You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்தியாவிடம் டிரம்ப் காட்டும் கண்டிப்பு ரஷ்யாவுக்கு சாதகமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் மிகவும் நட்புடன் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அலாஸ்காவில் சந்தித்துக்கொண்டனர்.
புதினை சந்தித்த போது டிரம்ப் நடந்துகொண்ட விதமும், அதன் பின்னர் தெரிவித்த கருத்துகளும் யுக்ரேன் விவகாரத்தில் அவர் ரஷ்யா மீது மிகவும் கோபமாக இருக்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை.
இந்தியாவும் இந்த உரையாடலின் மீது ஒரு கண்ணை வைத்திருந்தது.
இந்த சந்திப்பு சுமூகமாக நடைபெற்றால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது டிரம்ப் விதித்த 25% கூடுதல் வரி விலக்கிக்கொள்ளப்படலாம் என சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியைக் குறைக்க இந்தியா முயற்சிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால், ஆகஸ்ட் 27 முதல் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்த சந்திப்புக்குப் பிறகும் இந்தியாவின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறையில் கண்டிப்பு குறையவில்லை.
வெள்ளை மாளிகையில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி ஆலோசகராக இருக்கும் பீட்டர் நவரோ, டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, பிரிட்டன் செய்தித்தாள் பைனான்ஷியல் டைம்ஸ்-ல் ஒரு கட்டுரை எழுதினார். அதில் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார்.
"அமெரிக்க வாடிக்கையாளர்கள் இந்திய பொருட்களை வாங்குகிறார்கள். இந்த பொருட்களின் விற்பனையில் கிடைக்கும் டாலர்களை இந்தியா மலிவு விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு பயன்படுத்துகிறது. ரஷ்ய எண்ணெயை இந்தியா சுத்திகரித்து உலகம் முழுவதும் விற்கிறது. இந்தியாவின் லாப நோக்கம் கொண்டவர்கள் ரஷ்யாவின் கூட்டாளியாக இருக்கின்றனர். ரஷ்யா யுக்ரேனை தொடர்ந்து தாக்கி வருகிறது, இதில் இந்தியா உதவி செய்கிறது," என எழுதினார்.
"அமெரிக்கா இந்தியாவை ஒரு உத்தி ரீதியான கூட்டாளியாக பார்க்க வேண்டுமெனில், இந்தியாவும் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்," என பீட்டர் நவரோ குறிப்பிட்டுள்ளார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு