You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? - அவர் கூறும் விளக்கம்
நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். 'தமிழக வெற்றி கழகம்' என தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக விஜய் செயல்படுகிறார். இது குறித்து இன்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஏன் அரசியலில் நுழைந்தேன் என்பது குறித்து விவரித்துள்ளார். எந்த தேர்தலில் போட்டி, சினிமா பயணத்தின் நிலை என்ன என்பது குறித்தெல்லாம் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், "விஜய் மக்கள் இயக்கம் தன்னால் முயன்ற வரையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தாலும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்ததங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பால் மட்டும் முடியாது, அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த கலாசாரம் ஒருபுறம் என்றால், நமது மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாசாரம் மறுபுறம். இருபுறமும் நம் ஒற்றுமையாக்கும் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும் அன்பும் பெற்ற மக்கள் சக்தியால் தான் சாத்தயப்படுத்த முடியும். இதனால் தமிழ் சமுதாயத்துக்கு என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால விருப்பமாக இருந்தது.
அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலாமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது," என தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, நாடளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து அரசியல் பயணம் துவங்கும். இடைப்பட்ட காலத்தில் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் துவங்கும். அதற்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே கட்சி பதிவுக்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது," எனக் கூறியுள்ளார்.
"2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள விஜய், அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல. அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. எனவே ஏற்கனவே நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொன்று திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்," என விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே தனது மக்கள் இயக்கம் சார்பிலான பணிகளில் தீவிர ஈடுபாடு காட்டி வந்தார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பரிசுகளை வழங்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார்.
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் , தற்போது நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)