இந்து - முஸ்லிம் சர்ச்சைக்கு நடுவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க கோரி வழக்கு - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இன்றைய (11/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு தொல்லியல் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "விழுப்புரம் ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் சமணம் தொடர்பான நினைவுச் சின்னங்கள் உள்ளன, திருப்பரங்குன்றம் கோயில் சமண கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை சமணர் காலத்தை சேர்ந்தவை என உறுதிப்படுத்துகின்றன. அண்மையில் ஏறபட்ட பதற்றம் காரணமாக மற்ற மதங்களை சேர்ந்த சிலர், இந்த மலையில் உள்ள சமணர் குகைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது சமண சமயத்தவரின் உணர்வுகளை பாதிக்கும். சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிற மதத்தினர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்ற மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தமிழக தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விஜய்யுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு

இன்றைய டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், X/@PrashantKishor

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் சந்தித்ததாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் பிரஷாந்த் கிஷோர் அவரை சந்தித்து பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2.25 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. எனினும் பிரஷாந்த் கிஷோர் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விஜய்-பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

இன்றைய டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஜன.25-ல் கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அதிலிருந்த 15 மீனவர்களை சிறைபிடித்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 14 மீனவர்களுக்கு இலங்கை பணத்தில் தலா 50 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையும், விசைப்படகு ஓட்டுநர் ஜெயபாலுக்கு இலங்கை பணத்தில் 2 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். 15 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை பணத்தில் 2 கோடியே 7 லட்ச ரூபாயாகும். இதன் இந்திய மதிப்பு ரூ. 60 லட்சத்து 48 ஆயிரம் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு- இலங்கை மின்சாரசபை

இன்றைய டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) ஏற்பட்ட திடீர் மின் வெட்டு தொடர்பான குறுகிய கால அறிக்கை மின்சக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரச பை தெரிவித்துள்ளது என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், " ஒரே சந்தர்ப்பத்தில் முழு நாட்டில் மின் தடை ஏற்பட்டமைக்கான காரணம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் தலிக் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களிலும் மின் விநியோகத் தடையை அமுல்படுத்த வேண்டியேற்படுமா என்பது தொடர்பிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

தற்போதுள்ள நிலைவரத்தின் அடிப்படையில் ஏற்படக் கூடிய அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேவேளை நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் காணப்படும் குறைந்த மின்சாரத் தேவையும், ஒப்பீட்டளவில் சூரிய சக்தியின் குறைந்த நிலைத்தன்மையும் மொத்த மின்சார உற்பத்தியில் அதிக சதவீதத்தை உற்பத்தி செய்தமையால் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே அதற்கான காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிலைமையை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக தேசிய மின்சார கட்டமைப்பு சமநிலையற்றதாக மாறியது. இதன் விளைவாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

எதிர்காலத்தில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, மின்சார சேமிப்பு மின்கல வசதிகள் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கை மின்சார சபையும் வலுசக்தி அமைச்சும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி : பும்ரா விளையாடுவாரா? பிசி சி ஐ இன்று முடிவு

இன்றைய டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்பிரித் பும்பும்ரா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாடுவாரா என்று பி சி சி ஐ இன்று முடிவு செய்யவிருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் "ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறவுள்ளது. கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் 11ம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் இந்த தொடரில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார், இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக மீண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பதை மருத்துவ கமிட்டியின் அறிக்கையின் அடிப்டையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி சி சி ஐ) இன்று முடிவு செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)