You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் புகார்கள்: பாஜக எம்.பி மீது வழக்கு பதிவு செய்தாலும் போராட்டம் தொடரும்: மல்யுத்த வீராங்கனைகள்
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதான விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு பல பிரபலங்களின் ஆதரவு கிடைக்கத் தொடங்கி உள்ளது.
இந்த வழக்கில் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தபோது இந்த ஆதரவின் விளைவை பார்க்க முடிந்தது.
இந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிப்பல் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, வீதிக்கு வந்து இந்திய வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கான ஆதரவு சக வீரர்கள் தரப்பில் இருந்தும் அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலையில், டெல்லி காவல்துறையினர், வெள்ளிக்கிழமை மாலையில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, இந்த விவகாரத்தில் மொத்தம் இரண்டு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு உள்ளன. முதலாவது வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தொடர்புடைய இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் சிறுமியின் குற்றச்சாட்டின் அடிப்படையில் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது வழக்கு பெண்களின் மாண்பை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரிஜ் பூஷனுக்கு எதிராக மற்ற வீராங்கனைகள் அளித்துள்ள புகார்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் பிரணவ் தயாளின் பெயரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்ட களத்தில் உள்ள வீராங்கனைகள், "காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதை கேள்விப்பட்டோம். ஆனால், அதை வைத்து எங்களுடைய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மாட்டோம். பிரிஜ் பூஷன் கைது செய்யப்டும் வரை போராட்டம் தொடரும்," என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் ஒலிம்பியன் அபினவ் பிந்த்ரா ஆகியோர் இந்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். பிரபல நடிகர் சோனு சூட்டும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்