You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் விஜய் நடிப்பதை நிறுத்துவதால் சினிமாவுக்கு என்ன இழப்பு?
அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது அடுத்த திரைப்படத்துடன் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தமிழ் திரைத் துறையை எந்த அளவுக்கு பாதிக்கும்?
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் துவங்கியிருப்பதாகவும் அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமென்றும் அறிவித்திருக்கும் நடிகர் விஜய், "அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல. அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. எனவே ஏற்கனவே நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஸ்நேகா, லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. இது விஜய் நடிக்கும் 68வது படம்.
இந்தப் படத்திற்குப் பிறகும் ஒரு படம் நடிக்கப்போவதாக விஜய் சொல்லியிருக்கிறார். அந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு நடிக்கப் போவதில்லை என தற்போது விஜய் அறிவித்திருக்கிறார்.