டிரம்ப் - புதின் இடையிலான ஒரே ஒரு தொலைபேசிய உரையாடல் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது எப்படி?

டிரம்ப் - புதின் இடையிலான ஒரே ஒரு தொலைபேசிய உரையாடல் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

1917 ரஷ்ய புரட்சியை நேரில் பார்த்த சாட்சியாக, அதைப் பற்றி எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜான் ரீட், தான் எழுதிய கட்டுரைக்கு உலகை உலுக்கிய 10 நாட்கள் என்று தலைப்பிட்டார்.

ஆனால் டொனால்ட் டிரம்புக்கும், விளாதிமிர் புதினுக்கும் 10 நாட்கள் என்பது மிக நீண்ட காலம். அவர்கள் ஒரு வாரத்திலேயே அனைத்து விஷயங்களையும் அசைத்துப் பார்த்திருக்கிறார்கள்.

அது பிப்ரவரி 12ஆம் தேதி புதின்-டிரம்ப் தொலைபேசி உரையாடல் மற்றும் இருதரப்பு உறவுகளை தொடரவிருப்பதாக அவர்கள் அறிவித்த வாக்குறுதிகளுடன் தொடங்கியது.

ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டிலும், ஐரோப்பா - அமெரிக்கா இடையேயான பிளவிலும் இது தொடர்ந்தது.

அடுத்தபடியாக, சௌதி அரேபியாவில் ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை: ரஷ்யா யுக்ரேன் மீது முழு வீச்சில் படையெடுத்த பின்னர், இரு நாடுகளுக்கிடையில் முதல் முறையாக நடைபெற்ற உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை இது. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை.

சௌதி அரேபியாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா - ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

அவரது கூற்றுப்படி, முதலாவதாக இரு நாடுகளும் விரைவில் ஒருவருக்கொருவர் தூதர்களை நியமிக்கும். தூதரகங்களுக்கான வங்கி பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ தந்திர பணிகளுக்கான தடங்கல்கள் நீக்கப்படும்.

இரண்டாவதாக, யுக்ரேனுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தேவையான செயல்முறைகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா அதன் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும், அதன் பிறகே ரஷ்யா அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் என்றும் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

மூன்றாவதாக, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே முழு ஒத்துழைப்பைத் தொடங்கவும், மேம்படுத்தவும் தேவையான சூழல் உருவாக்கப்படும்.

"இது மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கவனித்துக் கேட்டோம்', என்று லாவ்ரோவ் கூறினார்.

"டிரம்ப் செயல்படுகிறார். உத்வேகத்துடன் இருக்கிறார். ஆனால் அவர் ஏதாவது செய்வாரா?" என வினவுகிறார் ரஷ்யாவைச் சேர்ந்த ஐரீனா.

"இந்த பேச்சுவார்த்தைகள் அமைதியை கொண்டுவரும் என கனவு காண்கிறோம். இது ஒரு முதல் படி. ஒருவேளை இது நமது பொருளாதாரத்துக்கு உதவக்கூடும். உணவு மற்றும் பிற பொருட்களின் விலை இங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதற்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை (யுக்ரேனில் நடைபெறும் யுத்தம்) மற்றும் பொதுவான சர்வதேச சூழல் ஒரு காரணம்" என்கிறார் அவர்.

புதினும், டிரம்பும் (பிப்ரவரி 12 அன்று) தொலைபேசியில் பேசினர். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன் பின்னர், அவர்களது குழுவினர் (பிப்ரவரி 18 அன்று) சௌதி அரேபியாவில் சந்தித்துள்ளனர். அதிபர் அளவில் பேச்சுவார்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மாஸ்கோவிஸ்கி காம்சோமோலெட்ஸ் செய்தித்தாள், இரண்டு தலைவர்களுக்கு கடந்த வார தொலைபேசி உரையாடலில் ஒருவரிடம் ஒருவர் என்ன சொல்லியிருப்பார்கள் என கற்பனை செய்ய முயன்றிருந்தது. அவர்களுடைய கற்பனை இதுதான்:

"டிரம்ப் புதினை அழைத்தார்.

விளாதிமிர்! நீங்கள் ஒரு அற்புதமான நாட்டை வைத்திருக்கிறீர்கள், நான் ஒரு அற்புதமான நாட்டை வைத்திருக்கிறேன். நாம் சென்று உலகத்தைப் பிரிப்போமா?"

"இவ்வளவு நாள், நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்? செய்வோம்!...."

இது கற்பனையா? பொறுத்திருந்து பார்ப்போம்.

முழு விபரமும் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)