அதானி - ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை விசாரிக்க குழு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

adhani

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஓ பி பட், நீதிபதி ஜே.பி. தேவ்தார், கே. வி. கமாட், நந்தன் நிலேகனி மற்றும் சோமஷேகர் சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய அந்த குழுவிற்கு முன்னாள் நீதிபதி அபேய் எம் சாப்ரே தலைமை தாங்குவார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செபி இரண்டு மாதங்களில் இதுகுறித்து விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவும் இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், பி எஸ் நரசிம்ஹா மற்றும் ஜே பி பர்டிவா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அதானி குழுமம் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வழக்கறிஞர்கள் மனோகர் லால் ஷர்மா, விஷால் திவாரி, மற்றும் காங்கிரஸ் எம்.பி ஜெயா தாக்கூர், தொடுத்த மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

“ஹிண்டன்பர்கின் அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் சரிந்தன. அதானி குழுமம் பாதுகாப்பு சட்டங்களை மீறியுள்ளதாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது” என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

“பாதுகாப்பு ஒப்பந்த ஒழுங்குமுறை விதிகளின் 19ஆவது பிரிவு மீறப்பட்டுள்ளதா என்றும் பங்கு மோசடிகள் நடந்துள்ளதா என்றும் செபி அமைப்பு தனது விசாரணையில் கண்டறிய வேண்டும்,” என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய முதலீட்டாளர்களை சந்தையின் ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஒழுங்குமுறை நடைமுறைகளில் மாற்றம் தேவை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி, அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரிக்க மத்திய அரசால் ரகசியமாக பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், “இந்த வழக்கில் முழு வெளிப்படைத்தன்மை வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தது.

“நிபுணர்களை நாங்களே தேர்வு செய்வோம். அரசால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை எடுத்து கொண்டால் அது அரசால் உருவாக்கப்பட்ட கமிட்டியாக இருக்கும்.” என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

எனவே கமிட்டியின் உறுப்பினர்களே தாங்களே நியமிக்கவுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒழுங்குமுறை விதிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ள செபியால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர்களின் குழுவையும் தாங்கள் ஏற்கப் போவதில்லை என்றும் அதற்கான நிபுணர்களையும் தாங்களே நியமிக்கப்போவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுதாரர்களில் ஒருவரான விஷால் திவாரி, இந்த மொத்த விவகாரத்தையும் ஒரு அதிஉயர் கமிட்டி விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

“இந்த வழக்கில் நியாயமான, சார்பற்ற, நம்பகமான விசாரணை தேவை” என மனுதாரர் ஒருவரின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு மனுதாரரின் வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷண், இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இதில் வங்கிகளின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

“பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகாரியின் சகோதரருக்கு சொந்தமாகவுள்ளது என ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவிக்கிறது. செபியால் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அவை அதிகப்படியான பங்குகளை வகித்துள்ளன.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்த பணம் பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது,” என பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உச்சநிதீமன்றம்

பட மூலாதாரம், Getty Images

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?

106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்டது ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை.

சுருக்கமாகச் சொல்வது என்றால் அதானி குழுமம் "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க்.

இந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்தது, இது முற்றிலும் ஆதாரமற்றது என்றும் தெரிவித்தது.

88 ஹிண்டன்பர்க் கேள்விகளில் 21 கேள்விகள் ஏற்கனவே பொதுத் தளத்தில் உள்ளவை என்றும் அதானி குழுமம் தெரிவித்தது.

ஹிண்டன்பர்க் தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை தயாரித்திருப்பதாகக் கூறுவது தவறு என்றும், 2015 முதல் வெவ்வேறு தருணங்களில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்றும் அதானி நிறுவனம் தெரிவித்தது.

இந்த அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: