நீட் தேர்வு: வட மாநிலங்களில் எதிர்ப்பும் போராட்டங்களும் ஏன்?

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டுமெனில் கட்டாய பொது நுழைவுத் தேர்வான நீட் எழுத வேண்டும்.
நீட் தேர்வு: வட மாநிலங்களில் எதிர்ப்பும் போராட்டங்களும் ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

நீட் தேர்வு மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இம்முறை பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியிருப்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென் மாநிலங்கள், வட இந்திய மாநிலங்களிலும் தான்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரத்தால் வார்த்தைப்போர் ஏற்பட்டிருக்கிறது.

என்னதான் நடக்கிறது? சற்று விளக்கமாக பார்ப்போம்.

இந்தியாவில் மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டுமெனில் கட்டாய பொது நுழைவுத் தேர்வான நீட் எழுதவேண்டும். முன்னதாக பல மாநிலங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்கள் தனித்தனி  நுழைவுத் தேர்வுகளை நடத்திக்கொண்டிருந்தன.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கட் ஆஃப் அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்போது தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றம் படியேறி விலக்கு பெற்றது தமிழ்நாடு. ஆனால் அதே ஆண்டில் நீட் அரசமைப்புக்கே எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2014இல் நரேந்திர மோதி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வை கட்டாயமாக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டது. உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்திய மருத்துவ கழகம் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 2016ஆம் ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீட் தேர்வை நிரந்தமராக்கும் முயற்சியில் சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்தது மோதி அரசு. 2016இல்  கடைசி நேரத்தில் விலக்கு பெற்றது தமிழ்நாடு. ஆனால் 2017ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக எழுதியே ஆக வேண்டும் எனும் நிலை ஏற்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை போராடிய, அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற 17 வயது மாணவி பிளஸ்-டூ தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால் நீட் தேர்வில் தோல்வியடைந்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அனிதா தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் தற்கொலைக்கு நீட் தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். அனிதாவின் மரணம் தமிழ்நாட்டில் பலத்த அதிர்வலைகளை கிளப்பியது. நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாயின.

இதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நீட் தேர்வு விலக்கு குறித்து அதிமுக, திமுக தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டன. திமுக தாம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி தந்தது. 2019-ஐ தொடர்ந்து 2024 மக்களவை தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு விலக்கு குறித்து வாக்குறுதி அளித்தது. ஆனால் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

வட இந்திய மாநிலங்களிலும் சர்சையைக் கிளப்பும் நீட்

பட மூலாதாரம், Getty Images

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

முன்னதாக, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை திமுக அரசு அமைத்தது. ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கையில் அதில் பின்வரும் மூன்று முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

1. நீட் தேர்வானது, பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை மருத்துவக் கல்வியில் குலைக்கிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்கு சாதகமாக இருப்பதோடு, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது.

2. நீட் தேர்வானது, மீண்டும், மீண்டும் தேர்வழுதுபவர்களுக்கே சாதகமானதாக இருக்கிறது. முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு பாதகமாக இருக்கிறது. நீட் தேர்வு மாணவர்களிடம் பெரும் அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. இந்தத் தேர்வில் நடக்கும் முறைகேடுகள், மாணவர்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

3. தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. மாறாக குறைவான திறனுள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதையே உறுதிசெய்கிறது. மாறாக, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்தும்போது தரமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுகிறார்கள் என ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா வெற்றிகரமாக  நிறைவேறியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முழு மதிப்பெண்கள் எடுத்த 67 பேர்

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான நீட் இளநிலை தேர்வு  கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. ஜூன் 4ஆம் தேதி  தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களை சேர்ந்த 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள், அதாவது 720-க்கும் 720 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

கடந்த ஆண்டுகளில் முழு மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டாக இருப்பார்கள். இதுவரை இல்லாத வகையில் 67 பேர் எப்படி முழு மதிப்பெண்கள் எடுத்தனர் என்று பலரும் கேள்வி கேட்டனர். மேலும் ஹரியாணா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஆறு மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இது வழக்கத்துக்கு மாறானது என பலர் சந்தேகம் எழுப்பத் தொடங்கினர்.

அதுமட்டுமின்றி சில மாணவர்களின் மதிப்பெண்கள் 718 அல்லது 719 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது. நீட் தேர்வில் தலா நான்கு மதிப்பெண்கள் கொண்ட 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

ஒரு மாணவர் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்திருந்தால் அவருக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு மட்டும் தவறாக பதில் அளித்திருந்தால் அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் பெறலாம். எனவே இந்த தேர்வில், ஒருவர் பெறுவதற்கு சாத்தியமில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள் என விமர்சனம் எழுந்தது.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை விளக்கம் ஒன்றை அளித்தது. அதில்,  “சிலர் தேர்வு நேரம் குறைவாக இருப்பது குறித்து புகார்கள் எழுப்பியிருந்தனர். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அவர்களுக்கு நேரக் குறைவு இருந்ததா என உறுதி செய்து விட்டு, 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தேர்வு மதிப்பீடுகள் குறித்த தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. எனவே, சிலருக்கு 718 அல்லது 719 ஆகிய மதிப்பெண்கள் இருக்கக் கூடும்,” என கூறியிருந்தது.

67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருப்பது தொடர்பாக NTA அளித்த விளக்கத்தில், 2023ஆம் ஆண்டில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தனர். நடப்பு ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் நீட் தேர்வை எழுதினர். அதிக மாணவர்கள் தேர்வை எழுதியதால் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது என்று  கூறியிருந்தது.

மறுபுறம், நீட் தேர்வின் வினா தாள் கசிந்து விட்டது என்ற குற்றச்சாட்டும்  வைக்கப்பட்டன.

இத்தனை குழப்பங்கள் காரணமாக, இந்த தேர்வு முடிவுகளை எதிர்த்து பல்வேறு  மாநிலங்களின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வின் வினாத் தாள்கள் கசிந்ததாக கூறி சிலரும் கருணை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து சிலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீட் இளநிலை தேர்வை ரத்து செய்யக் கோரியும், நேர இழப்பை காரணமாக கூறி 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் தன்னிச்சையானது என்றும் கூறி தாக்கல் செய்யப்பட்ட  மூன்று மனுக்கள் ஜூன் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் பலர் இந்த குழப்பங்களை சுட்டிக் காட்டினர். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின் போது, நாடு முழுவதும் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் அந்த மாணவர்கள் மறு தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்தது. மறு தேர்வு எழுத விருப்பப்படாத மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண்களை கழித்த பிறகு, அவர்களுக்கான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும்.

மறு தேர்வு எழுத விரும்புவோருக்கு, அவரது மறு தேர்வின் மதிப்பெண்களே கணக்கில் எடுத்ததுக் கொள்ளப்படும். இந்த மறு தேர்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள கலந்தாய்வுக்கு எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தது.

இந்த வாதத்தை கவனத்தில் கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம், "மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, முறைகேடு தொடர்பான மனுக்கள் ஜுலை 8ஆம் தேதி விசாரணைக்கு வரும்" என கூறியுள்ளது.

இதனிடையே நீட் தேர்வு தொடர்பான விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  "நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் மட்டுமே பிரச்னை அல்ல, வினாத்தாள் கசிந்துள்ளது, முறைகேடு நடந்துள்ளது, ஊழல் நடந்துள்ளது. தேர்வு மையம் மற்றும் பயிற்சி மையம் என்ற கூட்டு உருவாகி, ‘ பணம் செலுத்துங்கள், தாளை பெறுங்கள்’ என்ற விளையாட்டு விளையாடப்படுகிறது. மோதி அரசாங்கம் தனது நடவடிக்கைகளின் பொறுப்பை NTA-வின் தோள்களில் சுமத்தி அதன் பொறுப்பில் இருந்து தப்ப முடியாது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வினாத்தாள் கசிவு, முறைகேடு புகார்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மறுத்துள்ளார்.

தனது எக்ஸ் சமூக தளத்தில், "நீட்  தேர்வில் முறைகேடு நடந்ததாகவோ, வினாத்தாள் கசிந்ததாகவோ இதுவரை எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்வது காங்கிரஸின் பழைய பழக்கம், அரசியல் லாபத்தை ஈட்டுவதற்கு பதிலாக இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பங்களிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள் கார்கே, ‘நீட் வினாத்தாள் கசியவில்லை என்றால், பிகாரில் வினாத் தாள் கசிவு குற்றச்சாட்டு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்? குஜராத்தின் கோத்ராவில் நீட் முறைகேடு கண்டுபிடிக்கப்படவில்லையா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 பேரில் தமிழ்நாட்டு மாணவர்கள் யாரும் இல்லை என்று தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலிலும், கலந்தாய்விலும் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் நீட் தேர்வு குறித்த சர்ச்சை தேசிய அளவில் புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதே நிதர்சனம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)