வெப்பமண்டல சூறாவளிகள் வங்காள விரிகுடாவில் அதிகம் ஏற்படுவது ஏன்?

புயல் சேத பின்னணியில் ஒரு பெண் நடந்து செல்லும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகிலேயே மிகப் பெரிய கடற்கரைப் பகுதி வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. சுமார் 50 கோடி மக்கள் இந்தக் கடலோரப் பகுதியில் வசிக்கின்றனர்.

அதேபோல், உலக வரலாற்றில் மிகக் கொடிய புயல்களை எதிர்கொள்வதும் இந்தக் கிழக்குக் கடற்கரைப் பகுதிதான்.

வானிலை விவரங்களை வழங்கும் 'வெதர் அண்டர் கிரவுண்ட்' (Weather Underground) என்ற இணையதளத்தில் இந்தக் கடற்கரை தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

இந்த இணையதளத்தின்படி, உலக வரலாற்றில் மிகக் கொடிய 35 வெப்ப மண்டல சூறாவளி புயல்களில் 26 பெரும் புயல்கள் இந்தக் கடற்கரைப் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளன.

தற்போது வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடல் கரையை கடந்து வந்து ஆர்ப்பரிக்கும் காட்சி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கொந்தளிப்பான கடல் (சித்தரிப்புப் படம்)

வங்காள விரிகுடா ஏன் மையமாக மாறுகிறது?

கொடிய புயல்கள் வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்றன என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு ஆழம் குறைவாக இருப்பதுடன், கடற்கரைப் பகுதி ஒருபுறம் சாய்ந்தும், பள்ளமாகவும் அமைந்துள்ளது.

பொதுவாகப் புயலின்போது வீசும் பலத்த காற்று, கடல் நீரை வலுவாகக் கரை நோக்கித் தள்ளுகிறது. இதன் விளைவாக, அலையின் வேகம் திடீரென அதிகரித்து, புயல் நேரடியாகக் கரையைத் தாக்குகிறது.

இந்த வகையான புவியியல் சூழ்நிலைகளுக்கு வங்காள விரிகுடா ஒரு தெளிவான உதாரணம் என்று 'வெதர் அண்டர் கிரவுண்ட்' கட்டுரையாளரும், புகழ்பெற்ற வானிலை ஆய்வாளருமான பாப் ஹென்சன் என்னிடம் கூறினார்.

வங்காள விரிகுடாவின் மேற்பரப்பில் வெப்பநிலை எப்போதும் அதிகமாக இருப்பதும் இந்தச் சூழ்நிலைக்கு ஒரு காரணம். இதன் விளைவாகத் தீவிரப் புயல்கள் ஏற்படுகின்றன.

"அங்கு வெப்பநிலையின் அளவு மிக அதிகமாக உள்ளது," என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைவர் டி. மகாபாத்ரா தெரிவித்தார்.

கடற்கரையோரமிருந்து கடலை பார்க்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

உலகளவில் இதுபோன்ற பெரும் புயல்கள் ஏற்படும் மேலும் சில கடலோரப் பகுதிகளும் உள்ளன. அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள வளைகுடா கடலோரப் பகுதி இதற்கு ஒரு உதாரணம்.

"வங்காள விரிகுடாவின் வடக்கு கடற்கரை பூமியில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பேரழிவு தரும் அலைகளுக்கு ஆளாகிறது" என்று ஹென்சன் கூறினார்.

கிழக்குக் கடலோரப் பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதும் பெரும் சேதத்திற்குக் காரணமாக அமைகிறது. மேலும், உலகளவில் நான்கு பேரில் ஒருவர் கடலோரப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர்.

புயலை சித்தரிக்கும் ஒரு படம் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புயலை சித்தரிக்கும் ஒரு படம் (கோப்புப் படம்)

பெரும் புயல்களால் பல பேரிடர்கள் ஏற்படுகின்றன. பலத்த காற்றால் இயற்கையான சேதங்கள் அதிகமாக இருக்கும். மேலும், கடலில் அலைகள் தீவிரமாக இருக்கும். இந்த இரண்டோடு, கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது.

பொதுவாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் அடிக்கடி புயல்கள் வந்தாலும், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அளவிலான தீவிரம் கொண்ட புயல்கள் தாக்குகின்றன.

1970 நவம்பரில் ஏற்பட்ட 'போலா' (Bhola) சூறாவளி, உலக வரலாற்றிலேயே மிகக் கொடிய புயல்களில் ஒன்றாகும். வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட இந்தப் புயலால் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்தப் புயலின்போது கடலோரப் பகுதியில் அலைகள் சுமார் 34 அடி உயரத்திற்கு எழும்பின.

புயலின் தீவிரத்தால் சாய்ந்திருக்கும் மரங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, புயலின் தீவிரத்தை காட்டும் ஒரு படம் (கோப்புப் படம்)

கடந்த சில தசாப்தங்களாக வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல்களின் தீவிரம் அதிகரித்து வருவதாக ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் அம்ரித் கூறினார்.

2008 மே மாதத்தில் பர்மா கடற்கரையில் ஏற்பட்ட 'நர்கிஸ்' (Nargis) புயலால் சுமார் 1,40,000 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

"மை கொண்டு வரையப்பட்ட வண்ண ஓவியத்தின் மீது திடீரென ஒரு வாளி தண்ணீரைக் கொட்டியது போல் இருந்தது. மிகவும் கவனமாக வரையப்பட்ட கோடுகள் அனைத்தும் (டெல்டா கால்வாய்கள்) முற்றிலும் அழிக்கப்பட்டன. கீழே இருந்த காகிதம் முழுவதும் கிழிந்து போனது போல் இருந்தது," என்று ஒரு பத்திரிகையாளர் அன்றைய அழிவைப் பற்றி விவரித்தார்.

கருமேகங்கள் சூழ்ங்த  கொல்கத்தா

பட மூலாதாரம், Nayana Majumdar

படக்குறிப்பு, கொல்கத்தா நகரின் மீது கருமேகங்கள் (கோப்புப் படம்

கடைசியாக, 1999-இல் 'சூப்பர் சைக்ளோன்' இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைத் தாக்கியது. அந்தப் புயலின் தாக்கத்தால் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.

எங்கு பார்த்தாலும் அழுகிய சடலங்கள், சுடுகாடுகளில் வானை நோக்கி எழும் புகை... அப்போதைய புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணித்தபோது நான் கண்ட காட்சிகள் இவை.

அன்றைய பயங்கரமான நிலை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு சூப்பர் புயலின் தாக்கத்தால் நிலைமைகள் எவ்வளவு மோசமாக மாறும் என்பதை நான் முதன்முறையாக அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு