சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் என்ன பிரச்னை?

காணொளிக் குறிப்பு, சென்னையில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் என்ன பிரச்னை?
பிரசுரிக்கப்பட்டது

சென்னை நகரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிவந்தன. ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இந்தப் பேருந்துகள் வந்து செல்வது நகரின் மையப் பகுதியில் ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசல், விழாக் காலங்களில் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் வைத்து, கிளாம்பாக்கத்தில் புதிதாக ஒரு பேருந்து நிலையத்தை உருவாக்கியிருக்கிறது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்.

வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையம், 88.52 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியால் இந்தப் பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தப் பேருந்து நிலையத்திற்கான பணிகள் முடிவடைந்து டிசம்பர் 30ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுமார் 394 கோடி ரூபாய் செலவில் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC), மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (SETC) முதற்கட்டமாக இங்கிருந்து இயங்கத் துவங்கியிருக்கின்றன. விரைவிலேயே, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளும் இங்கிருந்தே இயங்கவிருக்கின்றன.

பயணிகளின் சிரமங்கள்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

பட மூலாதாரம், Getty Images

கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளின் இயக்கம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதை அறியாத பயணிகள் சற்றுத் திண்டாடிப் போயிருக்கிறார்கள்

"நாங்கள் கோயம்பேட்டிலிருந்து டிக்கெட் பதிவுசெய்திருந்தோம். கோயம்பேட்டிற்குப் போன பிறகுதான் பேருந்துகள் அங்கிருந்து புறப்படாது, கிளாம்பாக்கத்திலிருந்துதான் புறப்படும் என்பது தெரிந்தது. பிறகு கோயம்பேட்டிலிருந்து பேருந்தைப் பிடித்து மிகுந்த சிரமப்பட்டு இங்கே வந்தோம். இந்தப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினால், அங்கிருந்து ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கிறது.

எங்களுக்கு நான்கரை மணிக்குப் பேருந்து. ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. போய் பார்த்தால் தான் தெரியும். எங்களுக்கு உண்மையிலேயே மிக சிரமமாக இருக்கிறது. மக்களை இதற்குத் தயார் செய்திருக்க வேண்டும்" என்கிறார் க்ரீன் வேஸ் சாலையிலிருந்து அவசர அவசரமாக இங்கு வந்து சேர்ந்திருக்கும் பேபி.

இவர் சொல்வதைப் போல மாநகரப் பேருந்துகளின் மூலம் இந்தப் பேருந்து நிலையத்தை அடைபவர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடக்கவேண்டியிருப்பது, படிகளில் இறங்கி ஏற வேண்டியிருப்பது போன்றவை பலருக்கும் சிரமமாக இருக்கிறது. மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பேருந்து நிலையத்தை வந்தடைய பேட்டரி கார்கள் போன்ற ஏற்பாடுகள் இருந்தாலும் கூடுதலாக சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறார்கள் பயணிகள்.

"மாநகரப் பேருந்தில் வந்தால் பேருந்திலிருந்து இறங்கி இங்கே வர வேண்டுமானால், லிஃப்டில் போக வேண்டும், எஸ்கலேட்டரில் போக வேண்டும் என்கிறார்கள். விவரம் தெரியாதவர்களுக்கு இதெல்லாம் கடினம். மாநகரப் பேருந்தில் வந்து இறங்கினால், புறநகர் பேருந்தைப் பிடிப்பது எளிதாக இருக்க வேண்டும். கோயம்பேட்டில் அப்படித்தான் இருந்தது" என்கிறார் கே.கே. நகரைச் சேர்ந்த ஜெயசிங்.

மாநகரப் பேருந்துகளை, புறநகர்ப் பேருந்து நிலையத்தின் வாசல் வரை வந்து பயணிகளை இறக்கிவிட்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் சில பயணிகள்.

ஆம்னி பேருந்து இயக்கம்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

பட மூலாதாரம், Getty Images

தற்போது அரசுப் பேருந்துகள் மட்டும்தான் இங்கிருந்து இயங்குகின்றன. விரைவிலேயே ஆம்னி பேருந்துகள் எனப்படும் தனியார் பேருந்துகளும் இங்கிருந்து இயங்கவிருக்கின்றன. ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள் இந்த விவகாரம் பற்றி கருத்துச் சொல்ல தயங்குகிறார்கள். புதிய பேருந்து நிலையத்தைச் சென்றடைவதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குறிப்பிடும் குறைகள் விரைவில் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும் என்கிறது சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம். இது குறித்து பிபிசியிடம் பேசிய சிஎம்டிஏவின் உயரதிகாரிகள், விரைவிலேயே மாநகரப் பேருந்துகளில் வருபவர்கள் எளிதில் இந்தப் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார்கள்.

சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல தற்போது கிளாம்பாக்கம், மாதவரம் என இரு பேருந்து நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், விரைவிலேயே மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு என குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)