உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு சர்ச்சை: கோவில் இருந்த இடத்தில் மசூதியா? ஆய்வில் வன்முறை - 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு சர்ச்சை: கோவில் இருந்த இடத்தில் மசூதியா? ஆய்வில் வன்முறை - 3 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பல வாகனங்களுக்குத் தீ வைத்தது. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததை மொராதாபாத் பிரிவு ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் உறுதி செய்துள்ளார்.

சம்பல் பகுதியின் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜியாவுர் ரஹ்மான் பார்க், பிபிசி செய்தியாளர் தில்னவாஸ் பாஷாவிடம் பேசுகையில், காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும் கூறினார்.

கைலாதேவி கோவிலின் தலைமை அர்ச்சகரான ரிஷிராஜ் கிரி மகராஜ், சம்பலில் இருக்கும் ஷாஹி மசூதியை ஹரிஹர் கோவில் என்று கூறியிருந்தார்.

ரிஷி ராஜ் கிரி மகராஜ் நவம்பர் 19ஆம் தேதி அன்று சிவில் நீதிமன்றத்தில் இங்கு ஆய்வு நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தார்.

ஏழு நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்ட நீதிமன்றம், வீடியோ மற்றும் புகைப்படத்துடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆய்வுக் குழுவிடம் கூறியது.

இதில் வழக்கறிஞர் ஆணையராக (advocate commissioner) ரமேஷ் சிங் ராகவ் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

கடந்த முறை இரவு நேரமாகிவிட்டது என்பதால் ஆய்வை முழுவதுமாக முடிக்க முடியவில்லை, அதனால் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக சம்பல் மாவட்ட நீதித் துறை நடுவர் ராஜேந்திர பென்சியா தெரிவித்தார்.

ஆய்வுப் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது, ஆனால் மசூதிக்கு வெளியே இருந்த கூட்டம் திடீரென காவல்துறை மீது கற்களை வீசத் தொடங்கியது, இது பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)