அதிமுகவை வழிநடத்துவது யார்? ஆர்எஸ்எஸ் பற்றி எம்ஜிஆர் என்ன சொன்னார்?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"சமூக சேவையில் நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம், அ.தி.மு.கவை வழிநடத்துவதில் என்ன தவறு?" என, ஆகஸ்ட் 27 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வியெழுப்பியது பேசுபொருளாக மாறியுள்ளது.

'பெரியார் வழிவந்த இயக்கம் (அதிமுக) ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிநடத்தப்படுவது கவலைக்குரியது' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

ஆனால், 'நாங்கள் யாருக்கும் அடிமையில்லை' என அ.தி.மு.க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்.முருகனின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "எம்.ஜிஆர் ஆரம்பித்த அந்தக் கட்சியை தற்போது கட்டிக் காப்பது யார்?" என அ.தி.மு.க பெயரைக் குறிப்பிடாமல் கேள்வி எழுப்பினார்.

"இன்று அந்தக் கட்சியின் நிலையை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்ன வேடம் போட்டு பா.ஜ.க வந்தாலும் அவர்களின் வித்தை வேலைக்கு ஆகாது" என மாநாட்டில் பேசிய விஜய், பொருந்தா கூட்டணியாக பா.ஜ.க கூட்டணி உள்ளதாகவும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசும்போது, "மக்கள் சக்தி நம்மிடம் திரண்டு நிற்கும்போது அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதற்கு?" எனக் கேள்வியெழுப்பினார்.

"ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் அடிபணிந்து கொண்டு இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம்முடைய கூட்டணி இருக்காது" எனவும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை அவர் விமர்சித்தார்.

தவெக தலைவரின் பேச்சு தொடர்பாக, சென்னையில் புதன்கிழமையன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எல்.முருகனின் பேச்சும் எதிர்ப்பும்

இதற்குப் பதில் அளித்த எல்.முருகன், "ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்துகளை ஒருவர் கேட்பது என்பது வரவேற்கத்தக்கது. சேவைக்காக நூறாண்டுகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உள்ளது. அந்த அமைப்பு அ.தி.மு.கவை வழிநடத்துவதில் என்ன தவறு?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசும்போது, "ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அம்பேத்கர், நேரு உள்ளிட்டோர் புகழ்ந்து பேசியுள்ளனர். நடிகர் விஜய் கூறுவதைப் போல ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்துகளை அ.தி.மு.க கேட்பது நல்லது தான்" எனத் தெரிவித்தார்.

எல்.முருகனின் பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, " பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்றுவிட்டதற்கு இதுவே சான்றாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

"அ.தி.மு.கவை பெரியார் வழிவந்த திராவிட இயக்கம் என்று தான் தமிழ்நாடு நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த இயக்கத்தை கோல்வால்கர், சாவர்க்கர் வழிவந்தவர்கள் வழிநடத்தலாம். அதனால் தவறு இல்லை எனக் கூறும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது கவலையளிக்கிறது" எனவும் திருமாவளவன் கூறினார்.

"எல்.முருகனின் கருத்து சரியா... தவறா என்பதை அ.தி.மு.க பொதுச்செயலாளர் தான் பதில் சொல்ல வேண்டும்" எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

'எம்.ஜி.ஆர் கூறியது தான் முக்கியம்' - ஷ்யாம்

"ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வழிகாட்டுவதாகக் கூறுவதைவிட அ.தி.மு.கவுக்கு வேறு அவமானம் எதுவும் தேவையில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ் குறித்து எம்.ஜி.ஆர் என்ன கருத்தை முன்வைத்தார் என்பது தான் அ.தி.மு.கவுக்கு முக்கியம். பிரதமர் மோதியோ, எல்.முருகனோ என்ன கருத்தை முன்வைக்கின்றனர் என்பது முக்கியமல்ல" என்கிறார்.

1983 ஆம் ஆண்டில் இந்து முன்னணி ஊர்வலத்துக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அனுமதி மறுத்துவிட்டு, அதற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் விளக்கியதாகவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

"எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி நாளேடுகளில் வெளிவந்துள்ளது. டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் அவர் தங்கியிருந்தபோது, மண்டைக்காடு கலவரம் தொடர்பாக இந்து அமைப்பினர் சிலர் தன்னைப் பார்க்க வந்ததாகவும் அப்போது, 'எம்.ஜி.ஆர் ஒழிக' என முழக்கம் எழுப்பியதாகவும் அவர் பேட்டியளித்தார்" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

மண்டைக்காடு கலவரம் என்பது 1980களின் முற்பகுதியில் இந்து-கிறிஸ்தவர்கள் இடையேயான மோதலைக் குறிக்கிறது.

"இது தான் ஆர்.எஸ்.எஸ் நடைமுறையா எனக் கேள்வி எழுப்பிய எம்.ஜி.ஆர், ஊர்வலத்துக்கு தடை போடும் அளவுக்கு அவர்கள் நடந்து கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் கருத்தைத் தான் அ.தி.மு.க ஏற்றுக் கொள்ள வேண்டும்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

"ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்ந்த உணர்வுகள் வடஇந்தியாவில் உள்ளன" எனக் கூறும் ஷ்யாம், "தமிழ்நாட்டின் அரசியல் என்பது முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஊன்றிவிடாமல் பார்த்துக் கொண்டனர். மதநல்லிணக்கத்தை சீர்குலைத்துவிடுவார்கள் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் பற்றிய குற்றச்சாட்டாக உள்ளது" என்கிறார்.

'அ.தி.மு.க அனுசரித்துச் செல்கிறது'

"தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்ற பிறகு திராவிட இயக்கக் கொள்கையில் இருந்து அ.தி.மு.க சற்று நீர்த்துப் போய்விட்டது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி.

2001-2006 அ.தி.மு.க ஆட்சியில் மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை ஆகியவற்றை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்தார்.

இதனை மேற்கோள் காட்டிப் பேசிய தி.சிகாமணி, " 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இவற்றை வாபஸ் பெற்றுவிட்டார். பகுத்தறிவுக் கொள்கைக்கு மாறாக ஜெயலலிதா ஆட்சியில் சில விஷயங்கள் நடந்தன. அவர் அதனை வாபஸ் பெற்றுவிட்டாலும் அதன் தாக்கம் என்பது அக்கட்சிக்குள் அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்க்கிறது" என்கிறார்.

"கடந்த அ.தி.மு.க ஆட்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றில் அரசியல்ரீதியாக பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுத்தது. அரசியல்ரீதியான நிர்பந்தங்களால் பா.ஜ.கவிடம் அ.தி.மு.க அனுசரித்துச் செல்கிறது" எனவும் தி.சிகாமணி குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சால் எழுந்த சர்ச்சை

இந்துத்துவ அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்து வருவதாக பிபிசி தமிழிடம் கூறிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "அறநிலையத்துறையின் வருவாயில் இருந்து கல்வி நிலையங்களைக் கட்டுவதை எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நிலைப்பாட்டுக்கு எதிரானது" என்கிறார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் கோவையில் பேசிய அவர், "கோவிலைக் கண்டாலே கண்ணை உறுத்துகிறது. அதில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். நல்ல உள்ளம் படைத்தவர்கள், உண்டியலில் பணம் போடுகிறார்கள். அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். அரசாங்கப் பணத்தில் கட்ட முடியாதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதையெல்லாம் ஒரு சதிச் செயலாக மக்கள் பார்ப்பதாகவும் தனது பேச்சில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். அவரது விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தவே, அரசின் சார்பில் கல்லூரிகளைக் கட்ட வேண்டும் என்பதற்காகவே தான் இவ்வாறு பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

அறநிலையத்துறைக்கு எதிராக இந்து அமைப்பினர் தொடர்ந்து பேசி வருவதையே எடப்பாடி பழனிசாமியின் பேச்சு உணர்த்துவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

"ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்களை அ.தி.மு.க பின்பற்றுவதில்லை. ஆனால், அரசியல்ரீதியாக தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பா.ஜ.க உடன் இணைந்து செல்கின்றனர்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி.

'எல்.முருகனின் கருத்தில் எந்த தவறும் இல்லை' - பா.ஜ.க

ஆனால், "எல்.முருகன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை" என்கிறார், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திராவிட இயக்கங்களில் பெரியார், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை ஒரே நேர்க்கோட்டில் பார்க்கிறோம். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நாங்கள் வேறு நேர்க்கோட்டில் பார்க்கிறோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

"திராவிடர் கழகத்தில் இருந்தபோது திராவிட நாடு கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு தேசிய மனப்பான்மையை வளர்த்துக் கொண்டார். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்" எனக் கூறும் இராம.சீனிவாசன், "அ.தி.மு.கவை அனைத்திந்திய அண்ணா தி.மு.க என எம்.ஜி.ஆர் மாற்றினார்" என்கிறார்.

"1983 ஆம் ஆண்டில் இந்து முன்னணி ஊர்வலத்துக்கு எம்.ஜி.ஆர் தடை விதித்ததன் பின்னணியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக இருந்திருக்கலாம்" எனக் கூறுகிறார் இராம.சீனிவாசன்.

கர்நாடக மாநிலம், கொல்லூரில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு எம்.ஜி.ஆர் வழிபடச் செல்வது தொடர்பாக கேள்வி எழுந்தபோது, "இந்துவாக இருந்து கொண்டு ஏன் போகக் கூடாது" என எம்.ஜி.ஆர் கேள்வியெழுப்பியதாகவும் இராம.சீனிவாசன் குறிப்பிட்டார்.

"சினிமா நடிகர் இவ்வாறு பேசியிருந்தால் அது பெரிதல்ல. ஆனால், திராவிடப் பின்னணியில் இருந்து வந்த ஒருவர் பேசியது மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களைப் பலமுறை எம்.ஜி.ஆர் சந்தித்துள்ளார்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்த மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "கோவிலுக்குச் செல்வதை எம்.ஜி.ஆர் விமர்சனம் செய்ததில்லை. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மட்டுமே அவர் விமர்சித்தார்" என்கிறார்.

'நான் ஏன் பிறந்தேன்?' என்ற நூலில் இதை எம்.ஜி.ஆர் பதிவு செய்துள்ளதாகக் கூறும் ஷ்யாம், "கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் அம்மன் கையில் இருக்கும் ஒரு வாள் அவர் நன்கொடையாக அளித்தது. பெரியார் வழியில் வந்தாலும் கடவுள் மறுப்புக் கொள்கையை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை" என்கிறார்.

'நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை' -செல்லூர் ராஜூ

எல்.முருகனின் பேச்சு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், டி.ஜெயக்குமார் ஆகியோரைத் தொடர்பு கொண்டும் பதில் பெற முடியவில்லை.

அதேநேரம், மதுரையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "தனது கொள்கையில் இருந்து அ.தி.மு.க வழுவாது என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுக்கென்று கொள்கைகள் உள்ளன. அதன்படி எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடந்து கொண்டனர். அவர்களின் வழியை எடப்பாடி பழனிசாமி பின்பற்றி வருகிறார்" எனக் கூறினார்.

"எங்களுக்கு யாரும் எஜமானர்கள் அல்ல. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை" எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு