ரஷ்யாவுக்குள் 1,000 ச.கி.மீ. பரப்பை கைப்பற்றிய யுக்ரேன் - புதின் பற்றி பைடன் கூறியது என்ன?

ரஷ்யாவுக்குள் 1,000 ச.கி.மீ. பரப்பை கைப்பற்றிய யுக்ரேன் - புதின் பற்றி பைடன் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யா- யுக்ரேன் போரில் முக்கிய திருப்பமாக ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக யுக்ரேன் அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் யுக்ரேனின் ராணுவ நடவடிக்கை இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் பெல்கொராட் (Belgorod) மாகாண ஆளுநர், அங்கு அவசர நிலையை அறிவித்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, யுக்ரேனின் எல்லை தாண்டிய தாக்குதல் ரஷ்ய அதிபர் புதினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா- யுக்ரேன் போர் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திடீர் திருப்பமாக கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ரஷ்யாவின் கர்ஸ்க் (Kursk) மாகாணத்திற்குள் யுக்ரேனிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தின. யுக்ரேனிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் ரஷ்யாவிற்குள் 1000 சதுர கிலோ மீட்டர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும் யுக்ரேனின் மூத்த கமெண்டரான ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi) தெரிவித்தார். 74 நகரங்கள் மற்றும் கிராமங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக யுக்ரேன் கூறுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யா பிற நாடுகளுக்கு போரை கொண்டு வந்தது; தற்போது ரஷ்யாவுக்குள் போர் நுழைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அதேநேரம், ரஷ்ய மக்களுக்கு எதிராக யுக்ரேன் குற்றங்களை இழைத்து வருவதாகவும் தகுந்த பதிலடியை யுக்ரேன் பெறும் என்றும் ரஷ்ய அதிபர் புட்டின் எச்சரித்துள்ளார்.

யுக்ரேன் ஏவிய 117 ட்ரோன்களையும் 4 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. மறுபுறம், ரஷ்யா ஏவிய 23 ட்ரோன்களில் 17 ட்ரோன்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் கர்ஸ்க்கைத் தொடர்ந்து மற்றொரு யுக்ரேன் எல்லையோர மாகாணமான பெல்கொராட்டிலும் (Belgorod) அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்மாகாண ஆளுநர் Vyacheslav Gladkov தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், யுக்ரேனிய தாக்குதல் நிலைமையை கடினமாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யுக்ரேனின் தாக்குதலில் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், யுக்ரேனிய படைகள் பெல்கொராட்டை நோக்கி செல்வதாக உறுதிப்படுத்தப்பட்ட எவ்வித தகவலும் இல்லை.

ரஷ்யாவுக்குள் யுக்ரேன் நடத்தும் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த 6 முதல் 8 நாட்களாக யுக்ரேனின் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு 4 அல்லது 5 மணி நேரங்களுக்கு ஒருமுறை தனக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிட்டார். யுக்ரேனின் தாக்குதல் புட்டினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)