ஜப்பானில் தீக்கிரையான பயணிகள் விமானம் - 379 பேர் என்ன ஆயினர்?

காணொளிக் குறிப்பு, ஜப்பான் விமானம் இன்று டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது
ஜப்பானில் தீக்கிரையான பயணிகள் விமானம் - 379 பேர் என்ன ஆயினர்?
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜனவரி 02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

என்.ஹெச்.கே எனும் ஜப்பானிய அரசு ஊடகத்தில் அதன் காணொளி வெளியானது. அதில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது. விமானத்தின் ஓடுதளத்திலும் தீ பரவியது.

அந்த விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அதிகாரிகளை மேற்கோள் காட்டி என்.ஹெச்.கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே பயணிகள் இருந்தனர்.

விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, என்.ஹெச்.கே. ஊடகம் தெரிவித்துள்ளது.

இரு விமானங்கள் மோதல்

ஜப்பானில் தீக்கிரையான விமானம்

பட மூலாதாரம், NHK

379 பேருடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குகையில் ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் என்.எச்.கே. செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

அந்த கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் பத்திரமாக வெளியே வந்துவிட்டதாகவும், மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரிவில்லை என்றும் என்.எச்.கே. செய்தி வெளியிட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)