காணொளி: இரானின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது
காணொளி: இரானின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது "முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்" ஆரம்பம் என்று அது கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது.

பெய்ரூட் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஐஆர்ஜிசி, இஸ்ரேல் மீண்டும் "தாக்குதல் நடவடிக்கைகளில்" ஈடுபட்டால், அதற்கான பதிலடி "மிகப் பெரியதாக" இருக்கும் என்றும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் "அனைத்து" இலக்குகளும் அதில் அடங்கக்கூடும் என்றும் எச்சரித்தது.

இதற்குப் பதிலடியாக, மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

இரான் கூறியது என்ன?

இரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், தாக்குதல்கள் முழுமையாக நின்றப்பாடில்லை. சமீபத்தில் ஜூன் 6ஆம் தேதி இரானும் அமெரிக்காவும் மோதலில் ஈடுபட்டன. இந்நிலையில், தற்போது இஸ்ரேலை இரான் குறிவைத்துள்ளது. ஹைஃபாவுக்கு தென்கிழக்கே உள்ள ரமத் டேவிட் விமானப்படை தளத்தைத் தாக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி)கூறியது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.

"ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின்" வடக்குப் பகுதியில் உள்ள பல "ராணுவ நிலைகள்" மீது தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக இரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவப்படும் காணொளி என கூறி ஒரு காணொளியையும் இரான் வெளியிட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவின் பல்வேறு பகுதிகளிலும் சைரன் ஒலி கேட்கத் தொடங்கியது.

இஸ்ரேல் இரான் தாக்குதல் நடத்தியதை தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு மக்கள் கொண்டாடினர்.

இந்த விவகாரத்தில் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்படி இஸ்ரேலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டார். ஆக்ஸியோஸ் ஊடகத்திடம் பேசிய டிரம்ப், எந்த பதில் தாக்குதலும் நடத்தாதீர்கள் என நெதன்யாகுவிடம் தான் கூறப்போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் கூறுவது என்ன?

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட பெரும்பாலன ஏவுகணைகளை இடைமறிக்கப்பட்டதாக தெரிகிறது.

தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir , டெஹ்ரான் எரிக்கப்பட வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இரான் பெரிய தவறை செய்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளில் செய்தித் தொடர்பாளரும் குறிப்பிட்டார்.

மேலும் மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

"சற்று நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலிய விமானப்படை மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இரானிய பயங்கரவாத ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தாக்கியது," என்று இஸ்ரேலிய ராணுவம் (IDF) தனது டெலிகிராம் பக்கத்தில் கூறியுள்ளது.

உயிரிழப்புகள் அல்லது தாக்குதல்கள் நடந்த சரியான இடம் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இஸ்ரேல் ராணுவ அறிவிப்பைத் தொடர்ந்து, மூன்று நகரங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக இரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

"டெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹானில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டன," என்று அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு