அல் ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் - என்ன செய்கிறது?

காணொளிக் குறிப்பு, அல் ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் - என்ன செய்கிறது?
அல் ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் - என்ன செய்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய ராணுவம் தற்போது அங்குள்ள மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையினுள் நுழைந்துள்ளது.

ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை என்று இதை இஸ்ரேல் கூறுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) அல்-ஷிஃபா மருத்துவமனை ‘கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டதாக’ தெரிவித்துள்ளது. காஸாவின் வடக்கில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில்தான் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது என்று இஸ்ரேல் கூறுவருகிறது.

இதனால் இந்த மருத்துவமனை கடந்த சில நாட்களாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தீவிரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது முதன்முறையாக மருத்துவமனையினுள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவம், அங்கு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஹமாஸ் துண்டு பிரசுரங்கள், லேப்டாப்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. எம் ஆர் ஐ இயந்திரத்தின் அருகே ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடிப்பது போன்ற வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தினர் ஒவ்வொரு அறையாக சென்று, அங்குள்ள நோயாளிகள், மருத்துவ பணியாளர்களை விசாரித்து வருவதாக அங்கிருப்பவரகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அல்-ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலத்தீன முஹம்மது அபு அமிராவின் தாயாருக்கு ஒருவர் ஆறுதல் கூறினார்.

அல்-ஷிஃபா மருத்துவமனை இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்பாக அந்த மருத்துவமனையில் நிலைமை மோசமாகவே இருந்தது. மின்சாரம், எரிபொருள், உணவு இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிபிசி அரபியின் செய்தியாளர் எதர் ஷலபி, மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் அல்-ஷிஃபாவில் உள்ள மற்ற மூத்த மருத்துவர்களிடம் நிலைமை குறித்து பேசியிருந்தார்.

பிபிசியிடம் பேசிய அல்-ஷிஃபா மருத்துவமனையின் பொது இயக்குநர் முஹம்மது அபு சலாமியா, "அமைதியான காலத்தில் இது காஸாவின் சிறந்த மருத்துவமனை" என்றார்.

“இது சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு மருத்துவமனை. இது அனைத்து சிறப்பு வசதிகளும் கொண்ட மருத்துவமனை என்பதால், இங்கு மருத்துவமும் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது,” என்றார் அவர்.

கடந்த 13 ஆம் தேதி, அல்-ஷிஃபா மருத்துவமனை கிட்டத்தட்ட ஒரு கல்லறை போல உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளிலும் உடல்கள் குவிந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.

குவிந்திருந்த உடல்களால் நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, ஒரு மருத்துவக்குழு சுமார் 120 உடல்களை முற்றத்தில் உள்ள ஒரு புதைகுழியில் புதைத்ததாக எலும்பியல் அறுவை சிகிச்சையின் தலைவர் மருத்துவர் அட்னான் அல்-புர்ஷ் பிபிசியிடம் கூறினார்.

அதேபோல, சவக்கிடங்கில் இருந்த மேலும் 80 உடல்களும் அதேபோன்ற மற்றொரு புதைக்குழியில் புதைக்கப்பட்டதாக மருத்துவர் அல்-புர்ஷ் கூறினார். சமீப நாட்களாக மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மெதுவாகத் தலைதூக்கும் இஸ்ரேலுக்கான எதிர்ப்பு

அல்-ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம், Dr Muhammad Abu Salamiya

படக்குறிப்பு, அல்-ஷிஃபா மருத்துவமனை தலைவர் டாக்டர் முஹம்மது அபு சலாமியா, ஜெனரேட்டர் எரிபொருள் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், இன்குபேட்டர்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்களை இயக்க முடியாமல் போகலாம் என்று எச்சரித்தார்.

அல் ஷிஃபா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால், இந்தப் போரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகள் மெதுவாகத் தலைதூக்கத் துவங்கியிருக்கின்றன, என்று பிபிசியின் சர்வதேசச் செய்திகள் ஆசிரியர் ஜெரெமி போவன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்தப் போரைப் பற்றிப் பேசுகையில் தொனியை மாற்றத் துவங்கியிருக்கின்றன.

மருத்துவமனியின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைச் சுற்றியுள்ள சர்வதேச நிலைப்பாடு இபோது கடினமாகி வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் இதை சுருக்கமாகக் கூறினார்: ‘அளவுக்கு அதிகமான பாலத்தீனப் பொதுமக்கள் கொல்லப்பட்டு விட்டனர்’.

இதற்கு முன்னும் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்பற்றி போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன, என்கிறார் போவன். ஆனால், இஸ்ரேல், தனது ராணுவ நோக்கங்கள் நிறைவேறும் வரையிலும், தனது தாக்குதலுக்கான ராஜதந்திர நியாயங்களை கற்பிக்கும் வரையிலும் தாக்குதல் நடத்தும், என்கிறார்.

தற்போதிருக்கும் சூழ்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தாக்குதலைத் தொடரலாம். இஸ்ரேலின் நட்பு நாடுகள், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறத்துவங்கியுள்ளன. ஆனால் போரை நிறுத்த அழைப்பு விடுக்கவில்லை.

அல்-ஷிஃபா மருத்துவமனையை யார் நடத்துகிறார்கள்?

அல்-ஷிஃபா மருத்துவமனை

பட மூலாதாரம், Haitham Imad / Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலின் தாக்குதலால் வீட்டை இழந்த குடும்பத்தினர், அல்-ஷிஃபா மருத்துவமனையின் மைதானத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அல்-ஷிஃபா மருத்துவமனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் காஸா சுகாதார அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அதன் பொது இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சலாமியா. இவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டவர்.

மருத்துவர் முஹம்மது அபு சலாமியாவின் கூற்றுப்படி, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தினம்தோறும் மாறுபடுகிறது.

நவம்பர் 13 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 650 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 50 பேர் சிறுநீரக பாதிப்பாலும், 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தவிர, புதிதாக பிறந்த 36 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக அபு சலாமியா கூறினார்.

மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சுமார் 700 மருத்துவப்பணியாளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)