காணொளி: இஸ்ரேல் - அமெரிக்கா உறவு மாறி வருகிறதா?
லெபனான் தொடர்பாக இஸ்ரேலின் கொள்கைகளில் அமெரிக்க நிர்வாகம் எவ்வளவு அதிருப்தியடைந்துள்ளது என்பதை டிரம்ப் மற்றும் வான்ஸ் ஆகியோரின் கருத்துகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா–இஸ்ரேல் உறவுகள் எதை நோக்கி நகர்கிறது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்
அமெரிக்கா–இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக இஸ்ரேல் அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் அளித்துள்ள பதிலில் , "இஸ்ரேலின் மிகப்பெரிய பிரச்னை அமெரிக்க அதிபர்தான் என்று யாரேனும் நினைத்தால், அவர்கள் தங்கள் நாட்டின் தற்போதைய நிலையை புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், இஸ்ரேலின் ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்றும், அவை அமெரிக்க வரி செலுத்துபவர்களின் பணத்தில் உருவாகின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும், டிரம்ப் தான் உண்மையாக இஸ்ரேலைப் புரிந்து கொண்டு அதற்காக இரக்கம் கொள்ளும் ஒரே உலகத் தலைவர் என்றும் அவர் கூறினார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் கொள்கையை வெளிப்படையாக விமர்சித்த டிரம்ப் , நெதன்யாகுவை "நல்ல மனிதர்" என்றும் , சில நேரங்களில் " அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷமாக" நடந்துகொள்வார் என்றும் , லெபனானில் இஸ்ரேல் நடத்திய சில தாக்குதல்கள் "தேவையற்றவை" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா–இரான் ஒப்பந்தத்துக்கு எதிராக பேசும் இஸ்ரேல் அமைச்சர்களை குறிப்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதமார் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் வான்ஸ் 'தி நியூயார்க் டைம்ஸ்'க்கு அளித்த நேர்காணலில், நேரடியாக விமர்சித்திருந்தார்.
"உங்களின் திட்டம் என்ன? ஒவ்வொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையையும் பலத்தைப் பயன்படுத்தி மட்டும் தீர்க்க முடியாது," என்று வான்ஸ் கூறினார்.
வான்ஸின் கருத்துக்கு பதிலளித்துள்ள இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்-க்விர், "21ஆம் நூற்றாண்டின் நாசிகளை, 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா எப்படி கையாண்டதோ அதேபோல் கையாள வேண்டும்" என்று கூறிய அவர் , இரான் மற்றும் ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக தொடர்ந்து பலத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இரானுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச், அந்த நாட்டின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களால் உருவாகும் அச்சுறுத்தலை இது நீக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளின் சுதந்திரத்தையும் இது கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.
முன்னாள் இஸ்ரேல் ராணுவ நுண்ணறிவு அதிகாரியும், மறைந்த பிரதமர் யிட்ஸாக் ரபீனின் ஆலோசகருமான டாக்டர் ஜாக் நேரியா, தற்போதைய முன்னேற்றங்களை இரு நாடுகளுக்கிடையிலான உறவின் தன்மையில் ஏற்பட்ட அபாயகரமான மாற்றம் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிர்வாகம் தற்போது எரிபொருள் விலை மற்றும் பொருளாதார நலன்கள் போன்ற உள்நாட்டு பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள நேரியா, இதனால் இஸ்ரேல், லெபனான் மற்றும் இரான் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ,
"இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களை தியாகம் செய்து தீர்வுகளைத் தேடும் அமெரிக்காவின் முயற்சி மற்றும் லெபனான் மீதான தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் இஸ்ரேல், இவை இரண்டும் நேரடி அரசியல் மோதலுக்குத் தள்ளக்கூடும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
டிரம்ப் மற்றும் வான்ஸ் கூறிய கருத்துகள், மத்திய கிழக்கின் சிக்கலான சூழ்நிலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாத நிலையை காட்டுவதாக குறிப்பிடும் நேரியா, இஸ்ரேல் பிரதமரை பொதுவெளியில் விமர்சிப்பதை அவர் கண்டித்ததோடு , அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆயுதங்களை கட்டுப்படுத்துவது அல்லது நிறுத்துவது பற்றிய விவாதங்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் இதுவரை இல்லாத மாற்றத்தை பிரதிபலிப்பதாகவும் நேரியா தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக அமெரிக்காவுடன் இணைந்து போராடிய இஸ்ரேல், தற்போது அமெரிக்கா–இரான் ஒப்பந்தத்தை குறைபாடானதாகக் கருதி அதற்கு எதிராக நிற்கும் காரணத்தால் அழுத்தம் மற்றும் தண்டனைக்கு உள்ளாகும் தரப்பாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்று தனது ராணுவ நடவடிக்கைகளை குறைக்கவில்லை என்றால், ஆயுத விநியோக தாமதம், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பின் இடைநீக்கம் அல்லது ஆயுதக் கட்டுப்பாடுகள் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சம் இஸ்ரேலில் அதிகரித்து வருவதாக இஸ்ரேல் நாளிதழான 'மாரிவ்' செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்கா–இரான் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது இந்த நெருக்கடி ஆரம்பித்தது என்றும், பின்னர் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் அது தீவிரமடைந்தது என்றும் மாரிவ் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், லெபனான் உட்பட பல முனைகளில் போரை நிறுத்தும் விதிகள் உள்ளன. அதன் பின்னர், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை குறைக்க அமெரிக்கா அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. மற்றொரு புறம், நெதன்யாகு அரசு, இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எந்தவொரு உறுதிப்பாடுகளையும் ஏற்க மறுத்துள்ளது.
டிரம்பின் விமர்சனங்கள், வான்ஸின் கடுமையான கருத்துக்கள் , மற்றும் லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு அரசு சமரசம் செய்ய மறுக்கும் நிலையில் அமெரிக்கா–இஸ்ரேல் உறவுகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



