You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க மாணவர் போராட்டத்தில் மோதல் - 1000-க்கும் மேற்பட்டோர் கைது - காணொளி
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் மாணவர்களைக் கலைப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் உள்ளே நுழைந்தனர்.
பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு கூடத்தில் இருந்த மாணவர்களை அகற்றுவதற்காக போலிசார் ஏணியில் ஏறிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாகவே, போராடும் மாணவர்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும் அல்லது அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது.
இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதலால் மனிதாபிமானச் சிக்கல்கள் தீவிரமடைந்து வருவதால், கொலம்பியா பல்கலைக்கழகம் இஸ்ரேலில் இருக்கும் தனது மூலதனங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என போராடும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்தும், பாலத்தீனத்திற்கு ஆதரவகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)