You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இயக்குநராக 'மாஸ்' காட்டினாரா தனுஷ்? ராயன் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன?
நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ராயன் படம் இன்று (ஜூலை 26-ஆம் தேதி) அன்று திரையரங்குகளில் வெளியானது. தனுஷின் 50-ஆவது திரைப்படமான இந்த படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
'ஆணி அடித்தது போல் மனதில் நிலையாக இடம் பெற்றுவிட்டது ராயன் படம்' என்று கூறுகிறார்கள் இன்று இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள். செல்வராகவன் மற்றும் வெற்றிமாறனின் சாயல் இந்த படத்தில் இருந்தாலும் கூட நடிப்பு, இயக்கம், இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
"படம் அவ்வளவு எங்கேஜிங்கா இருந்தது. படம் முழுக்க ட்விஸ்ட் தான்... பாடலில் கூட ட்விஸ்ட் இருக்கு. அடங்காத அசுரன் பாடலில் எல்லாம் ட்விஸ்ட். கண்டிப்பா பாருங்க... யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இப்படியெல்லாம் நடக்குமான்னு... வேற லெவல் படம்," என்று ஒரு ரசிகர் கூறினார்.
"உண்மையா சொல்றேன். படம் அவ்வளவு நல்லா இருந்துச்சு. கண்ணீர் வந்துருச்சு எனக்கு. அவ்வளவு செண்டிமெண்ட். என்னால சொல்லவே முடியல. நேர்ல போய் படத்த பாருங்க. அப்படி ஒரு சம்பவம். அண்ணன், தம்பி மூனு பேரும் இறங்குறாங்க.. தியேட்டரே அலறுது. க்ளைமேக்ஸும் பக்கா.. கண்ணீர் வந்துருச்சு," என்று பிபிசி-யிடம் பேசிய மற்றொரு ரசிகர் கூறினார்.
"படம் சூப்பரா இருந்துச்சு. தனுஷ் ஆக்டிங், டேரக்ஷன்லாம் சொல்லவே தேவையில்ல. அப்டி இருந்துச்சு. ஒரு பத்து படம் பண்ணவரு மாறி அவ்வளவு மைன்யூட்டா பண்ணிருக்காரு. எல்லாரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்," என்று தனுஷ் இந்த படத்தை இயக்கிய விதம் பற்றி குறிப்பிட்டிருந்தார் மற்றொரு ரசிகர்.
"புதுப்பேட்டை, வடசென்னை படத்தின் சாயல் கண்டிப்பா இருக்கு. ஸ்டோரி வந்து ஒரு அண்டர் டாக் ஸ்டோரி தான். அசுரன் படம் மாதிரி ஒரு சம்பவமும் இருக்கு. எல்லாரும் சிறப்பா நடிச்சுருக்காங்க. புதுவிதமான ட்ரீட்மெண்ட்டா இருக்கு. இளைஞர்களுக்கான படம் தான். ஆனால் அதிகம் எமோஷன்ஸ் இருப்பதால் குடும்பங்களாகவும் வந்து பார்க்கலாம். நிறைய சண்டை காட்சிகள் இருப்பதால் குழந்தைகளால் பார்க்க முடியாது," என்று மற்றொரு ரசிகர் கூறினார்.
நிறைய சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க முடியாது என்று கூறும் அவர்கள் தனுஷை நம்பி இந்த படத்தை பார்க்க செல்லலாம் என்றும் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)