You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை'- அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பெரும்பாலான உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு அமலாவதை அனுமதித்தால் அமெரிக்காவையே அழித்துவிடும் என டிரம்ப் விமர்சித்துள்ளார். என்ன நடந்தது?
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பல நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் இந்த வரிகள் விதிக்கப்படுவதாக டிரம்ப் கூறுகிறார். இந்த நிலையில், டிரம்பின் வரிகளுக்கு எதிராக இந்த உத்தரவை 'US Court of Appeals for the Federal Circuit' பிறப்பித்திருக்கிறது. இந்த தீர்ப்பு பல நாடுகளுக்கு டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளையும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்டுள்ள இதர வரிகளையும் பாதிக்கக்கூடியது.
எனினும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக அக்டோபர் 14ஆம் தேதிவரை இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு முழுமையான பேரழிவாக இருக்கும். அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும், நாம் வலுவாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தை மிகவும் பாரபட்சமான நீதிமன்றம் என்றும் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு