விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து இந்தியா வந்த 13 வயது ஆப்கன் சிறுவன்

ஆப்கானிஸ்தான், தாலிபன், காபூல், விமான பயணம், லேண்டிங் கியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விமானத்தின் லேண்டிங் கியரில் அமர்ந்து டெல்லி வரை பயணித்துள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், டெல்லிக்கு வந்த விமானம் ஒன்றின் லேண்டிங் கியரின் மேல் பக்கத்தில் ஒளிந்துகொண்டு டெல்லி வரை பயணித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன் அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிடிஐ செய்தியின்படி, டெல்லி விமான நிலையத்தில் உள்ள காம் ஏர்லைன்ஸ் விமான குழுவினர் ஒரு சிறுவன் விமானத்தின் அருகே நடந்து சென்றதை கவனித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அந்த சிறுவன் விசாரணைக்காக மூன்றாவது முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

விசாரணையில் அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானின் குந்துஸ் (Kunduz) மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்து விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள சென்ட்ரல் லேண்டிங் கியர் பகுதியை அடைந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் சிறுவன் தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காபூல் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கேள்விகள்

ஆப்கானிஸ்தான், தாலிபன், காபூல், விமான பயணம், லேண்டிங் கியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காபூல் விமான நிலையத்தில் காம் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் பயணிகள் (கோப்புப்படம்)

சோதனையின் போது காம் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு அதிகாரிகள், லேண்டிங் கியர் பகுதியில் சிறுவனுடையதாக கருதப்படும் ஒரு சிறிய சிவப்பு நிற ஒலிபெருக்கியை கண்டுபிடித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

விசாரணைக்குப் பிறகு, எந்த சதித்திட்டமும் இல்லையென தீர்மானிக்கப்பட்ட நிலையில் விமானம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிறுவனின் பெயரும் அடையாளமும் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசு இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் தாலிபன் அரசின் எல்லையோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஃபரூக்கி இந்தச் சம்பவம் பற்றி விசாரித்து வருவதாக பிபிசியின் பஷ்டோ சேவையிடம் தெரிவித்தார்.

"விமான நிலையத்தின் ஓடு பாதை சிறப்பு பாதுகாப்பின் கீழ் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிகாரிகள் உட்பட யாரும் ஓடுபாதைக்குள் நுழைய முடியாது. ஒருவேளை யாராவது ஓடுபாதைக்குள் நுழைந்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டு சோதனை தொடங்கப்படும். விமான நிலையம் முழுவதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்." எனத் தெரிவித்தார்.

சிறுவன் விமானத்தை அடைந்தது காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

"விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் எச்சரிக்கையுடனே இருப்பார்கள். யாரையும் சட்டவிரோதமாக பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள்." என பிபிசியிடம் அப்துல்லா ஃபரூக்கி தெரிவித்தார்.

சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயம்

ஆப்கானிஸ்தான், தாலிபன், காபூல், விமான பயணம், லேண்டிங் கியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காபூல் சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்புற பகுதி (கோப்புப்படம்)

இத்தகைய அசாத்தியமான செயலுக்குப் பிறகு சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயமாகக் கருதப்படுகிறது.

ஒருவர் விமானத்தில் ஒளிந்து கொண்டு இன்னொரு இடத்திற்கு பயணித்தது இது முதல்முறையல்ல. ஆனால் விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் ஒழிந்துகொண்டு ஒருவர் பயணித்தது இதுவே முதல்முறை ஆகும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிரமான குளிரில் அந்த உயரத்தில் உயிர் பிழைப்பது அசாத்தியமானது என வல்லுநர்களை மேற்கோள் காட்டி பிபிசி பஷ்டோ சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு