ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்பிய போயிங் ஸ்டார்லைனர் - சுனிதா வில்லியம்ஸ் வருவது எப்போது?
ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.
இந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில்தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகில் சென்றபோது அதில் சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோருடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டதால், அதில் வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.
இதனால், அவர்களின் எட்டு நாட்கள் பயணம் எட்டு மாதங்களாக நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு 6 மணிநேரம் எடுத்தது.
பூமியின் வளிமண்டலத்தில் அந்த விண்கலம் மீண்டும் நுழைந்த பின்னர், நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் மெதுவாகத் தரையிறங்கும் விதமாக பாரசூட்கள் பயன்படுத்தப்பட்டன.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் இருவரும் அவர்களுடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
"இருவரும் இந்த விண்கலம் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர்," என நாசாவின் திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் தெரிவித்தார்.
தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்குக் கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.
முன்னதாக, ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கான சோதனைகளை நாசாவும் போயிங் நிறுவனமும் செய்திருந்தன. செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். செப்டம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்க உள்ள ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ 9 விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக விடப்படும்.
"விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும். அந்த வகையில்தான், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டார்கள். அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்யப்பட்டது.", என்று நாசா அதிகாரி பில் நெல்சன் கூறியிருந்தார்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



