சிஎஸ்கே-வின் 3 முக்கிய விக்கெட் வீழ்த்தி ஆட்டம் காட்டிய கேரள வீரர் விக்னேஷ் புத்தூர் யார்?
எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியை திணறடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். 23 வயதேயான இவரை 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் மும்பை அணி வாங்கியுள்ளது. கேரள கிரிக்கெட் லீக்கில் அலெப்பி ரிப்பிள்ஸ் (Aleppey Ripples) அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவராக அவர் இருப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நம்புகிறது.
கேரளாவில் 14 வயதுக்குட்டோர் மற்றும் 19 வயதுக்குட்டோருக்கான அணிகளில் விளையாடியுள்ள இவர், கேரள சீனியர் அணியில் இன்னும் இடம் பிடிக்கவில்லை. கேரள கிரிக்கெட் லீக்கில் 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனாலும், அவரது சுழலில் இருந்த மாயாஜாலம் மும்பை இந்தியன்ஸ் அணியை கவர, 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படைய விலையில் அவரை வாங்கியுள்ளது.
தென் ஆப்ரிக்க டி20 கிரிக்கெட் லீக்கில் எம்ஐ கேப்டவுன் அணியின் பயிற்சியில் வலைப்பந்துவீச்சாளராக செயல்பட்ட பின்னர் ஐபிஎல் தொடரில் விக்னேஷ் புத்தூர் அறிமுகமாகியுள்ளார். முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் கவனம் ஈர்த்துள்ளார் என்று ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையதளம் கூறுகிறது.
நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்ட வேளையில், விக்னேஷ் புத்தூரை முதுகில் தட்டிக் கொடுத்தார் தோனி. இந்த தருணத்தை விக்னேஷ் புத்தூர் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டார் என்று கூறியுள்ள வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, இது விக்னேஷ் புத்தூருக்கு உற்சாகம் தரும் ஒன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



