்கிறது. ஆனால், இதுவரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்குப் பயணம் செய்த அநுர குமார, யாழ்ப்பாணத்தில் பேசினார். அப்போது, "நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன். பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க வரவில்லை" என்றார். இது அந்தத் தருணத்தில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

ஆனால், தேர்தலுக்கு நெருக்கமாக அநுர குமார தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டார்.

ஜூன் மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுர. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார்.

ஆனால், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது.

ஆனால், தற்போதைய புதிய சூழலில் அக்கட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவை விட சீனாவுடன் நெருக்கம் காட்டுவாரா, இலங்கைத் தமிழர் பிரச்னையில் அவரது நிலைபாடு கடந்த காலங்களில் என்னவாக இருந்தது என்பது குறித்து பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. திஸாநாயக்க குறித்த தகவல்களுடன் அவரது முழு பின்னணி இந்த காணொளியில் வழங்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)