காயத்ரி ரகுராம்: "என் தரப்பை கேட்காமலேயே நீக்கினார்கள்" - என்ன பின்னணி?

பிரசுரிக்கப்பட்டது

என் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைநீக்கம் செய்துவிட்டார்கள் என்றும் செல்வக்குமார் என்ற அறிவுசார் பிரிவின் துணைத் தலைவர் தன்னைக் குறிவைத்து செயல்படுவதாகவும் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராம், தான் கட்சிக்குக் களங்கம் எனக் கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார்.

"தனிப்பட்ட முறையில் யார் என்னைத் தாக்கினாலும் அவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன். இது என் உரிமை. கருத்துரிமையை முடக்குவது வருத்தமாக இருக்கிறது. அதற்காக என்னை இடை நீக்கம் செய்திருப்பது, அதுவும் கட்சிக்குக் களங்கம் என்று கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

எட்டு வருடமாக என் உழைப்பை கட்சிக்கு கொடுத்திருக்கிறேன். அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைவராக இருந்த நிலையில், 24 தமிழர்களை வெளிநாட்டிலிருந்து மீட்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது பா.ஜ.கவுக்கு நான் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.

சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக கட்சியில் சேர்ந்த செல்வக்குமார் என்ற நபர், கட்சிக்கு வந்த உடனேயே பொறுப்பு வாங்கி, என்னை கொச்சையாகப் பேசும் ட்விட்டர் பதிவுகளில் லைக் போடுகிறார். அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.

செல்வக்குமார் அறிவுசார் பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர்கள் எல்லாம் சேர்ந்து கோவை க்ரூப் என்று ஒரு குழு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களா, ஊழியர்களா என்று சொல்ல முடியாது. அவர்கள் 'வார் ரூம்' போல ஒன்றை நடத்துகிறார்கள். அங்கிருந்துதான் நான் குறிவைக்கப்பட்டேன்.

அவர் ஏன் என்னைக் குறிவைக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் செயலர் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்ட பிறகு, அப்படியெல்லாம் எனக்கு பொறுப்பே கொடுக்கப்படவில்லையென செல்வக்குமார் குழப்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார்," என்றார் காயத்ரி ரகுமார்.

செல்வக்குமார் அண்ணாமலைக்காக வேலை பார்க்கிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "அப்படித்தான் கேள்விப்பட்டேன்.

செல்வக்குமார் போன்றவர்கள் சக்தி வாய்ந்த நபர்களாகச் செயல்படுகிறார்கள். அந்த நபர் என்ன சொன்னாலும் செய்வார்கள். கட்சியில் இந்த விவகாரத்தை நேரடியாகச் சொல்ல நேரம் கொடுக்கவில்லை.

அதற்கு முன்பே என்னை இடை நீக்கம் செய்துவிட்டார்கள். விளக்கம் சொல்லக்கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அண்ணாமலை எப்போதும் பிஸியாக இருப்பார்.  அவரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்வதற்கு முன்பாக என்னை இடை நீக்கம் செய்து விட்டார்கள்.

நான் செய்த ஒவ்வொரு விஷயமும் தவறாகவே கட்சித் தலைமையிடம் போய்ச் சேர்ந்தது. அது குறித்து விசாரணை நடந்ததே கிடையாது. அதைப் பற்றி விளக்கமும் வந்தது கிடையாது. நான் முட்டிமோதிதான் வரவேண்டியிருந்தது.

சூர்யா சிவா ஆபாசமாகப் பேசியிருக்கும்போது, நாங்கள் கொந்தளிப்பது இயல்புதான். அது என் உரிமை. ஆனால், அண்ணாமலையின் முடிவை நான் விமர்சிக்க முடியாது. ஆனால், அது வருத்தமளிக்கிறது.

"காசி நிகழ்ச்சிக்கு அழைப்பில்லை"

காசியில் நடக்கும் தமிழ்ச் சங்கமத்திற்கு எங்களையெல்லாம் அழைக்கவேயில்லை. நிறையப் பேர் பதிவுசெய்திருந்தார்கள். ஆனால், அவர்களையெல்லாம் அழைக்கவில்லை. அதைப் பற்றி மட்டும் சிறிய அளவில் பதிவிட்டேன். மற்றபடி கட்சிக்கு எதிராக எதையும் கூறவில்லை. அண்ணாமலை என்னிடம் பேசினார். இதுவரைக்கு உங்களுக்கு என்ன செய்யவில்லைன்னு புகார் சொல்கிறீர்கள் என்று கேட்டார். ஃபெஃப்சி சிவாவின் விவகாரத்தை சுட்டிக்காட்டினேன். என் பக்கத்தை நீங்கள் கேட்கவேயில்லை என்று சொன்னேன்.

நாம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்றால், சூர்யா சிவாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். என்னை விசாரிக்க நேரம் கொடுக்கவில்லை. அவரை விசாரிக்க நேரம் கொடுக்கிறார்கள். சூர்யா சிவாவை கண்டிப்பாக கைதுசெய்ய வேண்டும். இன்று டெய்சிக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்.

நான் பா.ஜ.கவில் கண்டிப்பாகத் தொடர்வேன். என்னிடம் கண்டிப்பாக விளக்கம் கேட்பார்கள். அப்போது முதல் நாளில் இருந்து என்ன நடந்தது என்பதைச் சொல்வேன்" என்றார் காயத்ரி ரகுராம்.

He Always wanted me out  என்று ட்விட்டரில் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டது யாரைப் பற்றி என்பதைச் சொல்ல காயத்ரி மறுத்துவிட்டார்.

அண்ணாமலை தன்னைக் குறிவைப்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறிவிட்டார். 

திருச்சி சூர்யா மீது என்ன சர்ச்சை?

தன் கட்சியின் சக நிர்வாகியிடம் தொலைபேசியில் பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு செயலர் சூர்யா சிவா ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த குரல் பதிவின் நம்பகத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

இந்நிலையில், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

காயத்ரி ரகுராமிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலராகச் செயல்பட்டுவருபவர் சூர்யா சிவா.

அதே கட்சியில் சிறுபான்மை பிரிவின் செயலராக இருப்பவர் டெய்சி சரண். இந்த இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் என்று கூறப்படும் ஒலிப்பதிவு ஒன்று இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

இந்த உரையாடலில், டெய்சி சரணிடமிருந்து குரல் பதிவு ஒன்று வெளியானதை அடுத்து அவரை அழைத்ததாகப் பேசுகிறார் சூர்யா சிவா. அதற்குப் பதிலளிக்கும் டெய்சி, தான் இப்போது நேரடியாகவே பேசுவதாகச் சொல்கிறார்.

இந்த உரையாடலில் சிவாவின் குரல் என்று கூறப்படும் குரலில் பேசுபவர் பல ஆபாசமான சொற்கள் மற்றும் வசைச்சொற்களை எதிர்முனையில் பேசும் டெய்சி சரண் என்று கூறப்படும் நபரிடம் பயன்படுத்தியுள்ளார்.

தமது ஓ.பி.சி அணியில் 68 சதவிகிதம் பேர் இருப்பதாகவும், தமது சாதிக்காரர்களை டெய்சி மீது ஏவி விடுவதாகவும், ஊருக்கு கிளம்ப முடியாது என்றும் மிரட்டும் தொணியில் சிவா என்று கூறப்படும் குரல் சொல்வதுடன், இந்த உரையாடலை பதிவு செய்து பத்திரிகையாளர்களிடம் கூடக் கொடுக்கலாம் என்கிறது.

வேறு ஒரு பாஜக நிர்வாகியுடன் டெய்சி சரணை இணைத்து ஆபாசமான கருத்துகளைத் தெரிவிப்பதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான சில சொற்களையும் அந்த நபர் கூறுவதைக் கேட்க முடிகிறது.

ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த சூர்யாவை எப்படி சிறுபான்மையினர் பிரிவில் எடுக்க முடியும் என்று கோபமாகக் கேட்கும் டெய்சி சரண் என்று கூறப்படும் குரல், சூர்யாவின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா கூறியவாறே அவதூறான ஆபாசச் சொற்களைப் பயன்படுத்தி விமர்சிக்கிறது.

ஒரு மாதத்துக்குள் சென்னையில் வாழ முடியாது என்றும், அண்ணாமலை, நரேந்திர மோதி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா என யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லிக் கொள்ளலாம் என்று கூறும் சூர்யாவின் குரல் எனக் கூறப்படும் குரல், தாம் திமுகவிலேயே ரவுடிசம் செய்துவிட்டு வந்ததாகக் கூறுகிறது.

''நீ அனுபவிப்ப... இதுவரைக்கும் என்னை தம்பியாதான பார்த்திருக்க.. இனிமே எதிரியா பார்ப்ப,'' என்று சூர்யா என்று கூறப்படும் குரல் சொன்னதற்கு ''நான் எப்ப உன்னை தம்பியா பார்த்தேன்,'' என டெய்சி என்று கூறப்படும் குரல் எதிர்க்கேள்வி கேட்டது.

இந்த உரையாடலை முன்வைத்து காலை முதல் சமூக வலைதளங்களில் பா.ஜ.க. மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான கனகசபாபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை.

மேலும், அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து இந்த மோதல் வெடித்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

காயத்ரி ரகுராம் இடைநீக்கம்

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு பா.ஜ.கவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் கட்சி மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.

தன்னைக் கேலி செய்தோ, விமர்சித்தோ எழுதப்படும் ட்வீட்களுக்கு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான சிலர் விருப்பக் குறி இட்டதையடுத்து இந்த மோதல் ஆரம்பித்தது.

மேலும், "கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் பாஜக உருவானது போலவும் சித்தரிக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது போலவும் பேசுகின்றனர். ஏன் இப்படி தவறான செய்தி அனுமதிக்கப்படுகிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று காலையில் டெய்சிக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பிறகு, அவர்கட்சியிலிருந்து இடை நீக்கம்செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்துபேசுவதற்கு சூர்யா சிவாவிடம் பல முறை முயற்சித்தும், அது பலனளிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: