வங்கதேசம்: நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா - பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்

வங்கதேசம்: நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா - பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

வங்கதேசத்தில் அரசுப் பணியில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம் வலுப்பெற்று, நாளடைவில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரானதாக மாறியது.

அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். வங்கதேசம் முழுவதும் தீவிரமடைந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வங்கதேசம் முழுவதும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. ஆகஸ்ட் 5ஆம் தேதி திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டனர்.

வங்கதேச விடுதலைப் போராட்டத் தலைவரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமானதை உணர்ந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன், நாட்டை விட்டே வெளியேறியும் விட்டார். ஹெலிகாப்டரில் அவர் சகோதரியுடன் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த டிவி, நாற்காலி, மேசை போன்ற பொருட்களை எடுத்து சென்றனர்.

மறுபுறம், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசினா ராஜினாமா செய்ததை, டாக்காவில் போராட்டக்காரர்கள் கொண்டாடினர்.

"நாட்டின் 16 கோடி அல்லது 18 கோடி மக்களுக்கு என்ன தேவையோ அதை இன்று பெறுகிறோம். அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளன, அரசின் வீழ்ச்சியை அனைவரும் கொண்டாடுகின்றனர். இது ஒரு வரலாற்றுத் தருணம்," என்று அவர்கள் கூறுகின்றனர்.

அசாதாரண சூழலுக்கு மத்தியில், வங்கதேச ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் (Waker uz Zaman) தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று கூறிய அவர், எதிர்க்கட்சி தலைவர்களிடமும் பேசியிருப்பதாக தெரிவித்தார். இந்த இடைக்கால அரசை யார் தலைமை தாங்கி நடத்தப் போகிறார் என்பது இன்னும் தெரியவரவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)