சூரிய கிரகணத்தின் போது 3 ராக்கெட்டுகளை ஏவும் நாசா - எதற்காக தெரியுமா?
இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம்.
சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, அது சூரியனை மறைப்பதல் நாம் கிரகணத்தைக் காண்கிறோம்.
சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் முக்கியமானது. ஏனெனில், இந்த நிகழ்வை லடசக்கணக்கான மக்கள் காண முடியும். இந்த கிரகணத்தை 31 லட்சம் பேர் பார்க்க முடியும் என ஒரு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள என்.சி. ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த கிரகணத்தின் போது வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வில், டெக்சாஸ் மாகாண உயிரியல் பூங்காவில் உள்ள 20 விலங்குகளின் நடத்தை ஆய்வு செய்யப்படும்.
நாசாவின் எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் (Eclipse Soundscapes) திட்டமும் விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
கிரகணத்தின் காரணமாக ஏற்படும் முழு இருளில் விலங்குகளின் சத்தம் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்ய மைக்ரோஃபோன் போன்ற சிறிய உபகரணங்களை பொருத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
நாசா என்ன செய்யப் போகிறது?
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் தளத்தில் இருந்து கிரகணப் பகுதியில் இருந்து மூன்று ஆராய்ச்சி ராக்கெட்டுகள் ஏவப்படும்.
எம்ப்ரி ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோஹ் பர்ஜாத்யா இந்தப் பரிசோதனையை முன்னின்று நடத்துகிறார். சூரிய கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த ராக்கெட் பதிவு செய்யும்.
மூன்று ராக்கெட்டுகளும் பூமியில் இருந்து 420 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று பின்னர் பூமியில் விழுந்துவிடும். முதல் ராக்கெட் கிரகணத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், இரண்டாவது ராக்கெட் கிரகணத்தின் போதும், மூன்றாவது ராக்கெட் கிரகணம் முடிந்த 45 நிமிடங்களுக்குப் பிறகும் ஏவப்படும்.

பட மூலாதாரம், Getty Images
சூரிய கிரகணத்தைப் படம் எடுக்கும் நாசா விமானம்
நாசாவின் அதிக உயரத்தில் பறக்கும் ஆய்வு விமானம் 50,000 அடி உயரத்தில் இருந்து கிரகணத்தைப் புகைப்படம் எடுக்கும். பல உபகரணங்களும் இந்த விமானங்களில் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், கிரகணத்தின் போது வளிமண்டல மற்றும் தட்பவெப்ப மாற்றங்களை பதிவு செய்ய எக்லிப்ஸ் பலூன் (Eclipse Balloon) திட்டமும் செயல்படுத்தப்படும்.
சுமார் 600 பலூன்கள் வளிமண்டலத்தில் பறக்க விடப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 35 கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த பலூன்களில் உள்ள பல்வேறு கருவிகள் கிரகணத்தின் விளைவுகளை பதிவு செய்யும்.
இது தவிர, பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசாவின் சோலார் ஆர்பிட்டர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றில் உள்ள விண்வெளி வீரர்களும் இந்த கிரகணத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வார்கள்.
சூரிய கிரகணத்தைக் காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி அருகே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



