You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் தமிழ் எம்.பி. திடீர் கைது - துப்பாக்கியை காட்டி மிரட்டியதா போலீஸ்?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த போலீஸ் விசேட குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், போலீஸாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் போலீஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
பரீட்சை மண்டபம் ஒன்றிற்கு அருகில் மக்கள் சந்திப்பொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நடத்த முயற்சித்திருந்தார். பரீட்சை நிலையத்திற்கு அருகில் மக்கள் சந்திப்பை நடத்துகின்றமை குறித்து, பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த போலீஸ் உத்தியோகத்தர்கள், போலீஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகள், விசாரணைகளை நடத்த முயற்சித்துள்ளனர். இதன்போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் போலீஸ் அடையாள அட்டையை கோரியுள்ளார். எனினும், போலீஸார் அதற்கு சாதகமான பதிலை வழங்காத நிலையில், போலிஸாருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, பரீட்சை நிலைய பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதாகாரிகள் இந்த விடயத்தில் தலையீடு செய்தனர். இதன்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
தன்னை மரியாதையுடன் பேசுமாறு, போலீஸ் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிய போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் போலீஸ் அதிகாரி என்பதை உறுதிப்படுத்துமாறு கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தார்.
தன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கோரிய போதும், அதனை போலீஸார் நிராகரித்திருந்தனர். இந்த நிலையிலேயே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருந்தார்.
போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை ஒன்று போலீஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வௌிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதித்திருந்தது. அத்துடன், சம்பவம் தொடர்பில் போலீஸாருக்கு வாக்குமூலம் ஒன்றை உடனடியாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பெண் ஒருவரும் கைது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி அமைப்பாளரான ஜெகதீஸ்வரி சத்குணதேவி நேற்று முன்தினம் போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பதில்
நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை குறித்து சபாநாயகரிடம் அடுத்த அமர்வின் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், சம்பவம் குறித்து போலீஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.
தன்னிடம் விடயங்களை ஆராய்வதற்கு முன்னர், போலீஸார் ஊடகங்களுக்கு அவர்களின் கருத்துகளை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அடையாள அட்டையை காட்டவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டத்திற்கு வந்த புலனாய்வு உத்தியோகத்தர்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டைகளை வழங்கியதாக தெரிவித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
“துப்பாக்கி சுட்டிக்காட்டப்பட்டது என்பது முற்றிலும் மறுக்கப்படுகிறது. அங்கு சென்ற அரசு அதிகாரிகள் அடையாள அட்டையை காட்டியுள்ளனர் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் போலீஸாருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான அதிகாரியிடம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிக்கை கோரியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்